/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பயிர் கடன் கேட்டால் நகை கடன் கூட்டுறவு சங்கங்கள் மீது பாய்ச்சல்
/
பயிர் கடன் கேட்டால் நகை கடன் கூட்டுறவு சங்கங்கள் மீது பாய்ச்சல்
பயிர் கடன் கேட்டால் நகை கடன் கூட்டுறவு சங்கங்கள் மீது பாய்ச்சல்
பயிர் கடன் கேட்டால் நகை கடன் கூட்டுறவு சங்கங்கள் மீது பாய்ச்சல்
ADDED : ஜூலை 21, 2025 04:36 AM

பல்லடம் : ''விவசாயிகள், பயிர் கடன் கேட்டால், நகைக்கடன் வாங்கிக் கொள்ள, கூட்டுறவு சங்கங்கள் நிர்பந்திக்கின்றன,'' என, உழவர் உழைப்பாளர் கட்சியின் மாநில தலைவர் செல்லமுத்து குற்றஞ்சாட்டினார்.
திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் நேற்று அவர் கூறியதாவது:
தர்பூசணி, மா, பலா, பருத்தி பயிரிட்ட விவசாயிகளுக்கு, நடப்பு ஆண்டு மோசமானதாக அமைந்தது. விளைச்சல் குறைபாடு, பூச்சி நோய் தாக்குதல் காரணமாக விவசாயிகள் பாதிக்கப்படவில்லை. அரசிடம் சரியான கொள்முதல் கொள்கை இல்லாததால் பாதிக்கப்பட்டனர்.
முதலீடு மட்டுமன்றி, உடல் உழைப்பையும் செலவழித்த விவசாயிகளுக்கு ஏற்பட்டு வரும் இந்த அவலம், இன்று வரை தொடர்கிறது.
பயிர் கடன் கேட்டால், நகை கடன் வாங்கிக் கொள்ள, விவசாயிகள் நிர்பந்திக்கப்படுகின்றனர்.
விவசாயிகளின் நலனுக்காக துவங்கப்பட்ட கூட்டுறவு சங்கங்கள், இன்று, விவசாயிகளுக்கே பயனில்லாமல் உள்ளது.
கடந்த 2023ல், மஹாராஷ்டிராவில், வெங்காயம் கிலோ 2 ரூபாயாக குறைந்த போது, அம்மாநில அரசே அவற்றை கொள்முதல் செய்து விவசாயிகளை காப்பாற்றியது. தமிழகத்தை தவிர்த்து, குஜராத், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களும் இதை பின்பற்றி வருகின்றன.
உற்பத்தி செய்த விளை பொருட்கள் சாலையில் வீசப்பட்டால், அது தனி நபரின் வீழ்ச்சி அல்ல; அரசு நிர்வாகத்தின் தோல்வியே ஆகும்.
இப்படிப்பட்ட சூழலில், கடனை செலுத்துமாறு விவசாயிகளை நிர்பந்தித்தால், நாராயணசாமி நாயுடுவின் காலத்தை போன்ற நிலை உருவாகும். அதிகாரிகளின் நெருக்கடிக்கு விவசாயிகள் அச்சப்பட வேண்டாம்.
இவ்வாறு அவர் கூறினார்.