/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
துர்நாற்றம் வீசும் கழிப்பறை அகற்றுவது எப்போது?
/
துர்நாற்றம் வீசும் கழிப்பறை அகற்றுவது எப்போது?
ADDED : ஜூலை 20, 2025 06:52 AM

பல்லடம் : பல்லடம் பஸ் ஸ்டாண்டில், துர்நாற்றம் வீசும் கழிப்பறையை இடித்து அகற்றுவது எப்போதுஎன, நகராட்சிக்கு, பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
கோவை திருப்பூர், திருச்சி, மதுரை, பொள்ளாச்சி, உடுமலை என, பல்வேறு ஊருக்கு செல்லும் 200க்கும் அதிகமான பஸ்கள், தினசரி, பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்கு வந்து செல்கின்றன.
தினசரி ஆயிரக்கணக்கான பயணிகள், பொதுமக்கள் வந்து செல்லும் பஸ் ஸ்டாண்டில், நகராட்சி சார்பில் பொது மற்றும் கட்டணக் கழிப்பிடங்கள் உள்ளன.
பஸ் ஸ்டாண்டின் நுழைவுப் பகுதியில் செயல்பட்டு வரும் இலவச கழிப்பிடம் போதிய பராமரிப்பு இன்றியும், சமூக விரோதிகளின் அட்டகாசம் காரணமாகவும் துர்நாற்றத்துடன் காணப்படுகிறது.
இது, பஸ் ஸ்டாண்டுக்குள் வந்து செல்லும் பயணிகள், பொதுமக்களுக்கு குமட்டலை ஏற்படுத்துகிறது. இந்த கழிப்பிடத்தை இடித்து அகற்ற வேண்டும் என, பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், 'நகராட்சி மூலம், நவீன கட்டணக் கழிப்பிடம் சமீபத்தில் கட்டப்பட்டு பயன்பாட்டுக்கு வந்தது.
முன்னதாக, நுழைவாயிலில் உள்ள துர்நாற்றம் வீசும் இலவச கழிப்பிடம் இடித்த அகற்றப்பட்டு, அந்த இடத்தில் பயணிகள் காத்திருக்கும் வகையில் நிழற்குடை அமைக்கப்படும் என, முந்தைய நகராட்சி கமிஷனர் மனோகரன் தெரிவித்திருந்தார்.
புதிய கழிப்பிடம் பயன்பாட்டிற்கு வந்து இரண்டு மாதங்கள் ஆன நிலையில், நுழைவாயிலில் உள்ள துர்நாற்றம் வீசும் இலவச கழிப்பிடம் அகற்றப்படாமல் உள்ளது. இதனால், பயணிகள், பொதுமக்களுக்கு நோய் பாதிப்பு அபாயம் ஏற்பட்டு வருவதால், நுழைவாயிலில் உள்ள இலவச கழிப்பிடத்தை இடித்து அகற்ற வேண்டும்' என்றனர்.