/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தொழிலாருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி மனது வைக்குமா மாவட்ட நிர்வாகம்
/
தொழிலாருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி மனது வைக்குமா மாவட்ட நிர்வாகம்
தொழிலாருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி மனது வைக்குமா மாவட்ட நிர்வாகம்
தொழிலாருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி மனது வைக்குமா மாவட்ட நிர்வாகம்
ADDED : செப் 05, 2025 09:54 PM
உடுமலை,; உடுமலை தாலுகாவுக்குட்பட்ட குடிமங்கலம் பகுதியில், நுாற்பாலை சார்ந்த தொழிற்சாலைகளில், ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெற்று வந்தனர். கிராமப்புறங்களின் மேம்பாட்டுக்கு, நுாற்பாலை தொழில் முக்கிய பங்கு வகித்து வந்தது.
இதையொட்டி, அரசால், குடிமங்கலத்தில், தொழிற்பேட்டையும் அமைக்கப்பட்டது. பல்வேறு காரணங்களால், இப்பகுதியில் பெரிய, சிறிய நுாற்பாலைகள் மூடப்பட்டு, தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு இழந்தனர்.
இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக, திருப்பூரில், இருந்து பல்வேறு நிறுவனங்கள், குடிமங்கலம் ஒன்றிய பகுதியில், பின்னலாடை சார்ந்த, தொழிற்சாலைகளை துவங்க ஆர்வம் காட்டி வருகின்றன.
ஆயத்த ஆடை தயாரிப்புக்கான சிறு, குறு தொழிற்சாலைகள், அனைத்து பகுதிகளிலும் துவங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், நுாற்பாலை சார்ந்த தொழில்களில், அதிக அனுபவம் பெற்ற, தொழிலாளர்கள், பின்னலாடை சார்ந்த பணிகளில், அனுபவம் இல்லாமல், திணறும் நிலை காணப்படுகிறது.
இதே போல், படித்த இளைஞர்களும், பின்னலாடை சார்ந்த பயிற்சி பெற ஆர்வத்துடன் உள்ளனர். வளர்ந்து வரும் தொழிலில் பணியாற்ற, ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தயாராக இருந்தாலும், அனுபவமின்மை அவர்களது தயக்கத்தை கூடுதலாக்குகிறது.
இந்நிலையில், திருப்பூரில், மத்திய, மாநில அரசின் பல்வேறு திட்டங்களின், கீழ், கல்லுாரிகளுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டு, திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படுகிறது.
இப்பயிற்சி பெறும் தொழிலாளர்களுக்கு, திறன் அங்கீகார சான்றும், ஊக்கத்தொகையும் வழங்கப்படுகிறது. இத்தகைய சான்று பெற்ற தொழிலாளர்களுக்கு, பின்னலாடை நிறுவனங்களில், முக்கியத்துவம் அளிக்கப்பட்டு, பணி வாய்ப்பு வழங்கப்படுகிறது.
எனவே, திருப்பூர் மாவட்ட நிர்வாகம், குடிமங்கலம் ஒன்றிய பகுதியில், தொழிலாளர்களுக்கு, சிறப்பு திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் நடத்த வேண்டும். இதனால், ஆயிரக்கணக்கான கிராமப்புற தொழிலாளர்கள் பயன்பெறும் வாய்ப்புள்ளது.