
திருப்பூர்; கோவையில் 'மெட்ரோ ரயில்' திட்டம் வேகமெடுக்கத் துவங்கியிருக்கிறது. விமான நிலையத்தில் இருந்து திருப்பூர் வரை இரண்டாம் கட்டமாக இத்திட்டத்தை நீட்டிக்க வேண்டும். இத்திட்டத்திற்கு முதல்வர் ஸ்டாலின் ஏற்கனவே உறுதியளித்துள்ளதால், முதல் கட்டத்துடன் இரண்டாம் கட்டத்திட்டத்தையும் சேர்த்து துவங்க வேண்டும் என்று தொழில்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுதொடர்பாக முதல்வருக்கு மீண்டும் கடிதம் அனுப்பவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
கோவையில் உள்ள, முக்கியமான ஆறு வழித்தடங்களில், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும், ரோடுகளை இணைக்கும் வகையிலும், மெட்ரோ ரயில் சேவை அமையப்போகிறது. மெட்ரோ ரயில் சேவை திட்டம், 10 ஆயிரத்து, 740 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 39 கி.மீ., நீளத்தில் அமைகிறது. உக்கடம் பஸ் ஸ்டாண்டில் இருந்து, டவுன் ஹால், அவிநாசி ரோடு வழியாக, நீலாம்பூர் வரை, 18 ரயில்வே ஸ்டேஷன்களுடன், சத்தியமங்கலம் ரோட்டில், 14 ரயில்வே ஸ்டேஷன்களுடன் அமைய உள்ளது.
ஒரு மெட்ரோ ரயிலில், மூன்று பெட்டிகள் இருக்கும்; ஒவ்வொரு பெட்டியிலும், தலா, 250 பேர் வரை பயணிக்கலாம்; அதிகபட்சம், 10 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கவும் உத்தேச அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
மெட்ரோ ரயில் சேவை அமையும் போது, ஒட்டுமொத்த கோவை மக்களும் பயன்பெறுவர். எதிர்கால வளர்ச்சியை கருத்தில்கொண்டு, திருப்பூர் வரை, மெட்ரோ ரயில் திட்டத்தை நீட்டிக்க வேண்டுமென, திருப்பூரைச் சேர்ந்த தொழில் அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
மாவட்ட நிர்வாகம், மாவட்ட திட்டக்குழு மற்றும் திருப்பூர் நகர்ப்புற வளர்ச்சிக்குழுமம் வாயிலாக அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
'நிட்மா' - ரோட்டரி ஆலோசனை
பின்னல் துணி உற்பத்தியாளர் சங்கம்(நிட்மா) மற்றும் 'ஜீவநதி நொய்யல்' சங்க நிர்வாகிகள், தெற்கு ரோட்டரி சங்க நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நேற்று, சங்க அலுவலகத்தில் நடந்தது.
கூட்டத்துக்கு தலைமை வகித்த 'நிட்மா' தலைவர் ரத்தினசாமி கூறியதாவது:
மெட்ரோ ரயில் திட்டம், இரண்டு கட்டமாக செயல்படுத்தப்பட உள்ளது; முதல்கட்ட பணிகள் துவங்கியுள்ளன. கோவை வந்த முதல்வர் ஸ்டாலினை சந்தித்து கோரிக்கை விடுத்தபோது, 'கோவை விமான நிலையத்தில் இருந்து திருப்பூர் வரை, மெட்ரோ ரயில் நீட்டிக்கப்படும்' என்று உறுதி அளித்தார்.முதல்கட்ட பணிகள் துவங்கியுள்ளதால், இரண்டாம் கட்ட பணியுடன் சேர்த்து, திருப்பூர் வரை மெட்ரோ ரயில் திட்டம் நீட்டிக்கப்பட வேண்டும். இதுதொடர்பாக, முதல்வருக்கு மீண்டும் கடிதம் அனுப்புகிறோம்.
இவ்வாறு, அவர் கூறினார்.
'நிட்மா' பொதுச்செயலாளர் ராஜாமணி, ஒருங்கிணைப்பாளர் குப்புசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

