/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
காலி மது பாட்டில் ஒப்படைப்பு: இங்கும் நடைமுறைக்கு வருமா?
/
காலி மது பாட்டில் ஒப்படைப்பு: இங்கும் நடைமுறைக்கு வருமா?
காலி மது பாட்டில் ஒப்படைப்பு: இங்கும் நடைமுறைக்கு வருமா?
காலி மது பாட்டில் ஒப்படைப்பு: இங்கும் நடைமுறைக்கு வருமா?
ADDED : மார் 01, 2024 12:13 AM
உடுமலை:'மதுக்கடைகளிலேயே காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை, கோவை, திருப்பூர் பகுதிகளிலும் நடைமுறைப்படுத்த வேண்டும்' என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
'டாஸ்மாக்' கடைகளில் விற்கப்படும் மதுபாட்டில்களை வாங்கும் மது பிரியர்களில் பெரும்பாலானோர், திறந்தவெளியில் அமர்ந்து மது அருந்திவிட்டு, மதுபாட்டில்களை கால்வாய், விவசாய நிலங்கள், பயணியர் நிழற்கூரை உள்ளிட்ட இடங்களில் வீசிவிட்டு செல்கின்றனர்.
நகர்ப்புறங்களை காட்டிலும், கிராமப்புறங்களில் இதுபோன்ற செயல்கள் அதிகளவில் நடக்கின்றன. விவசாய நிலங்கள், மழைநீர் வடிகால்களில் வீசியெறியப்படும் பாட்டில்கள் உடைந்து, அதன் துகள், மண்ணில் கலந்து விடுகிறது.
அந்நிலங்களில் இறங்கி வேலை செய்யும் விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் மற்றும் நுாறு நாள் திட்ட தொழிலாளர்களின் கால்களை, மதுபாட்டில் துண்டுகள் பதம் பார்க்கின்றன.
அங்கு மேய்ச்சலுக்கு விடப்படும் கால்நடைகளுக்கும், அவை, பாதிப்பை ஏற்படுத்துகின்றன; அதோடு, விவசாய நிலமும் பாழாகிறது. சாக்கடை, மழைநீர் வடிகால்களில் வீசியெறியப்படும் மதுபாட்டில்களால் அடைப்பு ஏற்பட்டு, மழைநீர் வெளியேற முடியாத நிலை ஏற்படுகிறது.
எனவே, நீலகிரி மாவட்டத்தில் உள்ளது போன்று, மதுக்கடைகளில் இருந்து வாங்கும் மதுபாட்டில்களை திரும்ப ஒப்படைக்கும் திட்டத்தை திருப்பூர், கோவை மாவட்டங்களிலும் செயல்படுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

