/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
எப்ப தாங்க தீரும்? விதிமுறைகளை அமல்படுத்தாததால் நிரந்தர நெரிசல்
/
எப்ப தாங்க தீரும்? விதிமுறைகளை அமல்படுத்தாததால் நிரந்தர நெரிசல்
எப்ப தாங்க தீரும்? விதிமுறைகளை அமல்படுத்தாததால் நிரந்தர நெரிசல்
எப்ப தாங்க தீரும்? விதிமுறைகளை அமல்படுத்தாததால் நிரந்தர நெரிசல்
ADDED : நவ 19, 2024 08:05 PM

உடுமலை; உடுமலை நகரிலுள்ள பிரதான ரோடுகளில், போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, 'பார்க்கிங்' இடத்தை வரையறை செய்தல் உள்ளிட்ட போக்குவரத்தை சீராக்குவதற்கான அனைத்து திட்டங்களும் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள உடுமலை நகரில், போக்குவரத்து நெரிசல் நீண்ட காலமாக முக்கிய பிரச்னையாக உள்ளது.
பஸ் ஸ்டாண்ட், பழைய பஸ் ஸ்டாண்ட், பைபாஸ் ரோடு, தளி ரோடு, ராஜேந்திரா ரோடு, கச்சேரி வீதி ஆகிய முக்கிய ரோடுகளில், காலை, மாலை நேரங்களில், நெரிசல் அதிகளவு உள்ளது.
இதற்கு ரோட்டோரத்தில், தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்களே முக்கிய காரணமாக உள்ளது.
நெடுஞ்சாலையை ஒட்டி, நிறுத்தப்படும் வாகனங்களால், பிற வாகனங்கள் செல்ல போதிய இடமில்லாமல், பஸ் ஸ்டாண்ட்டில் இருந்து நகர எல்லையான கொல்லம்பட்டரை வரை, வாகனங்கள் ஊர்ந்து செல்ல வேண்டியுள்ளது.
இதே போல், பல்வேறு பகுதிகளில் இருந்து பஸ் ஸ்டாண்டுக்கு வரும் பஸ்கள் நெரிசலில், சிக்க, பை-பாஸ் ரோட்டில், 'பார்க்கிங்' பகுதி வரையறை செய்யப்படாதது முக்கிய பிரச்னையாக உள்ளது.
கடைகள் முன், இடமிருந்தும், ரோட்டின் அருகில், வாகனங்களை நிறுத்துகின்றனர். முன்பு, ரோட்டுக்கும், கடைகளுக்கும் இடையிலான பகுதியை 'பார்க்கிங்' பகுதியாக வரையறை செய்து, போக்குவரத்து போலீசாரால் கயிறு அமைக்கப்பட்டது.
இந்த கயிறை தாண்டி, ரோட்டின் அருகில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு, அபராதம் விதித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இதனால், வாகனங்கள் வரிசையாக நிறுத்தப்பட்டு, நெரிசல் வெகுவாக தவிர்க்கப்பட்டது. முக்கிய ரோடுகள் அனைத்திலும் இந்த நடைமுறை பின்பற்றப்பட்டது.
பின்னர், 'பார்க்கிங்' இடத்துக்கான கயிறுகள் மாயமாகி, வாகனங்களை குறுக்கும், நெடுக்குமாக நிறுத்துகின்றனர். இதே போல், பஸ் ஸ்டாண்ட் அருகில், நடைமேம்பாலம் அருகில், தேசிய நெடுஞ்சாலையையொட்டி, வாகனங்களை நிறுத்திச்செல்கின்றனர். நீண்ட நேரமாக நிற்கும் இவ்வாகனங்களால், அனைத்து நேரங்களிலும் போக்குவரத்து ஸ்தம்பிக்கிறது.
உடுமலையில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும், விதிமுறைகளை அமல்படுத்தவும், போக்குவரத்து போலீசார் நியமிக்கப்பட்டு, பல ஆண்டுகளாகியும் எவ்வித பிரச்னைகளுக்கும் தீர்வு கிடைக்கவில்லை.
மேலும், விபத்துகளில் உயிரிழப்பு ஏற்பட்ட சந்திப்பு பகுதிகளில், மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ளவும், அனைத்து துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, அரசுக்கு கருத்துரு அனுப்பினர். அத்திட்டங்களும் கிடப்பில் போடப்பட்டுள்ளது. எனவே, போக்குவரத்து போலீசார், நகராட்சி நிர்வாகத்துடன் இணைந்து, பிரதான ரோடுகளில், 'பார்க்கிங்' இடத்தை வரையறை செய்ய வேண்டும்; பின்னர் கயிறு அமைத்து, போக்குவரத்து விதிமுறைகளை முறையாக அமல்படுத்த வேண்டும்.
நகர போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, அனைத்து துறை ஆலோசனை கூட்டம் நடத்தி, தீர்வு காணவும், திருப்பூர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.