அவிநாசியில் குடிநீர் வினியோகம் சிக்கல் நிரந்தர கமிஷனர் நியமிப்பது எப்போது?
அவிநாசியில் குடிநீர் வினியோகம் சிக்கல் நிரந்தர கமிஷனர் நியமிப்பது எப்போது?
ADDED : செப் 03, 2026 06:41 PM
அவிநாசி: ‘அவிநாசி நகராட்சிக்கு நிரந்தர கமிஷனரை நியமிக்க வேண்டும்; குடிநீர் வினியோக பராமரிப்பு பொருட்களை உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும்,’ என்று கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அவிநாசி பேரூராட்சி கடந்த ஆண்டு மார்ச் மாதம் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. அதன்பின் கமிஷனர்கள் நியமிக்கப்பட்டாலும், பணியிட மாற்றம் காரணமாக அந்தப் பதவி மீண்டும் காலியானது. தற்போது திருமுருகன் பூண்டி நகராட்சி கமிஷனர் பாலமுருகன், கடந்த ஒரு மாதமாக பொறுப்பு கமிஷனராக பணியாற்றி வருகிறார். நிரந்தர கமிஷனர் இல்லாததால் வளர்ச்சித் திட்டப் பணிகள், புதிய கட்டடங்களுக்கு அனுமதி, வரி விதிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கவுன்சிலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
நகராட்சியின் 18 வார்டுகளில் குடிநீர் மற்றும் உப்பு தண்ணீர் வினியோக குழாய்களை பராமரிப்பதற்கான குழாய் உள்ளிட்ட பொருட்கள் வாங்கும் ஒப்பந்தம் காலாவதியாகி உள்ளது. புதிய ஒப்பந்தம் மேற்கொள்ளப்படாததால் குழாய்களில் ஏற்படும் உடைப்பு, கசிவுகளை உடனடியாக சரி செய்ய முடியாத நிலை உள்ளது.
இது குறித்து கவுன்சிலர் திருமுருகநாதன் கூறியதாவது:
அவிநாசி நகராட்சிக்கு நிரந்தர கமிஷனர் இல்லாததால் நகராட்சியின் அனைத்து பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளன. குடிநீர் பராமரிப்பு பொருட்களை வாங்க புதிய டெண்டர் அறிவித்து நடைமுறைகளை முடிக்க வேண்டும். அதுவரை குழாய்களில் ஏற்படும் பழுதால் குடிநீர் வினியோகம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. தற்போது கடும் வெயில் காரணமாக நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ள நிலையில், குடிநீர் வினியோகமும் குறைந்துள்ளது. எனவே, போர்க்கால அடிப்படையில் பராமரிப்பு பொருட்களை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுப்பதுடன், அவிநாசி நகராட்சிக்கு உடனடியாக நிரந்தர கமிஷனரை நியமிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
