/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
உள்ளூரிலே கிடைக்குது தரமான நிலக்கடலை வெளியூரில் கொள்முதல் செய்வது ஏனோ?
/
உள்ளூரிலே கிடைக்குது தரமான நிலக்கடலை வெளியூரில் கொள்முதல் செய்வது ஏனோ?
உள்ளூரிலே கிடைக்குது தரமான நிலக்கடலை வெளியூரில் கொள்முதல் செய்வது ஏனோ?
உள்ளூரிலே கிடைக்குது தரமான நிலக்கடலை வெளியூரில் கொள்முதல் செய்வது ஏனோ?
ADDED : மே 11, 2025 12:58 AM
'நிலக்கடலை சாகுபடியில், தமிழகத்தின் பெரிய ஒழுங்குமுறை விற்பனைக் கூடமாக விளங்கும் சேவூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் இருந்து நிலக்கடலை கொள்முதல் செய்து, விவசாயிகளுக்கு வழங்க வேளாண்மை துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்ற எதிர்பார்ப்பு வலுத்திருக்கிறது.
தமிழகத்தில் விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் நிலக்கடலை சாகுபடி பெருமளவில் மேற்கொள்ளப்படுகிறது.
திருப்பூர் மாவட்டத்தில், அவிநாசி சேவூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான அவிநாசி, ஊத்துக்குளி, பெருமாநல்லுார், அந்தியூர், நம்பியூர் உள்ளிட்ட இடங்களில் மட்டும், மானாவாரி பயிராக, 15 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நிலக்கடலை சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது.
இங்கு விளையும் நிலக்கடலையில், இயற்கையிலேயே எண்ணெய் சத்து அதிகம் என்பதால், நிலக்கடலை எண்ணெய் தயாரிப்புக்கும், கடலை மிட்டாய் மற்றும் சாக்லெட் தயாரிப்புக்கும், வியாபாரிகளால் அதிகளவு கொள்முதல் செய்யப்படுகிறது.
பிற இடங்களில் விளையும் நிலக்கடலையை விட இங்கு விளையும் நிலக்கடலையின் தரம் உயர்ந்ததாக இருப்பதால், சந்தையிலும் மவுசு அதிகம். தனித்துவம் பெற்ற சேவூர் நிலக்கடலைக்கு புவிசார் குறியீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுப்பெற்று வருகிறது.
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க இயற்கை விவசாய அணி பிரிவு மாநில செயலாளர் வேலுசாமி, திருப்பூர் வேளாண் துறை இணை இயக்குனருக்கு அனுப்பியுள்ள மனு:
சேவூர் சுற்றுவட்டார பகுதிகளில், நிலக்கடலை விதைப்பு செய்ய, விவசாயிகள் நிலங்களை தயார் செய்து வருகின்றனர். இரு ஆண்டு முன் வரை, ஆண்டு தோறும், விதைப்பு பருவத்தில், வேளாண் துறையி னரிடம் இருந்து மானிய விலையில் நிலக்கடலை வாங்கி மானாவாரி பயிராக பயிரிட்டு வந்தோம்.
ஆனால், கடந்தாண்டு இதே சித்திரை மாத விதைப்பு பருவத்தில், வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களில், உள்ளூர் நிலக்கடலை போதிய இருப்பு இல்லாததால், குஜராத், ஆந்திரா போன்ற பகுதிகளில் இருந்து, கதிரி லெபாக்சி ரக நிலக்கடலை கொள்முதல் செய்து விற்றனர். உள்ளூர் சந்தை விலையை விட மானியத்தில் வாங்கும் போது விலை அதிகம் என, கடந்தாண்டே, வேளாண் துறை அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்றோம்.
நடப்பாண்டு, விதைப்புக்கு தயாராகி வரும் நிலையில், கிலோ, 123 ரூபாய் என்கின்றனர். ஆனால், வெளிமார்க்கெட் மற்றும் சேவூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில், கிலோ, 65 ரூபாய்க்கு நிலக்கடலை கிடைக்கிறது.
வெளி மார்க்கெட் விலையை விட இரு மடங்கு கூடுதல் விலை கொடுத்து, வேளாண் துறையினரிடம் இருந்து நிலக்கடலை வாங்க வேண்டியிருக்கிறது.
தமிழகத்தின் மிகப்பெரிய நிலக்கடலை விளையும் கேந்திரமாக சேவூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தின் வாயிலாக நிலக்கடலை வாங்கி, மாவட்டத்தின் அனைத்து வட்டாரங்கள் மட்டுமின்றி, பிற மாவட்டங்களுக்கும் வழங்க வேளாண் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.
கடந்தாண்டு இதே சித்திரை மாத விதைப்பு பருவத்தில், வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களில், உள்ளூர் நிலக்கடலை போதிய இருப்பு இல்லாததால், குஜராத், ஆந்திரா போன்ற பகுதிகளில் இருந்து, கதிரி லெபாக்சி ரக நிலக்கடலை கொள்முதல் செய்து விற்றனர்