/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அரசு கல்லுாரிகளில் புதிய பாடப்பிரிவு எப்போது? அரசு கவனம் செலுத்த எதிர்பார்ப்பு
/
அரசு கல்லுாரிகளில் புதிய பாடப்பிரிவு எப்போது? அரசு கவனம் செலுத்த எதிர்பார்ப்பு
அரசு கல்லுாரிகளில் புதிய பாடப்பிரிவு எப்போது? அரசு கவனம் செலுத்த எதிர்பார்ப்பு
அரசு கல்லுாரிகளில் புதிய பாடப்பிரிவு எப்போது? அரசு கவனம் செலுத்த எதிர்பார்ப்பு
ADDED : ஜன 22, 2025 12:18 AM
திருப்பூர்; 'திருப்பூர் மாவட்டத்தில் புதிதாக துவங்கப்பட்ட அரசு கலை கல்லுாரிகளில் புதிய பாடப்பிரிவுகள் அனுமதிக்கப்பட வேண்டும்' என்ற எதிர்பார்ப்பு பெற்றோர் மத்தியில் மேலோங்கியிருக்கிறது.
திருப்பூர் மாவட்டத்தை பொறுத்தவரை பள்ளிக்கல்வியில் மாநில அளவில், முன்னேற்றம் தென்படுகிறது. அரசு, தனியார் மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் ஆயிரக்கணக்கில் மாணவ, மாணவியர் படிக்கின்றனர்.
பொது தேர்வு தேர்ச்சி விகிதமும் திருப்திகரமாகவே இருக்கிறது.திருப்பூரில் சிக்கண்ணா அரசு கலைக்கல்லுாரி, உடுமலை அரசு கலை கல்லுாரி என இரு பாலர் பயிலும் கல்லுாரிகள் மட்டுமே இருந்தன. எல்.ஆர்.ஜி., அரசு கல்லூரியாக இருந்தாலும், பெண்கள் மட்டுமே கல்வி பயில்கின்றனர். பெண்களுக்கென, புனித ஜோசப், தீரன் சின்னமலை, ஏ.வி.பி., உள்ளிட்ட தனியார் கல்லுாரிகள் உள்ளன.
மாறாக, மாணவர்களுக்கென, அரசு கல்லுாரிகளை தவிர வேறெந்த கல்லுாரிகளும் இல்லை. இந்நிலையில், கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், அவிநாசி, பல்லடம், காங்கயம் ஆகிய இடங்களில் புதிதாக அரசு கலைக்கல்லுரிகள் கட்டப்பட்டு, மாணவர்களின் முழு வரவேற்புடன் செயல்பட்டு வருகிறது.
உயர்கல்வி படிக்கும் ஏழை, நடுத்தர வர்க்கத்து குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்கள், அரசு கல்லுாரிகளில் பட்டப்படிப்பு படிக்க விரும்புகின்றனர். குடும்பச்சூழல், பொருளாதார நிலை உள்ளிட்ட காரணங்களால், வெளி மாவட்டங்களுக்கு சென்று கல்வி பயில பலரும் தயங்குகின்றனர்; இதுவும், அரசு கல்லுாரிகளில் மாணவர் எண்ணிக்கை அதிகரிக்க காரணம்.
ஆனால், புதிதாக துவங்கப்பட்ட அரசுக்கல்லுாரிகளில் இளநிலை, அதாவது, பி.ஏ., பி.காம்., போன்ற பாடப்பிரிவுகள் மட்டுமே உள்ளன. பின்னலாடை நகரான திருப்பூரில், கல்லுாரி முடிக்கும் மாணவ, மாணவியர் பின்னலாடை துறையில் பணியாற்ற ஏதுவாக, ஆடை வடிவமைப்பு, பேஷன் டிசைனிங், மெர்ச்சன்டைசிங் உள்ளிட்ட ஆடை தயாரிப்பு பாடப்பிரிவுகளை ஏற்படுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நீண்ட காலமாகவே இருந்து வருகிறது. அதே போன்று, முதுகலை, ஆராய்ச்சிப்படிப்பும் அனுமதிக்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் மாணவ, மாணவியர் மத்தியில் அதிகரித்திருக்கிறது.
அந்தந்த அரசு கல்லுாரி நிர்வாகங்கள் சார்பில், மாணவர்கள் விரும்பும் புதிய பாடப்பிரிவுகள் தொடர்பாக, அரசுக்கு கருத்துருவும் அனுப்பப்பட்டுள்ளது; ஆனால், அரசு மவுனம் காத்து வருகிறது. எனவே, வரும் கல்வியாண்டிற்குள் புதியதாக துவங்கப்பட்ட கல்லுாரிகளில், புதிய பாடப்பிரிவுகளை அனுமதிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.