ADDED : செப் 13, 2026 05:22 PM
குடிநீர் திட்டங்களில் நிலவும் பிரச்னைகளால்... பராமரிப்பில் அலட்சியத்தால் மக்கள் வேதனை
– நிருபர் குழு–: உடுமலை, பொள்ளாச்சி பகுதி கிராமங்களில், காலிக்குடங்களுடன் மக்கள் காத்திருக்கும் போது, குடிநீர் திட்டங்களின் பிரதான குழாய் உடைந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாகி வருகிறது; குடிநீர் வடிகால் வாரியம் அலட்சியம் தவிர்த்து வினியோகத்தை சீராக்க வேண்டும். உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் ஒன்றியத்தில், 72 ஊராட்சிகள் உள்ளன. தளி, கணியூர், மடத்துக்குளம், குமரலிங்கம், சங்கராமநல்லுார் பேரூராட்சிகளுக்கும், திருமூர்த்தி அணையை ஆதாரமாகக்கொண்டு, குடிநீர் வடிகால் வாரியம் வாயிலாக, 5 குடிநீர் திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன.
இத்திட்டங்கள் வாயிலாக, அணையிலிருந்து நாள்தோறும், 3.90 கோடி லிட்டர் குடிநீர் எடுத்து, வினியோகம் செய்ய முடியும்.
இந்த குடிநீர் திட்டங்களின் சுத்திகரிப்பு மையங்களுக்கு, 24 மணி நேர தடையில்லா மின்சாரம் வழங்கப்பட்டு, அணையில் திருப்தியான நீர் இருப்பு பராமரிக்கப்படுகிறது.
ஆனாலும், பல ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு அதிகரிக்க திட்ட பராமரிப்பில் காட்டப்படும் அலட்சியமே காரணமாகும். குறிப்பாக, குடிநீர் திட்டங்களின் பிரதான குழாய் உடைப்பை சீரமைப்பு இழுபறியாக நடக்கிறது.
வறட்சியால், உள்ளூர் நீராதாரமான போர்வெல்களில் நீர்மட்டம் சரிந்துள்ளதாால், குடிநீர் திட்டங்களில் வினியோகம் பாதிக்கும்போது, போர்வெல் தண்ணீரையும் வினியோகிக்க முடிவதில்லை.
குடிநீர் திட்டங்களின் பிரதான குழாய்கள், 20க்கும் மேற்பட்ட இடங்களில் அடிக்கடி உடைந்து குடிநீர் வீணாகிறது. இந்த உடைப்புகளை சீரமைக்க பல வாரங்களாகிறது. இதனால், பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணாவதுடன், கடைக்கோடி கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு நிரந்தரமாகியுள்ளது.
ஒவ்வொரு ஊராட்சிக்கும், திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்ட குடிநீரில், 40 சதவீதம் கூட வருவதில்லை. உள்ளாட்சி அமைப்புகளுக்கு திட்ட வடிவமைப்பு அடிப்படையில் ஒதுக்கீடு செய்யப்பட்ட குடிநீரை வழங்க திட்ட செயல்பாடுகளை, மாவட்ட கலெக்டர் தலைமையில், ஒன்றிய, பேரூராட்சி, ஊராட்சி அதிகாரிகள் உள்ளடக்கிய கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும்.
இக்குழு வாயிலாக, திட்ட பிரச்னைகளுக்கு உடனடியாக தீர்வு ஏற்படுத்தினால், காலிக்குடங்களுடன் குடிநீருக்காக காத்திருப்பது தவிர்க்கப்படும்.
பொள்ளாச்சி பொள்ளாச்சி நகராட்சி ஆனைமலை, கிணத்துக்கடவு ஒன்றியம் மற்றும் பேரூராட்சிகளில் அம்பராம்பாளையம், சூளேஸ்வரன்பட்டி உள்ளிட்ட, 10 கூட்டுக் குடிநீர் திட்டம் உள்ளது.
நான்கு வருவாய் கோட்டத்தில், 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி 6,37,091 நபர்கள் உள்ளனர்.
இதில், பொள்ளாச்சிக்கு உட்பட்ட ஒரு சில கிராமப் பகுதிகளில் குடிநீர் பற்றாக்குறை உள்ளது. கிணத்துக்கடவு ஒன்றியத்தின் எல்லையோர கிராமப்பகுதிகளில் கடந்த, ஐந்து ஆண்டுகளாக குடிநீர் இல்லாமல் இருப்பதால், மக்கள் காசு கொடுத்து குடிநீர் வாங்குகிறார்கள்.
சிலர் ஊராட்சி நிர்வாகம் சார்பில் வழங்கப்படும் சாதாரண தண்ணீரை குடிக்கின்றனர்.
இதை சரி செய்ய, கிணத்துக்கடவுக்கு தனி கூட்டுக் குடிநீர் திட்டம் வேண்டும் என, 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அறிக்கை தயார் செய்து அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
மேலும், மழைப்பொழிவு இல்லாததால் ஆழியாறு அணையின் நீர் மட்டம் குறைந்துள்ளது. இதனால் வரும் நாட்களில் பொதுமக்களுக்கு வழங்கும் குடிநீர் அளவு குறைய வாய்ப்புள்ளது.
எனவே, குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
