/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அறிவிப்பில் மட்டுமே பூங்கா மேம்பாடு அமராவதியில் விடிவு எப்போது?
/
அறிவிப்பில் மட்டுமே பூங்கா மேம்பாடு அமராவதியில் விடிவு எப்போது?
அறிவிப்பில் மட்டுமே பூங்கா மேம்பாடு அமராவதியில் விடிவு எப்போது?
அறிவிப்பில் மட்டுமே பூங்கா மேம்பாடு அமராவதியில் விடிவு எப்போது?
ADDED : டிச 20, 2025 08:51 AM

உடுமலை: உடுமலை அருகே மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள, அமராவதி அணை முக்கிய சுற்றுலா தலமாகும். அணை பயன்பாட்டுக்கு வந்து நீண்ட காலமாகியும், அணை பூங்கா மட்டும் மேம்படுத்தப்படாமல் இருந்தது.
திருப்பூர் மாவட்டம், 2009ல் உருவான போது, அமராவதி அணை மற்றும் திருமூர்த்திமலையில், பல்வேறு சுற்றுலா மேம்பாட்டு திட்டங்கள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டது.
ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கடந்த சில ஆண்டுகளில், அருகிலுள்ள மூணாறு, மறையூர், காந்தலுார் உள்ளிட்ட கேரள மாநில சுற்றுலா தலங்கள் பல மடங்கு வளர்ச்சியடைந்துள்ளது.
ஆனால், அமராவதி சுற்றுலா தலத்தில் எவ்வித வளர்ச்சி பணிகளும் மேற்கொள்ளவில்லை. இது அனைத்து தரப்பு மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சட்டசபை மானிய கோரிக்கையில் சுற்றுலாத்துறை சார்பில், திருப்பூர் மாவட்டம், அமராவதி அணை உட்பட ஆறு இடங்களில், சுற்றுலாவை மேம்படுத்த, திட்ட அறிக்கை தயாரிக்கப்படும். இதற்காக, 2 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது.
கடந்த ஆக., மாதத்தில், திருப்பூர் கலெக்டர் தலைமையில், அமராவதி அணை பூங்காவை மேம்படுத்துவது குறித்த ஆலோசனை கூட்டமும் நடந்தது. ஆனால், மேம்பாட்டு பணிகள் எதுவும் துவங்கவில்லை.
அமராவதி அணைக்கு சுற்றுலா வருபவர்களுக்கு, ஒரே ஆறுதலாக இருந்த படகு சவாரியும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மூணாறு உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா செல்பவர்கள் வரும் வழியிலுள்ள அமராவதி அணையையும் பார்வையிட வருகின்றனர்.
ஆனால், அங்குள்ள அவல நிலையால் வேதனையோடு திரும்புகின்றனர். பூங்கா முழுவதும், புதர் மண்டி, அங்குள்ள சிலைகள் பராமரிப்பு இல்லாமல் சிதிலமடைந்துள்ளது.
இருக்கை உள்ளிட்ட எவ்வித வசதிகளும் இல்லை. விஷ ஜந்துகள் நடமாடும் பகுதியாக பூங்கா மாறி விட்டது.
கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கும் இப்பிரச்னைக்கு, வரும் கோடை விடுமுறை சீசன் துவங்கும் முன் தீர்வு கிடைக்கும்; மேம்பாட்டு பணிகள் உடனடியாக மேற்கொள்ளப்படும் என அனைத்து தரப்பினரும் எதிர்பார்த்துள்ளனர்.

