/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாலை நேர உழவர் சந்தை... உயிர்பெறுமா? சிக்கல் களைவதில் சிரமங்கள்
/
மாலை நேர உழவர் சந்தை... உயிர்பெறுமா? சிக்கல் களைவதில் சிரமங்கள்
மாலை நேர உழவர் சந்தை... உயிர்பெறுமா? சிக்கல் களைவதில் சிரமங்கள்
மாலை நேர உழவர் சந்தை... உயிர்பெறுமா? சிக்கல் களைவதில் சிரமங்கள்
ADDED : பிப் 21, 2026 06:25 AM

திருப்பூர்: திருப்பூரில் மாலை நேர உழவர் சந்தை பெயரளவுக்குச் செயல்படுகிறது; ''விவசாயிகளுக்கு நடைமுறைச்சிக்கல் இருப்பதும்; பொதுமக்கள் மாலை நேரத்தில் வாங்க ஆர்வம் காட்டாததும்தான் இதற்குக் காரணம்'' என்கின்றனர் அதிகாரிகள்.
திருப்பூர், பல்லடம் ரோட்டில், தெற்கு உழவர் சந்தை; புதிய பஸ் ஸ்டாண்ட் பின்புறம் வடக்கு உழவர் சந்தை ஆகியன செயல்படுகின்றன. மாவட்ட வேளாண் வணிகம் மற்றும் விற்பனைத்துறை மூலம் தெற்கு உழவர் சந்தையில், கடந்த, 2022ல் மாலை நேர உழவர் சந்தை துவங்கப்பட்டது. மாலை 4:00 முதல் இரவு 8:00 வரை செயல்பட்டு வருகிறது. ஆனால், மாலை நேர உழவர் சந்தை குறித்து பெரும்பாலானோருக்கு தெரியாத நிலை உள்ளது.
காலை துவங்கி மதியம் வரை விளைநிலத்தில் இறங்கி வியர்வை சிந்தி பணியாற்றும் விவசாயிகள், 'அப்பாடா' என அமர்வது மாலை நேரம் தான். இந்நேரங்களிலும் தாங்கள் விளைவித்த காய்கறிகளை சந்தைக்கு கொண்டு வர ஆயத்தமாவது, காய்கறி, கீரை மூட்டைகளை வாகனங்களில் ஏற்றி இரவு மற்றும் அதிகாலையில் சந்தைக்கு கொண்டு வர தயாராவது உள்ளிட்ட பணிகளில் விவசாயிகள் கவனம் செலுத்துகின்றனர். தவிர, காலை, மதியம் பணி; மாலை, இரவில் ஓய்வு என்பது பழக்கப்பட்டதாகி விட்டது.
விவசாய வேலை முழுக்க உடல் உழைப்பு அதிகம் என்பதால், விவசாயிகள் நேரடியாக சந்தைக்கு கூட வராமல் சந்தைக்கு வருவோரிடம் பொருட்களை கொடுத்து அனுப்புவது, முடிந்தால் தோட்டத்துக்குள்ளே பொருட்களை வியாபாரிக்கு விற்றுவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இதனால், மாலை நேர உழவர் சந்தைக்கு விளை பொருட்களை மிகக் குறைவானவர்களே கொண்டு வருகின்றனர்.
''மாலை நேரம் உழவர் சந்தையில் விற்பனை அதிகரித்தால், விவசாயிகள் ஓரளவுக்காவது ஆர்வம் காட்டுவர்; அத்தகைய சூழ்நிலை இல்லாததும், மாலை நேர உழவர் சந்தை மந்தமாகச் செயல்படுவதற்குக் காரணம்'' என்கின்றனர் விவசாயிகள்.
துவங்கிய திட்டத்தை கைவிட்டு விடக்கூடாது என்பதால், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள், கருப்பட்டி, பனங்கற்கண்டு, நாட்டுச்சர்க்கரை, உப்பு, சிறுதானியங்கள், மரபு சார்ந்த அரிசி வகைகள், ஊறுகாய், தேன் உள்ளிட்டவை விற்கும் இடமாக மாலை நேர உழவர் சந்தை உள்ளது.
காலை நேரமே உகந்தது விளைபொருட்களை உற்பத்தி செய்யும் விவசாயிகள் எண்ணிக்கை தொடர்ந்து குறைகிறது. பெரும்பாலானோர் மாலை நேர சந்தையை தேடுவதில்லை. நள்ளிரவு, அதிகாலை நேரத்தை ஒப்பிடும் போது, மாலை நேர உழவர் சந்தைக்கு வாடிக்கையாளர் வரவு குறைவு. விற்பனையும் மிக குறைவு தான். இதனால், சில விவசாயிகள் பொருட்களை கொண்டு வருகின்றனர். எங்களில் பெரும்பாலானோருக்கு காலை நேர உழவர் சந்தை உகந்ததாக உள்ளது. - விவசாயிகள்.
இரு நேரமும் வர முடியுமா? முன்னோடி திட்டமாக திருப்பூர் தெற்கில் மாலை நேர சந்தை செயல்படுகிறது. விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை கொண்டு வர தொடர்ந்து அழைப்பு விடுக்கப்படுகிறது. ஆனால், தோட்டத்துக்கு தண்ணீர் பாய்ச்ச வேண்டும்; கால்நடைகள், விளைநிலம் உள்ளிட்டவற்றை பார்த்துக் கொள்ளவே ஆளில்லை. இரண்டு நேரமும் அங்கு வர முடியுமா என நடைமுறை சிக்கல்களை கூறி, காலையில் மட்டும் பொருள் கொண்டு வருகிறோம் என்கின்றனர் விவசாயிகள். அவர்களது சூழலையும் புரிந்து கொள்கிறோம். - உழவர் சந்தை அதிகாரிகள்.

