/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பின்னலாடை நகருக்கு கைகொடுக்குமா?
/
பின்னலாடை நகருக்கு கைகொடுக்குமா?
ADDED : அக் 02, 2025 11:23 PM
திருப்பூர்:ஐரோப்பிய யூனியனில் உள்ள, நான்கு நாடுகளுடன் அமலாகியுள்ள வரியில்லா வர்த்தக ஒப்பந்தம், திருப்பூருக்கு கைகொடுக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்றுமதியாளர்களிடம் ஏற்பட்டுள்ளது.
நம் நாட்டின் ஏற்றுமதி வர்த்தகத்தை மேம்படுத்தும் வகையில், 10க்கும் மேற்பட்ட நாடுகளுடன், வரியில்லா வர்த்தகம் செய்யப்பட்டுள்ளது. அதிக மதிப்பில் வர்த்தகம் செய்யும் நாடுகளுடன், வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுத்தும் முயற்சியும் நடந்து வருகிறது.
கடந்த 2024 மார்ச் மாதம், ஐரோப்பிய யூனியனில் உள்ள ஐஸ்லாந்து, லீக்கின்ஸ்டைன், நார்வே, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட்டது, நேற்று முன்தினம் இருந்து நடைமுறைக்கு வந்துள்ளது.
அமெரிக்க வரி உயர்வு விவகாரம் நீண்டு கொண்டே இருக்கும் நிலையில், நான்கு நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தம் அமலுக்கு வந்தது, ஆறுதலாக அமைந்துள்ளதாக, ஏற்றுமதியாளர்கள் தெரிவிக்கின்றனர். இதன் மூலம், ஐரோப்பிய யூனியனில் மீதமுள்ள நாடுகளுடனான வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தையும் எளிதாகும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது.
நேரடி கூடுதல் வாய்ப்புகள் சுப்பிரமணியன், தலைவர், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம்: அமெரிக்காவுக்கு மாற்றாக, புதிய சந்தைகளை தேடும் முயற்சி துவங்கிவிட்டது; முடிந்த வரை, அமெரிக்க வர்த்தகத்தை தொடரவே விரும்புகிறோம். ஐரோப்பாவுடன் பேச்சுவார்த்தை தொடரும் நிலையில், ஏற்கனவே கையெழுத்தான நான்கு நாட்களுடன், வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்துள்ளது, ஆறுதலாக இருக்கிறது. இது, திருப்பூருக்கு நேரடியாக கூடுதல் வாய்ப்புகளை வழங்கும்.
புதிய வர்த்தகத்தை துவங்கலாம் இளங்கோவன், தலைவர், அனைத்து ஜவுளி ஏற்றுமதி முகமைகள் கூட்டமைப்பு: ஐரோப்பியாவில் உள்ள, 27 நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுத்தும் பேச்சுவார்த்தை வேகமெடுத்துள்ளது. இந்நிலையில், 2024 மார்ச் மாதம் கையெழுத்தான நான்கு நாடுகளுடன், ஒப்பந்தம் அமலுக்கு வந்துவிட்டது. அந்நாடுகளில், மக்கள் தொகை குறைவு என்பதால், பெரிய அளவு வர்த்தக வாய்ப்பு இருக்காது. இருப்பினும், புதிய வர்த்தகத்தை துவக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. குறு, சிறு நிறுவனங்களுக்கு ஆர்டர்கள் அதிகம் கிடைக்கவும் வாய்ப்புள்ளது.
பிற நாடுகளுடனும் ஒப்பந்தம் முத்துரத்தினம், தலைவர், திருப்பூர் ஏற்றுமதியாளர் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்கம்: திருப்பூரில் உள்ள, பெரிய ஏற்றுமதி நிறுவனங்கள் மட்டுமே, அமெரிக்காவுடன் அதிகம் வர்த்தகம் செய்கின்றன. குறு, சிறு நிறுவனங்கள், நீண்ட நாட்களாக ஐரோப்பியாவுடன்தான் வர்த்தகம் செய்கின்றன. திருப்பூரின் நீண்டகால தொடர்பும், ஐரோப்பாவை சார்ந்தே இருக்கிறது.
ஐரோப்பாவின் நான்கு நாடுகளுடன் வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. பெரிய வர்த்தக நிறுவனங்கள் அந்நாடுகளுடன் வர்த்தகம் செய்து வந்தது; இனி, நேரடியாகவும் வர்த்தகம் செய்ய முயற்சிக்கலாம். நான்கு நாடுகளுடன் ஏற்பட்ட வர்த்தக ஒப்பந்தத்தை அடிப்படையாக கொண்டு, வெகுவிரைவில், மற்ற 24 நாடுகளுடனும் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று நம்புகிறோம்.