ADDED : ஏப் 26, 2025 11:29 PM
திருப்பூர் மாவட்டத்தில், சமீப காலமாக கொலை, போதைப்பொருட்கள் புழக்கம் போன்றவை தலை துாக்கியுள்ளன. கஞ்சா, மெத்தபெட்டமைன் என போதைப்பொருட்கள் தாராளமாக கிடைக்கின்றன. இளம் தலைமுறையினர் பலரது வாழ்க்கையை இவை சீரழிக்கின்றன. முதியவர்களைக் குறி வைக்கும் கொடூரம் நடக்கிறது. தொடர் கொலைகள் அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றன.
விலகாத மூவர் கொலை மர்மம்
* 2024 நவ., 28ம் தேதி: பொங்கலுார், சேமலைக்கவுண்டன்பாளையத்தில் தோட்டத்து வீட்டில் வசித்து வந்த தெய்வசிகாமணி, 78, மனைவி அலமேலு, 75. மகன் செந்தில்குமார், 46. ஆகியோர் கொடூரமாக கொல்லப்பட்டனர். கொலை வழக்கில் தனிப்படையினர் பல கட்ட விசாரணை நடத்தியும் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. கடந்த மாதம் இவ்வழக்கு மாவட்ட போலீசாரிடம் இருந்து சி.பி.சி.ஐ.டி., போலீசாருக்கு மாற்றப்பட்டது.
கூலிப்படை நிகழ்த்திய கொலை
* 2024 டிச., 1ம் தேதி: அவிநாசி, வேலாயுதம்பாளையத்தை சேர்ந்தவர் ரமேஷ், 45. கார் கன்சல்டிங் மற்றும் பைனான்ஸ் தொழில் செய்து வந்த இவர் 'வாக்கிங்' சென்ற போது, கூலிப்படையை சேர்ந்த ஐந்துக்கும் மேற்பட்ட கும்பல் ஒன்று கொடூரமாக வெட்டி சாய்த்தது. கொலை தொடர்பாக, எட்டு பேரை போலீசார் கைது செய்தனர்.
அச்சறுத்திய கொடூரங்கள்
* 2025 பிப்., 18ம் தேதி: அவிநாசி, காளிபாளையத்தை சேர்ந்தவர் கோவிந்தசாமி, 54. இவரது சித்தப்பா மகன் அவிநாசி, நேரு வீதியில் வசித்த ரமேஷ், 43. சொத்து பிரிக்கும் பிரச்னையில், கோவிந்தசாமியை கொலை செய்த ரமேஷ், உடலை துண்டு, துண்டாக வெட்டி, தொரவலுார் குளத்திற்குள்ளும், தலையை அனந்தகிரியில் உள்ள கிணற்றிலும் மூட்டை கட்டி வீசினார்.
* 2025 மார்ச் 13ம் தேதி: அவிநாசி, துலுக்கமுத்துார் ஊஞ்சப்பாளையம் ரோட்டில் பெரியதோட்டத்தில் வசித்து வந்த பழனிசாமி, 80, மனைவி பர்வதம், 72. மூத்த தம்பதியின் உறவினரான ரமேஷ், 40 என்பவருடன், ஆடு, மாடுகளை மேய்த்தது தொடர்பாக பிரச்னை இருந்தது. இதனால், ஆத்திரமடைந்த ரமேஷ் மதுபோதையில், தம்பதியின் வீட்டுக்குள் நுழைந்து துாங்கி கொண்டிருந்தவர்களை அரிவாளால் வெட்டி கொலை செய்தார்.
ரவுடியைச் சாய்த்த கும்பல்
* 2025 மார்ச் 19ம் தேதி: சேலத்தை சேர்ந்தவர் ஜான், 30. ரவுடி. குடும்பத்துடன் திருப்பூர் ஊத்துக்குளி ரோடு எஸ்.பெரியபாளையத்தில் தங்கி, டூவீலர், நான்கு சக்கர வாகனங்களுக்கு கடன் கொடுக்கும் நிதி நிறுவனம் நடத்தி வந்தார். போதைப்பொருள் விற்ற வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்த, சேலம் அன்னதானப்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் தினமும் கையெழுத்து போட்டு வந்தார். வழக்கம் போல் கையெழுத்து போட சென்று விட்டு, திருப்பூர் திரும்பி கொண்டிருந்த நிலையில், ஈரோடு, நசியனுார் அருகே தம்பதி வந்த காரை மறித்த கும்பல், மனைவி கண் முன்னே கணவரை கொடூரமாக வெட்டி கொன்றது.
காரணம் என்ன?
ரவுடிகள் அட்ராசிட்டி, போதை பொருட்கள் புழக்கம் போன்றவற்றை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்த தவறியதன் விளைவாக, அடிக்கடி கொடூரமான கொலைகள் அரங்கேறி வருவதற்கு காரணமாக அமைந்துள்ளதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.

