/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அமர்ஜோதி கார்டன் வழி 'கேட்' மூடப்பட்டது ஏன்?
/
அமர்ஜோதி கார்டன் வழி 'கேட்' மூடப்பட்டது ஏன்?
ADDED : செப் 09, 2025 11:09 PM
திருப்பூர்; மங்கலம் ரோடு, அமர்ஜோதி கார்டன் பகுதியினருக்கு எங்கள் நிலம் வழியாக வழித்தட உரிமையில்லை என, நில உரிமையாளர் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
திருப்பூர், மங்கலம் ரோடு, அமர்ஜோதி கார்டன் குடியிருப்பு பகுதியில் ஏராளமான வீடுகள் உள்ளன. இந்த மனைப்பிரிவுக்கு வடக்கு பகுதியில், மற்றொரு தனியார் நிலம் உள்ளது. நொய்யல் கரைக்குச் செல்லும் வகையில் இந்த இடம் வழியாக ஒரு வழி உள்ளது.
அமர்ஜோதி கார்டன் பகுதியினர் இதனை பயன்படுத்தி வந்தனர். அந்த இடத்தின் உரிமையாளர் தனது இடத்துக்கு பாதுகாப்பு கருதி 'கேட்' அமைத்தார். சமீபத்தில், அதனை அவர் மூடியதால், அமர்ஜோதி கார்டன் பகுதியினர் அந்த வழியைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.
இது குறித்து நிலத்தின் உரிமையாளர்கள் கிருஷ்ணமூர்த்தி மற்றும் ஜெயராமன் கூறியதாவது:
அமர்ஜோதி கார்டன் மனைப்பிரிவுக்கும் எங்கள் நிலத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை. மேலும் அந்த இடத்தை மனைப்பிரிவாக மாற்றம் செய்து விற்பனை செய்தவருடன், 25 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு ஒப்பந்தம் ஏற்படுத்தியதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
அந்த ஒப்பந்தத்துக்கும் எங்கள் நிலத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஏற்கனவே சில ஆண்டுகள் முன்னர், இந்த வழியும், சாக்கடை கால்வாய் கட்ட அனுமதியும் கேட்டனர்.
மாநகராட்சி நிர்வாகம் இது தனியார் இடம் என்று கூறி அனுமதிக்கவில்லை. இது எங்களுக்கு தனிப்பட்ட முறையிலான இடம் மற்றும் வழி. இதில் அமர்ஜோதி கார்டன் பகுதிக்கு எந்த உரிமையும் சட்டரீதியாகவோ, ஆவணங்கள் அடிப்படையிலோ இல்லை.
பழக்கத்தின் அடிப்படையில் அவர்கள் இந்த வழியைப் பயன்படுத்தி வந்தனர். தற்போது அங்கு வாடகைக்கு இருப்போர் தங்கள் பாதுகாப்புக்காக இந்த கேட்டை மூடியுள்ளனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.