/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விவசாய நிலங்களில் காட்டுப்பன்றிகள் தொல்லை! நிலையை தெளிவுப்படுத்திய அரசு செயலர்
/
விவசாய நிலங்களில் காட்டுப்பன்றிகள் தொல்லை! நிலையை தெளிவுப்படுத்திய அரசு செயலர்
விவசாய நிலங்களில் காட்டுப்பன்றிகள் தொல்லை! நிலையை தெளிவுப்படுத்திய அரசு செயலர்
விவசாய நிலங்களில் காட்டுப்பன்றிகள் தொல்லை! நிலையை தெளிவுப்படுத்திய அரசு செயலர்
ADDED : நவ 05, 2024 11:22 PM
திருப்பூர்; 'விவசாய நிலங்களை சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்தும் கோரிக்கை, அரசின் பரிசீலனையில் உள்ளது,' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க திருப்பூர் மாவட்டக்குழு செயலாளர் குமார், 'வன விலங்குகளால் ஏற்படும் உயிர் சேதத்துக்கு, 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்; விவசாய நிலங்களை பாழ்படுத்தும் காட்டுப்பன்றிகள் தொல்லையை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்' என்ற கோரிக்கையை அரசின் கவனத்துக்கு கொண்டு சென்றார்.
இது தொடர்பாக அரசு தலைமைச் செயலர் அளித்துள்ள விளக்கம்:
வன உயிரினங்களை கட்டுப்படுத்தி, பொதுமக்கள் குடியிருக்கும் பகுதிகளில் புகாமல் பாதுகாக்கும் வகையில், வனத்துறை, தங்களால் இயன்ற வரை, வன உயிரினங்களை பாதுகாப்பாக மீட்டு, அப்புறப்படுத்த வனப்பணியாளர்கள் வாயிலாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வன உயிரினங்கள் விவசாய நிலங்களுக்குள் புகாமல் தடுக்க, தொடர்ந்து வன ஊழியர்களை கொண்டு ரோந்துப்பணி மேற்கொள்ள, சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு சிறப்பு களத்தணிக்கை செய்ய அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
மேலும், காட்டுப்பன்றிகளை வனத்துறையால் கண்காணித்து, கையாள்வ தென்பது மிகவும் கடினமான சூழல். எனவே, வன எல்லை பகுதியில் இருந்து, 5 கி.மீ.,க்கு மேல் பயிர்களை சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகளை கொல்வது தொடர்பான வனத்துறை அமைச்சரால் சட்டப்பேரவையில் விவாதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அரசாணை பெறப்பட்டவுடன் மேல் நடவடிக்கை எடுக்கப்படும்.
விவசாய நிலங்களில் வன உயிரினங்களால் ஏற்படும் பயிர் சேதத்துக்கு, புகைப்படங்களுடன் உரிய ஆவணங்களை வனச்சரக அலுவலர் வாயிலாக சமர்ப்பிக்கப்படும் பட்சத்தில், அரசாணைப்படி, முதுநிலை வரிசை எண் அடிப்படையில் நிவாரணத்தொகை வழங்கப்படுகிறது.
தற்போது வன உயிரினங்களால் ஏற்படும் மனித உயிர் இழப்பிற்கு, 5 லட்சம் ரூபாயில் இருந்து, 10 லட்சம் ரூபாய் வழங்க அரசாணையில் தெரிவிக்கப்பட்டு, வழங்கப்பட்டும் வருகிறது. மனித உயிரிழப்புக்கு, 25 லட்சம் ரூபாய் மற்றும் சேதாரமாகும் பயிர்களுக்கு முழு இழப்பீடு வழங்க உரிய அரசாணை கிடைக்கும் பட்சத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.