ADDED : ஜூலை 04, 2025 11:05 PM
பல்லடம்; பல்லடம் வட்டாரத்தில், பல்வேறு பிரச்னைகள் நிலவிவரும் சூழலில், தொகுதி எம்.பி., எங்கே போனார் என, பொதுமக்கள் தேடி வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டத்தின் கீழ் உள்ள பல்லடம் சட்டசபை தொகுதி, கோவை லோக்சபா தொகுதிக்குள் உள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, பல்லடம் தாலுகாவில், 3.50 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.
நகராட்சியில், 18 வார்டு, ஒன்றியத்துக்கு உட்பட்டு, 20 கிராம ஊராட்சிகள் மற்றும் சாமளாபுரம் பேரூராட்சி என, திருப்பூர் மாவட்டத்தில் பெரிய தாலுகாக்களில் ஒன்றாக உள்ளது.
விசைத்தறி, கறிக்கோழி உற்பத்தி, விவசாயம் உட்பட பல தொழில்கள் பரவலாக நடந்து வருகின்றன. தொழில் ரீதியாக மட்டுமன்றி, அன்றாட வாழ்க்கையிலும் பொதுமக்கள், தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.
ஊராட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் நிறைவடைந்த நிலையில், தற்போது, கிராம ஊராட்சிகள் தனி அலுவலர்களின் கட்டுப்பாட்டிலும், நகராட்சி, பேரூராட்சிகள் மக்கள் பிரதிநிதிகளின் கட்டுப்பாட்டிலும் உள்ளன.
பல்லடம் நகர மற்றும் கிராம பகுதிகளில் ஏற்பட்டு வரும் போக்குவரத்து நெரிசல், குடிநீர் பற்றாக்குறை, ஜவுளி தொழில் பின்னடைவு மற்றும் வளர்ச்சி திட்டங்கள் என, எண்ணற்ற பிரச்னைகள், தேவைகள் உள்ளன. மக்கள் பிரதிநிதிகள் தான் இவற்றை தீர்த்து வைக்க முடியும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பு.
கடந்த ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில், பா.ஜ., முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலையை விட, 1.18 லட்சம் வாக்குகள் அதிகம் பெற்று கணபதி ராஜ்குமார் (தி.மு.க.,) வெற்றி பெற்றார்.
இவர் பதவியேற்று ஓராண்டு நிறைவடைந்த நிலையில், நன்றி தெரிவிக்க கூட தொகுதி பக்கம் வரவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மேலும், பல்வேறு பிரச்னைகள் நிலவிவரும் பல்லடம் தொகுதியில், மக்களை சந்திக்க கூட எம்.பி.,க்கு நேரம் இல்லையா? என்றும், இரண்டு முறை எம்.பி., தொகுதி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், பல்லடம் தொகுதிக்கு ஏதாவது திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதா? என்ற கேள்வியையும் பொதுமக்கள் முன்வைக்கின்றனர்.