/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
புதிதாக புறக்காவல் நிலையங்கள் அமைக்கும் திட்டம் என்னாச்சு? அதிக கிராமங்களால் குற்றத்தடுப்பில் தொய்வு
/
புதிதாக புறக்காவல் நிலையங்கள் அமைக்கும் திட்டம் என்னாச்சு? அதிக கிராமங்களால் குற்றத்தடுப்பில் தொய்வு
புதிதாக புறக்காவல் நிலையங்கள் அமைக்கும் திட்டம் என்னாச்சு? அதிக கிராமங்களால் குற்றத்தடுப்பில் தொய்வு
புதிதாக புறக்காவல் நிலையங்கள் அமைக்கும் திட்டம் என்னாச்சு? அதிக கிராமங்களால் குற்றத்தடுப்பில் தொய்வு
ADDED : மார் 18, 2025 09:44 PM

உடுமலை; தளி மற்றும் குடிமங்கலம் போலீஸ் கட்டுப்பாட்டு பகுதிகளை பிரித்து, புறக்காவல் நிலையங்கள் அமைக்கும் திட்டம், பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால், கிராமங்களில், குற்றங்கள் அதிகரித்து வருவதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
உடுமலை போலீஸ் உட்கோட்டத்திற்குட்பட்ட குடிமங்கலம் போலீஸ் கட்டுப்பாட்டில், முன்பு, 18 ஊராட்சிக்குட்பட்ட 40 கிராமங்கள் இருந்தன.
திருப்பூர் மாவட்டம் உருவாக்கப்பட்டதும், கோவை மாவட்டம் நெகமம் போலீஸ் கட்டுப்பாட்டில் இருந்த, திருப்பூர் மாவட்ட கிராமங்கள் பிரிக்கப்பட்டு, குடிமங்கலம் போலீசில் சேர்க்கப்பட்டன.
தற்போது, குடிமங்கலம் போலீஸ் கட்டுப்பாட்டில், 23 ஊராட்சிகளுக்குட்பட்ட 96 கிராமங்கள் உள்ளன.
அதிகளவு கிராமங்கள் மற்றும் எல்லை காரணமாக, குடிமங்கலம் போலீசாரின், குற்றத்தடுப்பு பணிகளில், தொய்வு ஏற்பட்டுள்ளது.
பாதுகாப்பு கேள்விக்குறி
நீர்நிலை கரைகள், பஸ் ஸ்டாப் நிழற்கூரைகள், பொது இடங்கள் அனைத்தும் குடிமகன்களின் 'பார்' ஆக மாறி, மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.
இப்பிரச்னைகளுக்கு தீர்வாக, குடிமங்கலம் போலீஸ் கட்டுப்பாட்டு கிராமங்களை பிரித்து, புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும் என, கிராம மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையம் அமைக்க, சில ஆண்டுகளுக்கு முன்பு, போலீசாரால், இடத்தேர்வு செய்யப்பட்டது. பெதப்பம்பட்டி நால்ரோட்டில், புறக்காவல் நிலையம் அமைத்து, மேற்குப்பகுதி கிராமங்களை அந்நிலைய கட்டுப்பாட்டில் கொண்டு வர திட்டமிடப்பட்டது. ஆனால், பல்வேறு காரணங்களால், இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
தளிக்கும் தேவை
தளி போலீஸ் கட்டுப்பாட்டிலும், கோவை மாவட்டம் கோமங்கலம் போலீஸ் கட்டுப்பாட்டிலிருந்த கிராமங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டன. தற்போது, 45க்கும் அதிகமான கிராமங்கள் தளி போலீஸ் கட்டுப்பாட்டில் உள்ளன.
இதில், ஆனைமலை புலிகள் காப்பகம், உடுமலை வனப்பகுதியிலுள்ள ஆறு மலைவாழ் கிராமங்களும் உள்ளடங்கும். போலீஸ் ஸ்டேஷனிலிருந்து வெகு தொலைவு தள்ளி அமைந்துள்ள கிராமங்களில், குற்றத்தடுப்பு பணிகளை மேற்கொள்ள தேவனுார்புதுாரில், புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடப்பட்டு வருகிறது.
ஆண்டியூர் பிரிவில், அமைக்கப்பட்ட நிரந்தர செக்போஸ்ட் பணிக்கும், போலீசார் நியமிக்கப்படுவதில்லை.
தொலைதுார கிராமங்களுக்கு போலீசார் இரவு ரோந்துசெல்லாததும், திருட்டு சம்பவங்கள் அதிகரிக்க காரணமாக அமைந்துள்ளன.
எனவே, இரு போலீஸ் ஸ்டேஷன்களின்எல்லைகளை மறு வரையறை செய்து, புறக்காவல் நிலையங்கள் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை தீவிரமடைந்துள்ளது. மேலும், அனைத்து கிராமங்களிலும், குளத்துக்கரை, பஸ் ஸ்டாப் நிழற்கூரை என பொது இடங்களும் திறந்தவெளி 'பார்' ஆக மாற்றப்பட்டுள்ளன.
விளைநிலங்களில், கேபிள் வயர்கள் திருடுவதும் அதிகரித்துள்ளது. இத்தகைய குற்றங்களை கூட கட்டுப்படுத்த முடியாத நிலை தொடர்கிறது.