/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பொலிவிழந்த பூங்கா புத்தாக்கம் பெறுமா?
/
பொலிவிழந்த பூங்கா புத்தாக்கம் பெறுமா?
ADDED : ஏப் 15, 2025 11:51 PM

அனுப்பர்பாளையம்; திருப்பூர் மாநகராட்சி, முதலாம் வார்டு, செட்டிபாளையம், பகுதி முன்னர் ஊராட்சியாக இருந்தபோது, நமக்கு நாமே திட்டத்தின் கீழ், 2011ல், 8 லட்சம் ரூபாய் மதிப்பில் பூங்கா அமைக்கப்பட்டது.
பூங்காவில், பெரியவர்கள் நடை பயிற்சி மேற்கொள்ள நடைபாதை, சிறுவர்கள் விளையாட விளையாட்டு உபகரணங்கள், அமர இருக்கைகள், புல் தரை என அனைத்து வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தொடர்ந்து, அப்பகுதி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு தற்போது ஒன்றாவது வார்டாக செயல்பட்டு வருகிறது. திருப்பூர் மாநகராட்சி சார்பில், முறையாக பராமரிக்கப்படவில்லை.
இதனால், பூங்கா முழுவதும் முட்புதர் மண்டி உள்ளது. சிறுவர் விளையாட்டு சாதனங்கள் பயனற்ற நிலையில் உள்ளது. இருக்கைகள் உடைந்து போய் உள்ளன. நடைபாதையும் உடைந்து சிதைந்து போய் உள்ளது. மழை நேரங்களில் புல் தரை பகுதியில் மழை நீர் தேங்கி சேறும் சகதியுமாக உள்ளது.
பூங்காவில் அதிக அளவில் மரங்கள் உள்ளன. மரத்தின் இலைகள் விழுந்து நடைபாதை முழுவதும் குப்பைகளாக உள்ளது.
அப்பகுதியினர் கூறுகையில், 'மாநகராட்சி சார்பில், முறையாக பராமரிப்பது இல்லை. இதனால் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இப்பகுதியில் பொழுது போக்கு இடம் இல்லை. பூங்கா மட்டுமே உள்ளது. மாநகராட்சி நிர்வாகம் புதுப்பித்து கொடுத்தால் உபயோகமாக இருக்கும்,' என்றனர்.

