/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
புத்தக திருவிழாவில் அரசியல் எதற்கு? ஹிந்து முன்னணி, பா.ஜ., கண்டனம்
/
புத்தக திருவிழாவில் அரசியல் எதற்கு? ஹிந்து முன்னணி, பா.ஜ., கண்டனம்
புத்தக திருவிழாவில் அரசியல் எதற்கு? ஹிந்து முன்னணி, பா.ஜ., கண்டனம்
புத்தக திருவிழாவில் அரசியல் எதற்கு? ஹிந்து முன்னணி, பா.ஜ., கண்டனம்
ADDED : ஜன 26, 2025 03:38 AM

திருப்பூர்: திருப்பூர் மாவட்ட நிர்வாகம், பின்னல் புக் டிரஸ்ட் சார்பில், புத்தக திருவிழா திருப்பூர் காங்கயம் ரோட்டில் துவங்கி நடந்து வருகிறது.
கடந்த சில ஆண்டுகளாக புத்தக திருவிழாவுக்கு பேச்சாளராக வரக்கூடிய நபர்கள், ஏதாவது சர்ச்சை ஏற்படும் வகையில் பேசி செல்கின்றனர். நேற்று முன்தினம், திரைப்பட இயக்குனர் கரு பழனியப்பன் ஆர்.எஸ்.எஸ்., குறித்து பேசி சர்ச்சையை ஏற்படுத்தினார். இது, ஹிந்து முன்னணி, பா.ஜ., ஆர்.எஸ்.எஸ்., உள்ளிட்ட பலரிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பி, போராட்டம் நடந்தது. இதுதொடர்பாக கலெக்டர் மற்றும் ஸ்டேஷனிலும் புகார் அளித்துள்ளனர்.
இதுகுறித்து, ஹிந்து முன்னணி மாநில பொது செயலாளர் கிஷோர்குமார் கூறியதாவது:
திருப்பூரில் மாவட்ட நிர்வாகம் சார்பில், புத்தக கண்காட்சி நடக்கிறது. இதனை மாவட்ட நிர்வாகம் நடத்தினாலும், பின்னல் புக் டிரஸ்ட் என்ற கம்யூ., சார்பு அமைப்பு இதன் பின்னணியில் உள்ளது. கடந்த ஆண்டும், இதேபோல், ஒரு பேச்சாளரை அழைத்து பேசிய போது சர்ச்சை ஏற்பட்டது.
தற்போது, திரைப்பட இயக்குனர் கரு பழனியப்பன் ஆர்.எஸ்.எஸ்., குறித்து தவறாக பேசியுள்ளார். இது குறித்து, கேட்டவர்களை தாக்கினர். புத்தகம் படிப்பது நல்லது. ஒரு சார்பாக, ஹிந்து மதத்தையும், கடவுளையும், தேசத்தையும் இழிவுபடுத்தும் ஆட்களை பேச அனுமதிக்க கூடாது.
இனி வரும் காலங்களில், புத்தக கண்காட்சியில் இதுபோன்ற நிகழ்ச்சியை நடத்தாமல், கலை நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும். பொது நிகழ்ச்சியாக இருக்க வேண்டும்.
கடந்த பொங்கல் பண்டிகை அன்று மாநகராட்சி சார்பில், நடந்த நொய்யல் பொங்கலின் போது, பிராமண சமுதாயத்தை இழிவுபடுத்தி பேசியது தொடர்பாக புகார் கொடுத்துள்ளோம். இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. இதுதொடர்கதையாக இருந்தால், புத்தக கண்காட்சி நடக்கும் இடம் முன், தொடர் போராட்டம் நடத்துவோம்.
இவ்வாறு, அவர் கூறினார்.
திருப்பூர் வடக்கு மாவட்ட பா.ஜ., முன்னாள் தலைவர் செந்தில்வேல் கூறியதாவது:
புத்தக கண்காட்சியில் சமூக மோதலை துாண்டும் விதமாகவும், சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை அவமதிக்கும் வகையில் இயக்குனர் ஆர்.எஸ்.எஸ்., குறித்து தவறாக பேசியுள்ளார். இதை கேட்ட நிர்வாகிகள் தாக்கப்பட்டனர்.
சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு நிகழ்ச்சியில், சமூக மோதல் துாண்டும் வகையிலான பேச்சாளர்களை அனுமதிக்க கூடாது. புத்தக கண்காட்சி தொடர்ந்து நடக்க வேண்டும். தனிப்பட்ட கட்சி, இதனை கையில் எடுத்து நடத்த கூடாது. தாக்குதல் குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இவ்வாறு, அவர் கூறினார்.

