/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
திருமூர்த்தி அணையை அழகுபடுத்த பூங்கா திட்டம் என்னாச்சு? மரக்கன்றுகள் நடவு செய்ய வலியுறுத்தல்
/
திருமூர்த்தி அணையை அழகுபடுத்த பூங்கா திட்டம் என்னாச்சு? மரக்கன்றுகள் நடவு செய்ய வலியுறுத்தல்
திருமூர்த்தி அணையை அழகுபடுத்த பூங்கா திட்டம் என்னாச்சு? மரக்கன்றுகள் நடவு செய்ய வலியுறுத்தல்
திருமூர்த்தி அணையை அழகுபடுத்த பூங்கா திட்டம் என்னாச்சு? மரக்கன்றுகள் நடவு செய்ய வலியுறுத்தல்
ADDED : செப் 23, 2025 10:29 PM

உடுமலை; திருமூர்த்தி அணை கரையில், பூங்கா அமைக்கும் திட்டம் நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்டுள்ள நிலையில், பொலிவிழந்து காணப்படும் கரையில், மரக்கன்றுகள் மட்டுமாவது நடவு செய்து பராமரிக்க பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உடுமலை அருகேயுள்ள பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமாக திருமூர்த்தி மலை உள்ளது. மலை அடிவாரத்தில், பி.ஏ.பி., பாசன திட்டத்தில், திருமூர்த்தி அணை கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.
பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் சுற்றுலா பயணியர் பொழுதுபோக்க, அப்பகுதியில் பூங்கா அமைக்க வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை விடப்பட்டு வருகிறது. அணை கரை, 2,679 மீ., நீளத்துக்கு அமைந்துள்ளது.
தற்போது கரையின் ஒரு பகுதியில், சீமை கருவேல மரங்களும், எஞ்சிய இடங்கள், பொலிவிழந்து வெறும் கரையாக காணப்படுகிறது. சில ஆண்டுகளுக்கு முன், பூங்கா அமைக்க, பொதுப்பணித்துறை சார்பில் கருத்துரு தயாரித்து, அரசின் கவனத்துக்கு அனுப்பினர்.
ரூ.4.20 கோடி மதிப்பீட்டில் கரையில் பூங்கா அமைத்து, அதில், குழந்தைகளுக்கான விளையாட்டு சாதனங்கள் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. அகற்ற வேண்டிய மரங்கள் கணக்கிடப்பட்டு, வனத்துறை அனுமதியும் பெறப்பட்டது.
நிதிஒதுக்கீடு செய்யவில்லை ஆனால், இதுவரை நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. தற்போது, அணைக்கரையில், ஒரு பகுதி மரங்கள் கூட இல்லாமல், பொலிவிழந்து காணப்படுகிறது. அங்கு புல்தரை கூட பராமரிக்கப்படாமல், மண் சரிந்து வருகிறது.
சுற்றுலாத்துறை, பொதுப்பணித்துறை சார்பில், பல முறை ஆய்வு நடத்தப்பட்டும் திருமூர்த்தி அணை பூங்கா அமைக்கும் திட்டம் இழுபறியாகவே உள்ளது.
இம்மாதத்தில், திருப்பூர் கலெக்டர் தலைமையில் நடந்த, மாவட்ட சுற்றுலா மேம்பாட்டுக்குழு ஆய்வுக்கூட்டத்தில், இத்திட்டத்தை செயல்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பொலிவிழந்து காணப்படும் அணை கரையில், மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க வேண்டும். பிளாஸ்டிக் கழிவுகள் அணை கரையில் குவிவதை தடுக்க, முழுமையாக கம்பி வேலியும் அமைக்க வேண்டும். காண்டூர் கால்வாயில் இருந்து குறிப்பிட்ட துாரத்துக்கு அதிகளவில் காணப்படும் சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
அவர்கள் கூறியதாவது: திருமூர்த்தி அணை பகுதியில், சுற்றுலாவை மேம்படுத்த, பூங்கா அவசியமாகும். அரசு நிதி ஒதுக்கீடு தாமதித்து வரும் நிலையில், முதற்கட்டமாக திறந்தவெளியாக பொலிவிழந்து காணப்படும் பகுதியில், மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கலாம்.
இதனால், மண் சரிவு தடுக்கப்படுவதுடன், அணை கரையும் பசுமைக்கு மாறி விடும். இது குறித்து திருப்பூர் மாவட்ட நிர்வாகத்துக்கும் மனு அனுப்பியுள்ளோம். இவ்வாறு, தெரிவித்தனர்.