/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வேகத்தடை இடையே ஜல்லிக்கல் விபத்துகளை தடுக்குமா?
/
வேகத்தடை இடையே ஜல்லிக்கல் விபத்துகளை தடுக்குமா?
ADDED : ஆக 03, 2025 11:41 PM

பல்லடம்:
பல்லடம் - - பொள்ளாச்சி நெடுஞ்சாலை சமீபத்தில் விரிவாக்கம் செய்யப்பட்டது. அப்போது, 2.5 கி.மீ., இடைவெளிக்குள், 21 வேகத்தடைகள் அமைக்கப்பட்டன. இவற்றால், இவ்வழியாக செல்லும் வாகனங்கள் பலவும் விபத்துக்குள்ளாகின்றன.
வேகத்தடைகளை அகற்றி விட்டு, இணைப்புச் சாலைகளில் வேகத்தடை அமைக்குமாறு, சுல்தான்பேட்டை பகுதி பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதற்காக பல்வேறு போராட்டங்களையும் நடத்திய இப்பகுதி பொதுமக்கள், சமீபத்தில், பொள்ளாச்சி வந்த நெடுஞ்சாலை துறை அமைச்சர் வேலுவை சந்தித்து மனு அளித்தனர்.
ஆய்வு மேற்கொண்டு, உரிய நடவடிக்கை எடுக்குமாறு, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் அமைச்சர் வேலு கூறியிருந்தார். இதன்படி, வேகத்தடைகள் அகற்றப்படும் என பொதுமக்கள் நம்பிக்கையுடன் இருந்தனர். இதற்கிடையே, வேகத்தடைகளை அகற்றாமல், வேகத்தடைகளிலிருந்து வாகனங்களை 'தப்பிக்க' வைக்கும் முயற்சியை நெடுஞ்சாலைத்துறை மேற்கொண்டுள்ளது.
பொதுமக்கள் கூறுகையில், 'அடுக்கடுக்காக அமைக்கப்பட்டுள்ள வேகத்தடைகளுக்கு இடையிலுள்ள இடைவெளிகள் ஜல்லிக்கற்கள் கொண்டு மூடப்பட்டு வருகின்றன. சோதனை முயற்சியாக ஒரு வேகத்தடையில் மட்டும் இது செயல்படுத்தப்பட்டுள்ளது. இதர வேகத்தடைகளுக்கும் இதே முறையை செயல்படுத்த உள்ளதாக நெடுஞ்சாலைத் துறையினர் கூறியுள்ளனர். இதன் மூலம் வாகனங்கள் விபத்துக்குள்ளாவது ஓரளவு குறையும்' என்றனர்.