/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நீலகிரி தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் யார்? அவிநாசி வாக்காளர்கள் எதிர்பார்ப்பு
/
நீலகிரி தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் யார்? அவிநாசி வாக்காளர்கள் எதிர்பார்ப்பு
நீலகிரி தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் யார்? அவிநாசி வாக்காளர்கள் எதிர்பார்ப்பு
நீலகிரி தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் யார்? அவிநாசி வாக்காளர்கள் எதிர்பார்ப்பு
ADDED : மார் 20, 2024 12:24 AM
திருப்பூர்;நீலகிரி லோக்சபா தொகுதியில் அ.தி.மு.க., சார்பில் போட்டியிட, 68 பேர் விருப்ப மனு வழங்கியுள்ள நிலையில், இன்று, வேட்பாளர் பட்டியலை வெளியிடப் போவதாக கட்சித்தலைமை அறிவித்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னுார், கூடலுார் சட்டசபை தொகுதிகள், சமவெளியில் மேட்டுப்பாளையம், அவிநாசி, பவானிசாகர் தொகுதி என, ஆறு சட்டசபை தொகுதிகளை உள்ளடக்கிய நீலகிரி லோக்சபா தொகுதியில், அ.தி.மு.க., சார்பில் போட்டியிட, 68 பேர் விருப்ப மனு வழங்கியிருந்தனர்.
இதில், 2006 - 2011ல், அவிநாசி முன்னாள் எம்.எல்.ஏ.,வாக இருந்த பிரேமா, கோவையைச் சேர்ந்த டாக்டர். கணேசன், குன்னுார் நகராட்சி முன்னாள் தலைவர் சரவணகுமார், கடந்த முறை லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு தோற்ற தியாகராஜன், அவிநாசி 'சிட்டிங்' எம்.எல்.ஏ., தனபால் மகன் லோகேஷ் தமிழ்ச்செல்வன் என, ஐந்து பேர் இறுதி பட்டியலில் இருந்தனர்.
நீலகிரி மாவட்ட இளைஞரணி செயலாளர் குருமூர்த்தி, கூடலுார் முன்னாள் எம்.எல்.ஏ., கருப்பசாமி ஆகியோரது பெயரும் கட்சித் தலைமையின் பரிசீலனையில் இருந்ததாக கூறப்படுகிறது.
லோக்சபா தொகுதிக்குட்பட்ட, 6 சட்டசபை தொகுதியில், அவிநாசி சட்டசபை தொகுதி, அ.தி.மு.க.,வின் ஓட்டு வங்கி நிறைந்த தொகுதியாக கருதப்படும் நிலையில், வேட்பாளருக்கு ஓட்டு சதவீதத்தை அதிகரித்துக் கொடுக்கும் தொகுதியாகவும், அவிநாசி உள்ளது.
இந்நிலையில், வேட்பாளர் அறிவிப்பு, அவிநாசி தொகுதி கட்சியினர் மற்றும் வாக்காளர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேர்வு எப்படி இருக்கும்?அ.தி.மு.க., நிர்வாகி ஒருவர் கூறியதாவது:
வேட்பாளர் இறுதி பட்டியலில் உள்ளவர்களில், செலவு செய்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் வாய்ப்புண்டு. இருப்பினும், நீலகிரி தொகுதியில் தி.மு.க., சார்பில் ராஜா, பா.ஜ., சார்பில் மத்திய அமைச்சர் முருகன் போட்டியிடுவது உறுதி எனக்கூறப்படுகிறது.
அவர்களை மையப்படுத்தியே, கட்சித் தலைமை வேட்பாளரை நிறுத்தும். அவர்கள் இருவரும், முன்னாள் மற்றும் இன்னாள் அமைச்சர் என்ற முறையில் மக்கள் மத்தியில் பிரபலமாகியுள்ளனர். அந்த வகையில் நீலகிரி லோக்சபா தொகுதி, வி.ஐ.பி., தொகுதியாகவே அடையாளம் காணப்படுகிறது.
எனவே, அவ்விருவருக்கும் இணையாக, பெயரை கேட்டவுடன் மக்கள் மத்தியில் ஒரு எதிர்பார்ப்பு உருவாகும் வகையிலான வி.ஐ.பி., வேட்பாளரை களமிறக்கவும், கட்சித்தலைமை ஆலோசித்து வருகிறது; அவர், வெளியூரைச் சேர்ந்தவராக கூட இருக்கலாம்.
இவ்வாறு, அவர் கூறினார்.

