/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பலியான கால்நடைகள் இழப்பீடு எப்போது?
/
பலியான கால்நடைகள் இழப்பீடு எப்போது?
ADDED : ஏப் 18, 2025 07:04 AM
திருப்பூர்; தெருநாய்களின் வெறியாட்டத்தால் ஆடுகள் தொடர்ந்து பலியாகும் நிலையில், ஊத்துக்குளி வட்டார விவசாயிகள், அரசின் கவனம் ஈர்க்க விவசாயிகளை ஒருங்கிணைத்து கூட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.
திருப்பூர் வெள்ளகோவில், காங்காயம், தாராபுரம், ஊத்துக்குளி உள்ளிட்ட இடங்களில் தெரு நாய்களால் கடிபட்டு, ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடைகள் பலியாவது தொடர்கிறது. விவசாயிகளின் தொடர் கோரிக்கை மற்றும் அழுத்தத்தின் விளைவாக, அரசின் சார்பில், இறக்கும் கால்நடைகளுக்கு இழப்பீடு வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தெரு நாய்களால் கால்நடைகள் தாக்கப்படுவது தொடர்கிறது.
ஊத்துக்குளி வட்டார விவசாயிகள் கூறியதாவது;
ஊத்துக்குளி வட்டாரம் வறண்ட பகுதி. இங்கு, விவசாயம் என்ற பெயரில் கால்நடை வளர்ப்பு தொழிலில் தான் பெருமளவு விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். கால்நடை வளர்ப்பு தான் இப்பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரம். கடந்த ஓராண்டாக தெருநாய்களால் கால்நடைகள் கடிபட்டு இறப்பது, தொடர்கிறது; இதனால், விவசாயிகள் பேரிழப்பை எதிர்கொள்கின்றனர்.
கால்நடைகளுக்கு அரசு இழப்பீடு வழங்குவதாக அறிவித்துள்ள போதும், அதற்கான எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படுவதாக தெரியவில்லை. தெரு நாய்களை பிடித்து சென்று, கருத்தடை செய்வதற்கான முயற்சிகளும் எடுக்கப்படுவதாக தெரியவில்லை. எனவே, அரசின் கவனம் ஈர்க்க விவசாயிகளை திரட்டி கூட்டம் நடத்துவது என முடிவெடுத்துள்ளோம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

