/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மின்சார பஸ்கள் திருப்பூருக்கு எப்போது?
/
மின்சார பஸ்கள் திருப்பூருக்கு எப்போது?
ADDED : ஜூலை 13, 2025 12:43 AM
திருப்பூர் : 'சுற்றுச்சூழல் மாசுபாட்டை தடுக்கும், போக்குவரத்து செலவினத்தை குறைக்கும் வகையிலான மின்சார பஸ்கள் திருப்பூரிலும் இயக்கத்துக்கு வர வேண்டும்,' என்பது போக்குவரத்து தொழிலாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
சென்னையில் கடந்த மாதம், 120 மின்சார பஸ்கள் இயக்கம் துவங்கி வைக்கப்பட்டது. டீசலில் இயங்கும் ஒவ்வொரு பஸ்சும், ஒரு கிலோ மீட்டருக்கு, 755 கிராம் கார்பன் டை ஆக்சைடு வெளியிடுகிறது.
மின்சாரத்தில் இயங்கும் பஸ்களை பயன்படுத்தினால், கார்பன் உமிழ்வை குறைத்து, காற்றின் தரத்தை கணிசமாக மேம்படுத்தலாம்; தொழிற்சாலைகள் நிறைந்துள்ள திருப்பூர் போன்ற நகரங்களில் மின்சார பஸ்கள் இயக்கம் அவசியம். மின்சார பஸ்கள் ஒருமுறை சார்ஜ் செய்தால், 200 கி.மீ., வரை பயணிக்கும்.
போக்குவரத்து தொழிலாளர்கள் கூறியதாவது:
மின்சார பஸ்களில் சிறப்பு தொழில்நுட்பம் பொருத்தப் படுவதால், படிக்கட்டுகளை பயணிகளுக்கு ஏற்ப (மாற்றுத்திறனாளிகள், பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியோர்) ஏறி, இறங்க வசதியாக மாற்றியமைக்க முடியும். இருக்கைகளை மடக்கவும், நீட்டவும் முடியும். இருக்கைகளுக்கு இடையே இடைவெளி அதிகம் என்பதால், நின்று பயணிப்போருக்கு ஏற்படும் நெருக்கடிகள் குறையும். 'மொபைல் சார்ஜிங்' அனைத்து இருக்கையிலும் இருக்கும். இதனால், ரயில் போல பயணத்தின் போது மொபைல் போன் சார்ஜ் செய்து கொள்ள முடியும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
போக்குவரத்துத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'சென்னையை தொடர்ந்து, மதுரை, கோவைக்கு அடுத்ததாக மின்சார பஸ்கள் இயக்கத்துக்கு வர உள்ளது. அதற்கான பூர்வாங்க பணிகள் இம்மாத இறுதியில் துவங்கும். கோவை கோட்டத்துக்கு வந்த பின் திருப்பூர் குறித்தும் முடிவெடுக்கப்படும்,' என்றனர்.