/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கோழி நோய் ஆராய்ச்சி மையம் செயல்பாடு எப்போது?
/
கோழி நோய் ஆராய்ச்சி மையம் செயல்பாடு எப்போது?
ADDED : ஆக 16, 2025 11:42 PM

பல்லடம்; பல்லடம் தெற்கு ஒன்றிய பா.ஜ., சார்பில், மாவட்ட நிர்வாகத்துக்கு அனுப்பிய கோரிக்கை மனு:
பல்லடம் ஒன்றியம், பணிக்கம்பட்டி ஊராட்சி, சின்னியகவுண்டம்பாளையம் கிராமத்தில், கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன், கோழி இன நோய் ஆராய்ச்சி மையம், 8 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு, திறப்பு விழாவும் செய்யப்பட்டது. ஆனால், தற்போது வரை இந்த ஆராய்ச்சி மையம் முழுமையான செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படவில்லை. இது குறித்து, தமிழக அரசின் கவனத்துக்கு பலமுறை கொண்டு சென்றும்கூட, இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
ஐந்து ஆண்டுகளாக, மக்களின் வரிப்பணம், 8 கோடி ரூபாய் முடங்கிக் கிடக்கிறது. சில மாதங்களுக்கு முன், இந்த ஆராய்ச்சி மையத்தை ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் சாமிநாதன், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். ஆனால், அதன் பின்னரும் கூட நடவடிக்கை இல்லை. இந்தியாவில், புனேவுக்கு அடுத்ததாக, பல்லடத்தில் உள்ள இந்த ஆராய்ச்சி மையம்தான் இரண்டாவதாக உள்ளது.
பல்லடம் சுற்றுவட்டார பகுதியில் கறிக்கோழி உற்பத்தி தொழில் பிரதானமாக உள்ளதால், இந்த ஆராய்ச்சி மையம் முழு பயன்பாட்டுக்கு வரும்போது மிகவும் பயனளிப்பதாக இருக்கும். கோழி உள்ளிட்ட பறவைகளுக்கு ஏற்படும் நோய்கள் குறித்த ஆய்வு மட்டுமின்றி, தீவனங்கள், தண்ணீர் பகுப்பாய்வு இங்கு மேற்கொள்ள வசதியாக, அனைத்து தொழில்நுட்பங்களும் உள்ளன. எனவே, ஆராய்ச்சி மையத்தை, முழு பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.