ADDED : டிச 21, 2024 11:24 PM
திருப்பூர் நகைச்சுவை முற்றம், ஸ்ரீவிவேகானந்த சேவாலயம் சார்பில் நடந்த 'சிரிப்போம்... சிந்திப்போம்' நிகழ்ச்சியில், பாரதியார் குறித்து காமராஜர் மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன், பகிர்ந்த கருத்துகள்:
யாகம், யோகம் ஆகிய இரண்டு சொற்களுக்கும் ஆன்மிகம் சார்ந்த அறிஞர்கள் பல விளக்கங்கள் வழங்கி இருக்கலாம். ஆனால், இவ்விரண்டு சொற்களுக்கும் மகாகவி பாரதியார் வழங்கிய விளக்கம் போல் வேறு யாரும் வழங்கவில்லை; 'ஊருக்கு உழைத்திடல் யோகம்' - பிறர் நலன் ஓங்கிடுமாறு தன்னை வருத்துதல் யாகம்' என்கிறார்.
யோகம் என்பது கண்களை மூடி தியான நிலையில் அமர்ந்திருப்பது என்றுதான் ஆன்மிகம் மூலம் அறிந்து கொள்கிறோம்; 'ஊருக்கு உழைப்பதே யோகம்' என்று பாரதி கூறுகிறார். குடும்பத்துக்காக மட்டும் உழைக்காமல், 'நீ சார்ந்த சமூகத்தில், சக மனிதருக்கு உழைப்பை வழங்குவதைவிட யோகம் உலகில் வேறு இல்லை' என்று தெளிவாக விளக்கியிருக்கிறார்.
தீ மூட்டி, நாம் வளர்ப்பது தான் யாகம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். மகாபாரதத்தில், 'யாகம்' குறித்து அழகாக கூறப்பட்டுள்ளது. ஒரு கிணறு மனிதர்களுக்கு வேண்டிய நீரைத் தருகிறது; விவசாயம் செய்கிறோம். உணவு தானியம் விளைவித்து பெறுகிறோம். 'கிணறு மிகவும் நமக்கு முக்கியமானது; 100 கிணறுகள் ஒரு ஏரிக்கு சமம். 100 ஏரிகள் ஒரு யோகத்துக்கு சமம்' என்று கூறப்பட்டுள்ளது. ஒரு ஏரியால் ஊருக்கு பல நன்மைகள் கிடைக்கின்றன. 100 ஏரிகள் ததும்பி வழிந்தால் எந்த செழிப்பும், வளமும் காணக்கிடைக்குமோ, அந்த அளவு, யோகம் மூலமாகவும், யாகம் மூலமாகவும் வாழ்வை வளப்படுத்த முடியும் என முன்னோர்கள், ஆன்மரீதியாக தத்துவார்த்த விளக்கம் அளித்துள்ளனர்.
எது பேரறிவு?
'பிறர் நலன் ஓங்கிடுமாறு தன்னை வருத்துதல் யாகம்'; அறிவு என்பது சாதாரணமானது; மனிதன் படிப்பின் மூலம் தேடிக்கொள்வது. 'வாழ் அறிவு' என்பது மெய்ஞ்ஞானத்தை உன்னுள்ளே தேடித்தரும் அறிவு; அதுவே பேரறிவு. அதை இம்மாநிலம் பயனுற வாழ வைக்க வல்லமை தாராயோ என்று, பொதுநலச் சிறகு பூட்டி பறந்து திரிந்தவன் தான் பாரதி.
இவ்வாறு, அவர் பேசினார்.
யோகம் மூலமாகவும், யாகம் மூலமாகவும் வாழ்வை வளப்படுத்த முடியும் என முன்னோர்கள், ஆன்மரீதியாக தத்துவார்த்த விளக்கம் அளித்துள்ளனர்.