/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
திடக்கழிவை குறைக்கும் புது தொழில்நுட்பம் எப்போது? திருப்பூர் சாய ஆலை துறையினர் எதிர்பார்ப்பு
/
திடக்கழிவை குறைக்கும் புது தொழில்நுட்பம் எப்போது? திருப்பூர் சாய ஆலை துறையினர் எதிர்பார்ப்பு
திடக்கழிவை குறைக்கும் புது தொழில்நுட்பம் எப்போது? திருப்பூர் சாய ஆலை துறையினர் எதிர்பார்ப்பு
திடக்கழிவை குறைக்கும் புது தொழில்நுட்பம் எப்போது? திருப்பூர் சாய ஆலை துறையினர் எதிர்பார்ப்பு
ADDED : மே 18, 2025 01:03 AM

திருப்பூர் : திடக்கழிவு உருவாகாத வகையிலான புதிய தொழில்நுட்பத்தை செயல்படுத்தினால் மட்டுமே, சுத்திகரிப்பு செலவை கட்டுக்குள் கொண்டுவர முடியும் என, சாய ஆலை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
திருப்பூர் சாய ஆலைகளுக்கு, 'ஜீரோ டிஸ்சார்ஜ்' தொழில்நுட்ப செயல்பாட்டால் செலவு அதிகரித்துள்ளது. சாயக்கழிவை, இரண்டு நாட்கள் தேக்கி வைத்து, பிறகு 'பயோலாஜிகள்' முறையில், கலர் நீக்குவது; 'குளோரினேசன்' முறையில், பாக்டீரியா, பூஞ்சைகள் நீக்கம் செய்யப்படுகிறது. அடுத்ததாக, ஆர்.ஓ., பிளான்ட் மூலமாக, சுத்தமான தண்ணீராக பிரித்து, மறுசுழற்சி பயன்பாட்டுக்கு உபயோகிக்கப்படுகிறது. மொத்த கழிவுநீரில், 93 சதவீதம் நீர், சுத்தமான தண்ணீராக பிரித்து எடுக்கப்படுகிறது.
மீதிமுள்ள கழிவில் இருந்து, 4 சதவீதம் 'பிரெய்ன் சொல்யூஷன்' எனப்படும் திரவ உப்புக்கரைசல் பிரித்து எடுத்து, மீண்டும் சாய ஆலைகளில் சாயமிட பயன்படுத்தப்படுகிறது. மீதிமுள்ள, 3 சதவீத கழிவில் இருந்து, உப்பு பிரித்து எடுத்து, மறுசுழற்சி முறையில் பயன்படுத்தப்படுகிறது. நிறைவாக, 0.50 சதவீத கழிவில் இருந்து, கழிக்கப்படும் 'மிக்ஸர் சால்ட்' எனப்படும் கலவை உப்பும், 'ஸ்லெட்ஜ்' கழிவும் பிரித்து எடுக்கப்படுகிறது.
சுத்திகரிப்பு செலவு மற்றும் நேரத்தை சேமிக்க, மாற்று தொழில்நுட்பம் அவசியம் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. திருப்பூர் குன்னாங்கல்பாளையம் பொது சுத்திகரிப்பு நிலையத்தில், 2023ம் ஆண்டில், சோதனை முறையில் பயன்படுத்திய தொழில்நுட்பம், சோதனை அளவிலேயே நின்றது. 'இன்டோ ஜெர்மன்' அறிவியல் தொழில்நுட்ப மைய உதவியுடன், சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்ப கழகம், கோயித் பல்கலை சார்பில், தமிழ்நாடு நீர் முதலீட்டு கழகம், 'இப்கான்' தொழிற்சாலைகள் இணைந்து, புதிய தொழில்நுட்பம் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.
'ஜீரோ டிஸ்சார்ஜ்' தொழில்நுட்பத்தில், கடைசியாக உருவாகும் திடக்கழிவுகளை அகற்றுவதும் குதிரை கொம்பாக இருக்கிறது. அதற்கு தீர்வு காணும் வகையில், புதிய தொழில்நுட்ப பகிர்வு அவசியம் என்பது, திருப்பூரின் தற்போதைய எதிர்பார்ப்பாக மாறியுள்ளது.
இதுகுறித்து சுத்திகரிப்பு நிலையங்களின் தொழில்நுட்ப பணியாளர்கள் கூறியதாவது:
திருப்பூர் பொது சுத்திகரிப்பு நிலையங்களில், 'பயோலாஜிகள்', 'குளோரினேசன்' சுத்திகரிப்புக்கு பின், ஆர்.ஓ., சுத்திகரிப்பு செய்யப்படுகிறது. கடந்த, 2023ல், 'ஜீரோ பர்சன்ட் கெமிக்கல்' தொழில்நுட்பத்தில், நேரடியாக சாயக்கழிவை, சி.டி.ஐ., சுத்திகரிப்பு செய்து, திரவம் மற்றும் திடக்கழிவு இல்லாமல், சுத்தமான தண்ணீரை பிரித்து எடுக்கலாம் என சோதனை மட்டும் நடந்தது.
சில மாத சோதனை ஓட்டத்துக்கு பின், எவ்வித முன்னேற்றமும் இல்லை; நடைமுறை சிக்கல் இருப்பதால், யாரும் அதனை கண்டுகொள்ளவில்லை. தற்போதைய நிலவரப்படி, உற்பத்தி செலவை கட்டுப்படுத்தும் வகையில், சுத்திகரிப்பு நிலையங்களுக்கு, புதிய தொழில்நுட்பம் மிகமிக அவசியம். உற்பத்தி செலவை கட்டுப்படுத்தும் வகையில், புதிய தொழில்நுட்பம் கட்டமைக்கப்பட வேண்டும். புதிதாக தொழில்நுட்பங்கள் அறிமுக நிலையிலேயே இருக்கின்றன. திருப்பூரை போல், அனைத்து மாவட்டங்களுக்கும், மாநிலங்களுக்கும் 'ஜீரோ டிஸ்சார்ஜ்' தொழில்நுட்பம் கட்டாயமாகும் போதுதான், இப்பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.