/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விளைநிலங்களில் துளிர் விடுமா பருத்தி; 'காரீப்' பருவத்தில் எதிர்பார்ப்பு
/
விளைநிலங்களில் துளிர் விடுமா பருத்தி; 'காரீப்' பருவத்தில் எதிர்பார்ப்பு
விளைநிலங்களில் துளிர் விடுமா பருத்தி; 'காரீப்' பருவத்தில் எதிர்பார்ப்பு
விளைநிலங்களில் துளிர் விடுமா பருத்தி; 'காரீப்' பருவத்தில் எதிர்பார்ப்பு
ADDED : ஏப் 06, 2025 09:54 PM
உடுமலை; வரும் காரீப் சீசனில், உடுமலை, குடிமங்கலம் வட்டாரத்தில், பருத்தி சாகுபடி பரப்பை அதிகரிக்க, வேளாண்துறை வாயிலாக சிறப்புத்திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.
உடுமலை, குடிமங்கலம் சுற்றுப்பகுதிகளில், பருத்தி சாகுபடி பிரதானமாக இருந்தது. பி.ஏ.பி., பாசனத்துக்கும், மானாவாரியாகவும், ஆயிரக்கணக்கான ஏக்கரில், பருத்தி சாகுபடி செய்தனர்.
குறுகிய, நீண்ட இழை மற்றும் மிக நீண்ட இழை பருத்தி ரகங்கள், ஆண்டுதோறும் பயிரிடப்பட்டது.
இந்நிலையில், நிலையில்லாத விலை, ஆட்கள் பற்றாக்குறை, பி.ஏ.பி., திட்டம், நான்கு மண்டலமாக விரிவாக்கம், நோய்த்தாக்குதல் உட்பட காரணங்களால், பருத்தி சாகுபடி பரப்பு வேகமாக குறையத்துவங்கியது.
கடந்த, 2009ல், மீண்டும் பருத்தி பயிரிட விவசாயிகள் ஆர்வம் காட்டினர். அப்போது, ஏற்றுமதி வாய்ப்புகள் உட்பட காரணங்களால் நல்ல விலை கிடைத்தது. இதனால், சாகுபடி பரப்பு, நுாற்றுக்கணக்கான ஏக்கர் அதிகரித்தது.
ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக, பருத்திக்கு போதிய விலை கிடைக்காமல், விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
ஏக்கருக்கு, 30 ஆயிரம் ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டதால், கடந்த சீசனில், பருத்தி பயிரிட யாரும் ஆர்வம் காட்டவில்லை. வரும் காரீப் பருவத்தில் பருத்தி சாகுபடி பரப்பை அதிகரிக்க அரசு உதவ எதிர்பார்ப்பு நிலவுகிறது.
விவசாயிகள் கூறியதாவது:
பருத்தி சாகுபடிக்கு, தனியாரிடமே விதைகளை வாங்கி பயன்படுத்துகிறோம். இதற்கு மாற்றாக, வேளாண்துறை வாயிலாக, நல்ல விளைச்சல் கொடுக்கும் ரக விதைகளை அரசு மானியத்தில் வினியோகிக்க வேண்டும்.
அறுவடையின் போது, மத்திய பருத்தி கழகத்தின் வாயிலாக, விவசாயிகளிடமிருந்து நேரடியாக பருத்தியை கொள்முதல் செய்ய வேண்டும்.
இதனால், இடைத்தரகர்கள் ஆதிக்கம் குறைந்து, விவசாயிகளும், நுாற்பாலை நிர்வாகத்தினரும் பயன்பெறுவார்கள். சீரான பருத்தி உற்பத்தி இருக்கும் நிலையில், மூலப்பொருள் தட்டுப்பாடு, நுாற்பாலைகளுக்கு ஏற்படாது.
விவசாயிகளும், தொழிலாளர்களும் பயன்பெறும் வகையில், வரும் காரீப் பருவத்தில், பருத்தி சாகுபடி பரப்பை அதிகரிக்க, வேளாண்துறை வாயிலாக சிறப்பு திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.
இவ்வாறு, விவசாயிகள் தெரிவித்தனர்.