/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அறுவடைக்கு தயாராகும் கதிர்கள் சேதமடைந்தால் என்ன தான் செய்வது? காட்டுப்பன்றியால் கலங்கும் மக்காச்சோள விவசாயிகள்
/
அறுவடைக்கு தயாராகும் கதிர்கள் சேதமடைந்தால் என்ன தான் செய்வது? காட்டுப்பன்றியால் கலங்கும் மக்காச்சோள விவசாயிகள்
அறுவடைக்கு தயாராகும் கதிர்கள் சேதமடைந்தால் என்ன தான் செய்வது? காட்டுப்பன்றியால் கலங்கும் மக்காச்சோள விவசாயிகள்
அறுவடைக்கு தயாராகும் கதிர்கள் சேதமடைந்தால் என்ன தான் செய்வது? காட்டுப்பன்றியால் கலங்கும் மக்காச்சோள விவசாயிகள்
ADDED : அக் 28, 2024 12:27 AM

உடுமலை : அறுவடைக்கு தயாராகி வரும் மக்காச்சோள கதிர்களை குறிவைத்து, காட்டுப்பன்றிகள் கூட்டம், முகாமிட்டு, பயிர்களை சேதப்படுத்தி வருவதால், விவசாயிகள் செய்வதறியாது திகைத்து வருகின்றனர்; வனத்துறை நடவடிக்கை எடுக்காவிட்டால், போராட்டத்தில் ஈடுபடவும் விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர்.
உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் வட்டாரங்களில், பி.ஏ.பி., இரண்டாம் மண்டல பாசனத்துக்கு பிரதானமாக, மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
வழக்கத்தை விட, பருவமழையை ஆதாரமாகக்கொண்டு, மானாவாரியாகவும், மக்காச்சோளம் விதைப்பு செய்யப்பட்டுள்ளது.
இச்சாகுபடியில், கடந்த சில ஆண்டுகளாக, படைப்புழு தாக்குதலால், சாகுபடிக்கு கூடுதலாக செலவிடும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். தற்போது, பெரும்பாலான பகுதிகளில், மக்காச்சோள பயிர்களில் பூ விட்டு, கதிர்கள் பிடித்து வருகிறது.
இந்நிலையில், அனைத்து பகுதிகளிலும் மக்காச்சோள விளைநிலங்கள் உள்ள இடங்களில், காட்டுப்பன்றிகள் கூட்டமாக முகாமிட்டு, சேதம் ஏற்படுத்த துவங்கியுள்ளன. இதனால், விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
விவசாயிகள் கூறியதாவது: ஆனைமலை புலிகள் காப்பக வனப்பகுதியிலிருந்து வெளியேறிய காட்டுப்பன்றிகள், தற்போது சமவெளிப்பகுதியில் பல்கி பெருகி விட்டன.
வனப்பகுதியிலிருந்து, 25 கி.மீ., க்கும் அதிகமான தொலைவிலுள்ள பகுதிகளிலும், நுாற்றுக்கணக்கான காட்டுப்பன்றிகள் வலம் வருகின்றன.
குறிப்பாக, மக்காச்சோளம் சாகுபடி செய்யும் பகுதிகளில், அவை முகாமிட்டு சேதம் ஏற்படுத்துவது தொடர்கதையாகியுள்ளது. அறுவடைக்கு தயாராகி வரும் கதிர்களை உண்ணும் வகையில், பயிர்களை கீழே சாய்த்து விடுகின்றன.
மேலும், தாறுமாறாக விளைநிலங்களில், கூட்டமாக காட்டுப்பன்றிகள் ஓடுவதால் பயிர்கள் வேரோடு சாய்ந்து விடுகின்றன. மக்காச்சோள சாகுபடியில் ஏக்கருக்கு, 20 ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமாக செலவிட்டுள்ள நிலையில், காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த முடியாமல் போராடி வருகிறோம்.
தற்காலிக தீர்வாக, வரப்புகளில், வண்ண சேலை கட்டி இரவு நேரங்களில், பட்டாசு வெடிக்கிறோம். இருப்பினும் பிரச்னை தீரவில்லை.
சில ஆண்டுகளுக்கு முன், காட்டுப்பன்றிகள் விளைநிலங்களுக்கும் வராமல் இருக்க, ரசாயன மருந்து வனத்துறையால் பரிந்துரைக்கப்பட்டது.
இந்த மருந்தை தண்ணீரில் கலந்து கயிற்றை ஊற வைத்து, வரப்புகளில் கட்ட சொன்னார்கள். மருந்தில் இருந்து எழும் துர்நாற்றத்தால், காட்டுப்பன்றிகள் அப்பகுதிக்கு வராது என தெரிவிக்கப்பட்டது.
இத்தகைய பரிந்துரைகளை கூட வனத்துறையினர் தற்போது வழங்குவதில்லை. ஒவ்வொரு சீசனிலும், நுாற்றுக்கணக்கான ஏக்கரில், மக்காச்சோள சாகுபடி பாதித்தும் வனத்துறையினர் அலட்சியமாக உள்ளனர்.
இந்தாண்டும் அத்துறையினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதை கண்டித்து விரைவில் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்.
இவ்வாறு, தெரிவித்தனர்.
மனிதர்கள் மீது தாக்குதல்
மழை நீர் ஓடைகள் மற்றும் பள்ளங்களில் தங்கி இரவு நேரங்களில், வலம் வரும் காட்டுப்பன்றிகள் மனிதர்களையும் தாக்கி வருகிறது. இதனால் இரவு நேரங்களில், விவசாயிகள் விளைநிலங்களுக்கு செல்லவே அச்சப்படும் நிலை உள்ளது.
பல ஆண்டுகளாக நீடிக்கும் பிரச்னைக்கு, திருப்பூர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்காவிட்டால், பல்வேறு பாதிப்புகள் தொடர்கதையாகி விடும்.