/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தடகள மைதான திறப்பு விழா எப்போது?
/
தடகள மைதான திறப்பு விழா எப்போது?
ADDED : மார் 16, 2025 12:10 AM

திருப்பூர்: திருப்பூர் மாவட்ட தடகள மைதானத்தில் அனைத்து பணிகளும் முடிந்த நிலையில், எப்போது திறப்பு விழா நடக்கும் என்ற எதிர்பார்ப்பு விளையாட்டு ஆர்வலர்கள் மத்தியில் கூடியுள்ளது.
திருப்பூர், காலேஜ் ரோடு, சிக்கண்ணா கல்லுாரி பின்புறம், மாவட்ட தடகள மைதானம் அமைக்கும் பணி, 2022ல் துவங்கியது. நிதி ஒதுக்கீடு தாமதம் காரணமாக ஜவ்வாக இழுத்து வந்த பின், 2023 ஜனவரிக்கு பின் சுறுசுறுப்பாகியது.
கடந்த, 2024 டிச., மாதம் கட்டுமான பணி முழுமையாக முடிக்கப்பட்டு, கேலரி, வீரர், வீராங்கனைகள் தயாராகும் அறை, ஓய்வறை, கழிப்பிடம் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டது. 100, 200 மற்றும், 400 மீ., ஓட்டத்துக்கு ஏற்ற வகையில் தனித்தனியேஓடுதளம் அளவீடுகள் செய்யப்பட்டுள்ளது.
மண் கொட்டி சமப்படுத்தப்பட்டு போட்டிகளுக்கு தயார்படுத்தப்பட்டுள்ளது.
விளையாட்டு மேம்பாட்டு ஆணைய நிதி, ஒன்பது கோடி ரூபாய் செலவில் தடகள மைதானம் உருவாக்கப்பட்டு, திறப்பு விழா இன்னமும் முடிவு செய்யாததால், மைதானம் பயன்பாட்டுக்கு வராமல் உள்ளது.
விரைவில் பள்ளிகளில் இறுதியாண்டு தேர்வுகள் முடிந்து, கோடை விடுமுறை விடப்பட உள்ளது. அதற்கு முன்பாக மாவட்ட தடகள மைதானத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தடகள பயிற்சி பெறும் பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர், ஆர்வமுள்ள தடகள வீரர், வீராங்கனைகளுக்கு மாவட்ட விளையாட்டுத்துறை மூலம் தீவிர பயிற்சி வழங்கினால், சிறந்த வீரர், வீராங்கனைகளை உருவாக்கிட முடியும்.
வரும் கல்வியாண்டில் தடகள போட்டிகளை நடத்தவும் ஏதுவாக இருக்கும்.