/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பாதை இருப்பது எங்கே... விழி பிதுங்கும் மக்கள்
/
பாதை இருப்பது எங்கே... விழி பிதுங்கும் மக்கள்
ADDED : ஜன 29, 2024 11:50 PM
அனுப்பர்பாளையம்;திருப்பூர் மாநகராட்சி, 25வது வார்டு, வஞ்சிபாளையம் ரோடு ரயில்வே பாதைக்கு மறுபுறத்தில் அருள்ஜோதி நகர் மற்றும் அப்போலோ நகர் உள்ளது.
இப்பகுதிகளில், 200 வீடுகள் உள்ளன. குடியிருப்பு உருவாகி, 16 ஆண்டுகள் ஆகிறது. ஆனால், சாலை, சாக்கடை கால்வாய், தெரு விளக்கு, குடிநீர், என எந்தவித அடிப்படை வசதியும் இல்லை. லாரிகளில் உப்புத்தண்ணீர் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.
இப்பகுதி மக்கள் போக்குவரத்துக்காக, ரயில்வே பாதையையொட்டி அமைந்துள்ள ரோட்டை பயன்படுத்தி வருகின்றனர். மண் ரோடு என்பதால், மழை நேரங்களில் ரோடு முழுவதும் சகதியாகி விடுகிறது. தற்போது, அப்பகுதி மக்கள் பயன்படுத்தி வந்த பாதையை ரயில்வே துறையினர் தங்களுடையது என கல் நட்டி உள்ளனர்.
இதனால் அப்பகுதி மக்கள் குடியிருப்புக்கு செல்ல பயன்படுத்தும் பாதை எது என தெரியாமல் உள்ளனர். முறையான அளவீடு செய்து, குடியிருப்பு பகுதிக்கு செல்லும் பாதையை கண்டுபிடித்து தர வேண்டும் என வார்டு கவுன்சிலர் தங்கராஜ், தலைமையில் அப்பகுதி மக்கள் கடந்த மாதம் மாநகராட்சி முதல் மண்டல அலுவலகத்தில் மனு கொடுத்து இருந்தனர்.
மனு கொடுத்து ஒரு மாதத்துக்கு மேலாகியும் அளவீடு செய்வதில் அதிகாரிகள் மெத்தனம் காட்டி வந்தனர். நேற்று அப்பகுதி மக்கள் அளவீடு செய்ய வரவில்லை என்றால் கவுன்சிலர் தங்கராஜ், தலைமையில் சாலை மறியலில் ஈடுபடுவோம் என்றனர்.
இதனால், 15 வேலம்பாளையம் பகுதி சர்வேயர் ஜெயராமன், மாநகராட்சி உதவி பொறியாளர் சிவகுமார் ஆகியோர் அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சர்வேயர் கூறுகையில், 'முழுமையாக அளவீடு செய்த பின்னரே பாதை குறித்து தெரிய வரும்,' என்றனர்.