/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'யாரக் கேட்டு வார்டுக்குள்ள வந்தே...?'
/
'யாரக் கேட்டு வார்டுக்குள்ள வந்தே...?'
ADDED : நவ 12, 2024 06:18 AM

மித்ராவின் வீட்டுக்கு சென்ற சித்ராவை வரவேற்று, சூடான இஞ்சி டீ கொடுத்தாள்.
அதனை அருந்தியவாறே, ''மித்து, இந்த தாராபுரம் ரோடு படுமோசம். பல மாசமாக இப்டித்தான் இருக்கு. கார்ப்பரேஷன் நிர்வாகம் என்ன பண்றாங்கன்னு தெரியலே...'' என்றாள்.
''உண்மைதாங்க்கா. அதனை சீரமைக்க வலியுறுத்தி, விவசாய சங்கத்துக்காரங்க நாத்து நடும் போராட்டம் நடத்துறதா அறிவிச்சிருந்தாங்க. இந்த தகவல் வெளியான பின், கார்ப்பரேஷன் அதிகாரிங்க, கான்ட்ராக்ட்காரரை ராத்திரி பகலா வேலை செய்ய வச்சு, சமாளிச்சிருக்காங்க,''
''ஆனா, இதே மாதிரி சிட்டியில பல ரோடு இந்த லட்சணத்துல தான் இருக்கு. அதையெல்லாம் எப்படி சரி பண்ணப்போறாங்கன்னு தெரியல. ஒருவேளை போராட்டம் அறிவிச்சாத் தான் செய்வாங்களோ என்னவோ? ஆளுங்கட்சியில எம்.பி., எம்.எல்.ஏ., மினிஸ்டர், மேயர்ன்னு, இத்தனை பேரு, எதுக்காக இருக்காங்கன்னு தெரியலைன்னு, பொதுமக்கள் பேசறாங்க,''
அறிவிப்பு வந்தது பிரச்னை தீர்ந்தது
''நீ சொல்றது சரிதான் மித்து. நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமா, பல இடங்களில போராட்டம் தான் நடந்துட்டு இருக்கு. இப்படித்தான் வெள்ளகோவில், காங்கயம், தாராபுரம் பகுதியில தெரு நாய்கள் கடிச்சு, ஆடுகள் இறந்து போவது தொடர் கதையாகவே இருக்கு. ஆனா, இங்க இருக்கற சொந்த தொகுதி மினிஸ்டரும், எம்.எல்.ஏ.,வும் இதுவரை கண்டுக்கலைன்னு, விவசாயிகள் எவ்வளவு தான் வசைபாடினாலும், அதிகாரிகளின் மவுனவிரதம் இதுவரை கலையவில்லை,'' என்றாள் மித்ரா.
''பல்லடம் மாகாளியம்மன் கோவிலுக்கு முன்னாடி எந்த கடையும் போடக்கூடாதுன்னு ஒரு தரப்பு கோர்ட்ல வழக்கு போட்டு இருக்காங்க. விசாரணை போயிட்டு இருக்கற கேப்ல, கோவிலுக்கு முன்னாடி பூக்கடை ஒன்னு முளைச்சிருச்சு. அந்த கடைக்காரரு, டெய்லி, 600 கப்பம் கட்டணும்னு 'ரத்தினக்கல்' ஆளுங்கட்சி நிர்வாகி ஒருத்தர் வசூல் பண்ணிட்டு இருக்காறாம்,'' என்றாள் சித்ரா.
''அக்கா. அதே பல்லடத்துல, வியாபாரி ஒருத்தர்கிட்ட பணம் கேட்டு மிரட்டின குக்கர் கட்சி நிர்வாகிகிட்ட போலீஸ் விசாரணை நடத்தினாங்க. அதுக்கு பின்புலமா சில ஆளுங்கட்சிக்காரங்க இருக்கறதா பேசிக்கிறாங்க. இதனால தான், போலீசும் நடவடிக்கை எடுக்காம, நீங்க கோர்ட்ல பாத்துக்கங்கன்னு கம்ப்ளைன்ட் பார்ட்டியை திருப்பி அனுப்பிட்டாங்களாம். இதனால, பாதிக்கப்பட்ட வியாபாரி இப்போ அடுத்த கட்டத்துக்கு மூவ் பண்ணிட்டு இருக்காரு,'' என்றாள் மித்ரா.
என்ன சொன்னாலும் செய்வதில்லை...
''மித்து, தாசில்தார் பணி வாய்ப்பு கிடைக்காமல், இளைஞர்கள் காத்திருக்கின்றனர். ஆனால், குறிப்பிட்ட தாசில்தார் களுக்கு மட்டும், கலெக்டர் ஆபீஸ்ல இருக்கறவங்க சலுகை காட்டறாங்க. அதாவது, ரெகுலர் தாசில்தார் பணி வாய்ப்பு, பெரும்பாலும் ஓராண்டு மட்டும் வழங்கப்படும். ஆனால், ஆளுங்கட்சி செல்வாக்கு உள்ளவர்களுக்கு மட்டும், மூனு வருஷம் வரை கொடுத்திருக்காங்க. சிலர் தாசில்தார் ஆகியும், ரெகுலர் தாசில்தார் பணி வாய்ப்புக்காக காத்திருக்கின்றனர். கலெக்டர் டேபிளில் காத்திருக்கும், தாசில்தார் டிரான்ஸ்பர் பட்டியலை இறுதி செய்தால் மட்டுமே வாய்ப்பு கிடைக்குமாம்...'' சித்ரா சொன்னதும், மித்ரா ஆமோதித்தாள்.
''அக்கா, அதே கலெக்டர் ஆபீஸ் குறைகேட்பு முகாமில், மக்களாக வந்து மனு கொடுப்பதை காட்டிலும், புரோக்கர் அழைத்து வருவதுதான் அதிகம். இந்த அதிகாரியை தெரியும். அந்த ஆபீசர் வேலயை சட்டுன்னு முடிச்சு குடுப்பாருன்னு சொல்லி, தங்களது லெட்டர் பேடில் மனு தயாரித்து, மக்களை அழைத்து வந்து, 'டுபாக்கூர்' நிருபரை வச்சு, போட்டோ எடுத்து பில்டப் கொடுத்து, பண்ணிடறாங்க. இதுக்காக, தலைக்கு, 500 வரைக்கும் வசூல் பண்ணிடறாங்க. கணக்கு பார்த்தா, கலெக்டர் சம்பளத்தைவிட அதிகமாகவே வசூல் ஆகுதாம். இதுக்கெல்லாம், கலெக்டர் ஒரு கடிவாளம் போட்ட பரவாயில்லை,'' மித்ரா படபடவென பேசினாள்.
''அரிசிக்கடை வீதியில சூரசம்ஹாரம் நடந்துட்டு இருந்தப்ப, அந்த ஏரியாவுக்கு போலீசார் பாதுகாப்பு பணிக்கு தலைகாட்டவே இல்லை. ரொம்ப நேரம் கழிச்சு வந்த ஒரு போலீஸ்காரர், 'இது என்ன பங்கஷன்?' பக்தர்கள் கிட்ட கேட்டிருக்காரு. அவங்க, 'சூரசம்ஹாரம்'னு சொல்லியிருக்காங்க. ஆனா, அவருக்கு இரைச்சல்ல, 'சூரசம்சாரம்'னு கேட்டிருக்கு,''
''என்ன 'சூரசம்சாரமா'னு போலீஸ் கேட்டிருக்காரு. அதனால, கோபமான பெண்கள், 'நீங்க தமிழ்நாடு தானே... முருகன் கந்தசஷ்டி விழா சூரசம்ஹாரம்' தெரியாதானு கேட்டிருக்காங்க. அப்புறம் ஒரு பக்தர், விரிவா சொன்னதால புரிஞ்சுதாம். இருந்தாலும், பக்தர்கள் மத்தியில், நிகழ்ச்சியை கிண்டல்' செய்ற மாதிரி கேட்டது பலருக்கும் ரொம்ப வருத்தமாம்,'' ஆதங்கப்பட்டாள் சித்ரா.
'ஜோலி' இல்லை ஜாலி உண்டு
''அக்கா... பொதுப் பணித்துறையில், 'பீல்டு இன்ஸ்பெக்டர்'னு பணியாளர்கள் இருப்பர். அவர்கள், குளம், குட்டை பராமரிப்பு, ஆக்கிரமிப்பு, குப்பை கொட்டுவது, கட்டட கழிவு கொட்றதுனு எத்தகைய அத்துமீறல் இருந்தாலும், கண்டுக்கறதே இல்லை. பொதுப்பணித்துறையில் அடிப்படை பணிகளுக்கான பணியாளர்கள் என்ன செய்றாங்கன்னே தெரியல. குறிப்பா, அவிநாசி சுற்றுப்பகுதியில ஏதாவது ஒரு பிரச்னைன்னா, அவங்களுக்கு தகவல் கொடுக்க கூட, தொலைத் தொடர்பு வசதி இல்லை. வருகைப்பதிவு இல்லாததால், பணியை கவனிக்காமல் சொந்த வேலையை பார்த்துட்டு ஜாலியா இருக்காங்களாம்...'' சொன்ன மித்ரா தொடர்ந்தாள்.
''வக்பு வாரிய போர்டு விவகாரத்துல, நத்தம் நிலம் கிரயம் நிறுத்தி வச்சிருந்தாங்க; அதுதொடர்பா மக்கள் பலமுறை மனு கொடுத்தாங்க. என்ன நடவடிக்கை எடுத்தாங்க, பிரச்னை முடிந்ததா என்ற விவரம் மக்களுக்கு தெரியறதே இல்லை. கலெக்டர் அல்லது பத்திரப்பதிவு அதிகாரிங்களாவது, வெளிப்படையா சொன்னா பரவாயில்லை. இடையில புகுந்து விளையாடும் புரோக்கர்கள், 50 ஆயிரம் ரூபாய் வரை வசூல் பண்ணி, சம்பாதிச்சுட்டு இருக்காங்க. இனியாவது, கலெக்டர் தலையிட்டு அறிவிப்பு செஞ்சா பரவாயில்லை...''என முக்கியமான மேட்டரையும் சொன்னாள்.
''இப்படி பல விஷயங்கள் கலெக்டர் தலையிட்டாதான் முடியும்ங்கிற நிலை இருப்பதால், சட்டுப்புட்டுனு ஒரு முடிவு எடுத்தா மக்களுக்கு நல்லது நடக்கும்,'' சொன்ன சித்ரா, ''மக்கள் போராட்டத்தை விசாரிக்கப்போன இடத்துல, ஓ.சி.,யில் அஞ்சாறு நொறுக்கு தீனி பாக்கெட்டுகளை லவட்டிட்டு போயிட்டாங்களாம்,'' என அடுத்த மேட்டருக்கு தாவினாள்.
''இது எங்க நடந்தது ங்க்கா...''
கிடைச்ச வரை சுருட்டிக்கோ...
''நாலு நாளைக்கு முன்னாடி, போயம்பாளையத்தில் இடம் பிரச்னை தொடர்பாக, பொதுமக்கள் போராட்டம் நடத்திட்டு இருந்தாங்க. இதுக்காக அங்க போன பேட்ரால் போலீஸ்காரங்க, மக்களை சமாதனப்படுத்தி அனுப்பிட்டு, பக்கத்துல இருக்கின்ற பேக்கரிக்கு போயி, 'காந்தி கணக்குல' சில நொறுக்கு தீனி பாக்கெட்டுகளை அள்ளிட்டு போயிட்டாங்களாம். கடைக்காரரும், ஒன்னும் சொல்ல முடியவில்லை. இதனை பார்த்த மக்கள் அதிர்ச்சியாகிட்டாங்க,'' என்றாள் சித்ரா.
''நகரில், ஆளும்கட்சி பெண் கவுன்சிலர்களின் கணவர்கள் அட்ராசிட்டி அதிகமாக ஆயிட்டு இருக்கு,'' என்ற மித்ரா, ''போன வாரம், வார்டு பகுதிக்குள் வந்த அதிகாரிகளை முற்றுகையிட்டு பெண் கவுன்சிலரின் கணவர் அட்ராசிட்டி செஞ்சாரு. அந்த அதிகாரியை, 'ஏன் எங்கிட்ட சொல்லாம வர்ற,''ன்னுட்டு ஒருமையில் திட்டியிருக்காரு. இவரை போன்ற ஆளும்கட்சி பெண் கவுன்சிலர்களின் கணவர்கள் பலரும் இதே வேலையை தான் செய்றாங்க. கணவன்மார்களையும் கண்டு, மாநகராட்சி அதிகாரிங்க, அலுவலர் பலரும் தெறித்து ஓடும் நிலை தான் சிட்டியில் இருக்கிறது,'' என்றாள் மித்ரா.
''அதே மாதிரி மித்து, மாநகராட்சியில் உள்ள பொறியாளர், இளம் பொறியாளர் சிலர், தங்கள் வேலை, 'மாமூல்' வசூலிக்க, தனியாக, ஒன்றிரண்டு ஆட்களை நியமித்து வேலை வாங்குறாங்க. வசூலை பார்த்துட்டு, முக்கிய வேலைகளை கவனிக்காம கோட்டை விட்டுடறாங்களாம்,'' என்றாள் சித்ரா.
''ஆமாங்க்கா... நானும் கேள்விப்பட்டேன். ரொம்ப நாளா இப்டிதான் நடக்குதாம்,. யாரும் கண்டுக்கறதில்லை,'' என அங்கலாய்த்த மித்ரா, ''சிவன்மலை கோவிலில் சஷ்டி விழாவின் திட்டமிடல் இந்த தடவ படுசொத்தப்பலாம். காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள், விரதத்தை முடிக்கும் போது, கத்தரிக்கோலை வச்சு கட் பண்ணி எடுத்து இருக்காங்க. இத பார்த்த பலருக்கு அதிர்ச்சியா இருந்ததாம். ரொம்ப சிரத்தையா ஒரு வாரம் விரதம் இருந்தும், நல்லபடியா முடிக்கலாம்னா, இப்படி பண்றாங்கன்னு பக்தர்களும் பலரும் வருத்தப்பட்டாங்க,''
''அதுவும் ஒரு ஐயர் மட்டுமே இந்த வேலையில ஈடுபட்டதால, ரொம்ப நேரமாகியிடுச்சாம். அதேமாதிரி திருக்கல்யாண உற்சவத்தை ரொம்ப நேரம் பண்ணி, பக்தர்களை நோகடிச்சுட்டாங்களாம். இதையெல்லாம் முறைப்படுத்தற அறநிலையத்துறை வழக்கம்போல துாங்கி வழிஞ்சிருக்காங்க... அடுத்த வருஷமாவது குளறுபடி இல்லாம கந்தசஷ்டியை நடத்தினா பரவாயில்ல,'' என்றாள்.