/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
யாருக்கு சேதாரம்... யாருக்கு ஆதாயம்!
/
யாருக்கு சேதாரம்... யாருக்கு ஆதாயம்!
ADDED : டிச 16, 2024 12:27 AM
திருப்பூர்; வரும் 2026ல் சட்டசபை தேர்தல் வரவுள்ள நிலையில், திருப்பூர் மாநகராட்சியில் சொத்து வரி உயர்வு பிரச்னையை பிரதானமாக எடுத்து எதிர்க்கட்சிகள், அரசுக்கும் ஆளும் தி.மு.க.,வுக்கும் எதிராக போராட்டங்களைத் தொடர்கின்றனர்.
மாநகராட்சி கூட்டத்தில் பிரச்னையை எழுப்ப அ.தி.மு.க., திட்டமிட்டு வியூகம் அமைத்தது. கவுன்சிலர்கள் கருப்பு சட்டை அணிந்தும், எதிர்ப்பு கோஷம் கொண்ட பதாகைகளையும் ஏந்தி வந்தனர். மேயரை முற்றுகையிட்டு பின் உள்ளிருப்பு போராட்டத்தில் அ.தி.மு.க., வினர் ஈடுபட்டனர்.
சொத்து வரிப் பிரச்னையை மையமாகக் கொண்டு அ.தி.மு.க.., வினர் நடத்திய போராட்டத்தை தொடர்ந்து உடனடியாக களம் இறங்கிய கம்யூ., கவுன்சிலர்கள், மாநகராட்சி அலுவலகம் முன் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களுக்குப் போட்டியாக அ.தி.மு.க.,வினரும் மறியல் நடத்தினர்.
சொத்து வரி உயர்வு மற்றும் மன்றத்தில் நடைபெற்ற சம்பவம் குறித்து மேயர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. அதன் பின் பல்வேறு வகையில் இந்த சொத்து வரி பிரச்னை மாநில அளவில் முக்கியத்துவம் பெறத் துவங்கியது.
கவுன்சிலர்கள் கைது செய்யப்பட்டதற்கு மாநில தலைவர்கள் தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அடுத்தடுத்து அரசியல் கட்சிகள் தங்கள் போராட்டங்களை அறிவிக்கத் துவங்கின.
தொடர் போராட்டங்கள்
அ.தி.மு.க., சார்பில் உண்ணாவிரதம் நடத்தப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு, கட்சியின் எதிர்ப்பை பதிவு செய்தனர்.
பா.ம.க., - தே.மு.தி.க., கட்சிகள் தங்கள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
த.மா.கா., அடையாள உண்ணாவிரதத்தை அறிவித்தது; பின், ஒத்திவைத்தது.
சொத்து வரிப் பிரச்னையில் தங்கள் எதிர்ப்பைக் காட்ட, கம்யூ., - காங்., - வி.சி.க., உள்ளிட்ட தி.மு.க., கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தின. மத்திய அரசை குற்றம் சுமத்தி, மாநில அரசுக்கு வேண்டுகோள் விடுத்தன, இக்கட்சிகள்.
பா.ஜ., வினர், மாநகராட்சி பகுதியில் தெருமுனைக் கண்டனப் பொதுக்கூட்டம் நடத்தி, சொத்து வரி உயர்வில் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்து கொண்டனர்.
எப்போது முடிவு?
அ.தி.மு.க., வைத்த துவக்கப் புள்ளிக்கு, ஆளும் தி.மு.க., எப்படி முற்றுப்புள்ளி வைக்கப்போகிறது என ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டுள்ளனர்.
இதற்கிடையே இந்தப் போராட்டங்களால், அரசியல் ஆதாயம் பெறுவது யார், சேதாரம் அடையப்போவது யார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
சொத்து வரி உயர்வு, வாடகைக் கட்டடங்களுக்கான ஜி.எஸ்.டி.,யை கண்டித்து திருப்பூர் அனைத்து வியாபாரிகள் சங்கங்களின் பேரவை சார்பில் கருப்புக்கொடி கட்டி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். வரும் 18ம் தேதி ஒரு நாள் முழு கடையடைப்பும் அறிவித்துள்ளனர்.
பல்லடம் வியாபாரிகள் சங்க செயல் தலைவர் பானு பழனிசாமி கூறியதாவது: திருப்பூர் அனைத்து வியாபாரிகள் சங்கம், வரும் 18 அன்று கடையடைப்பு போராட்டம் அறிவித்துள்ளது. இந்த கடையடைப்பு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, பல்லடம் வியாபாரிகள் சங்கமும் கடையடைப்பில் ஈடுபட உள்ளது. திருப்பூர் மாவட்ட ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம், பல்லடம் ஜவுளி கடை உரிமையாளர்கள் சங்கம், ஆட்டோ ஸ்பேர் பார்ட்ஸ் உரிமையாளர்கள் சங்கம், மோட்டார் வாகன பழுதுபார்ப்போர் சங்கம், கட்டட பொறியாளர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன. இதன்படி, வரும் 18ம் தேதி காலை, 6:00 முதல் மாலை, 6:00 மணி வரை பல்லடத்திலும் கடையடைப்பு போராட்டம் நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.

