/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குப்பை பிரச்னை அடியோடு ஒழியுமா?
/
குப்பை பிரச்னை அடியோடு ஒழியுமா?
ADDED : ஜன 02, 2026 05:36 AM
திருப்பூர்: திருப்பூர், 14 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட சிறப்பு நிலை மாநகராட்சி. சராசரியாக 750 மெட்ரிக் டன் குப்பைக் கழிவுகள் தினமும் வெளியேற்றப்படுகிறது.
இந்த கழிவுகளை தரம் பிரித்து பெற்று அகற்றும் பணிக்கு தனியார் நிறுவனம் ஒப்பந்தம் எடுத்துள்ளது. கழிவுகள் முறையாக தரம் பிரிக்கப்படாமலும், தரம் பிரிக்க முடியாமலும், வாகனங்களில் ஏற்றிக் கொண்டு சென்று பாறைக்குழிகளில் கொட்டப்படும் செயல், இங்கு கடந்த பல ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வந்தது.
கிராமங்களில்கிளம்பிய எதிர்ப்பு கடந்தாண்டு பொங்குபாளையம், காளம்பாளையம் பகுதியில் பாறைக்குழிக்குள் கழிவுகள் கொட்டிய போது மெல்ல எதிர்ப்பு கிளம்பியது. அதன் தொடர்ச்சியாக நெருப்பெரிச்சல், முதலிபாளையம், வேலம்பாளையம், இச்சிப்பட்டி, மொரட்டுப்பாளையம் என பாறைக்குழியைத் தேடி மாநகராட்சி வாகனங்கள் குப்பை கொண்டு சென்ற இடமெல்லாம் எதிர்ப்பு கிளம்பியது.
மக்கள் எதிர்ப்பு, அமைப்புகள் போராட்டம், அரசியல் கட்சியினர் ஒன்றிணைந்து போராட்டங்கள் தொடர்ந்தன. ஐகோர்ட்டிலும், பசுமை தீர்ப்பாயத்திலும் இப்பிரச்னை குறித்து வழக்குகள் தொடரப்பட்டன.
மாநகராட்சிக்குதலைவலி கோர்ட்டும் பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்து முறையாக இவற்றை கையாள சில வழிமுறைகளை பின்பற்றவும் அறிவுறுத்தியது. குப்பை விவகாரம் கடந்த 3 முதல் 4 மாதங்கள் மாநகராட்சிக்கு பெரும் தலைவலியாகவே அமைந்தது.
அதே சமயம் இப்பிரச்னைகள் தீர்வாகவும் சில முக்கிய நடவடிக்கைகளுக்கு வழி ஏற்படுத்துவதாகவும் அமைந்தது என்பதையும் மறுப்பதற்கில்லை.
நடவடிக்கைகள்துவக்கம் திடக்கழிவு மேலாண்மையில் பல ஆண்டுகளாக கிடப்பில் போட்டுக் கிடந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள மாநகராட்சி நிர்வாகம் தட்டுத் தடுமாறி சில பணிகளை துவங்கியது. இறைச்சி கழிவுகள், தொழிற்சாலை கழிவுகள் கையாளும் வகையிலான நடவடிக்கை குறித்து உரிய அமைப்புகளுடன் ஆலோசனை செய்து சில அறிவிப்புகளை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டது. அதனடிப்படையில் கண்காணிப்பும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வீடுகளில் குப்பையை தரம் பிரித்து வழங்க விழிப்புணர்வு ஏற்படுத்துதல், அதற்கான குப்பைத் தொட்டி வழங்குதல் போன்ற நடவடிக்கை துவங்கியுள்ளது.
இதுபோன்ற நடவடிக்கை ஓரளவு கை கொடுத்தாலும் நகரம் முழுவதும் ஆங்காங்கே மலை போல் குவிந்து கிடக்கும் குப்பை கழிவுகள் மலைக்க வைக்கிறது. ஏறத்தாழ 50 ஆயிரம் டன் கழிவுகள், தரம் பிரிக்கப்படாமல் கொட்டிக் குவிக்கப்பட்டுள்ளது. இவற்றில் அவ்வப்போது தீ வைக்கப்பட்டு விடுகிறது. இது மேலும் பிரச்னையை துாண்டி விடுவது போல் உள்ளது.
புனே பாணிஇங்கும் வருமா? இவற்றை தரம் பிரிக்கும் வகையில் புனேவில் பயன்படுத்தப்படும் இயந்திரங்களை இங்கும் வாங்கி வந்து பயன்படுத்தும் யோசனையும் மாநகராட்சிக்கு உள்ளது. இந்த யோசனை செயல்பாட்டுக்கு வர வேண்டும்.
மேலும் இது மாநகராட்சி நிர்வாகம் மட்டுமே தீர்வுகாணக்கூடிய பிரச்னை இல்லை. இதற்கு மக்கள் மத்தியிலும் ஒத்துழைப்பு தேவை. நிர்வாகத்தின் வேண்டுகோளுக்கு செவி சாய்த்து, நிர்வாகத்துடன் மக்களும், தன்னார்வ அமைப்புகளும், தொழிற்துறை உள்ளிட்ட வர்த்தகர் அமைப்புகளும் தங்கள் கரங்களை ஒன்றிணைக்க வேண்டும். தனது திட்டங்களை செயல்படுத்த ஒத்துழைக்கும் நிலையில் அதிகபட்சமாக மூன்று மாதங்களுக்குள் குப்பை இல்லாத மாநகராட்சியாக மாற்றப்படும் என நிர்வாகம் உறுதி தருகிறது.
அதே சமயம் சட்டசபைக்கான தேர்தல் நெருங்கி வரும் நிலையில், குப்பை பிரச்னை நிச்சயம் அதில் எதிரொலிக்கும் என்ற கருத்து பரவலாக உள்ளது. இதையும் கருத்தில் கொண்டு மாநகராட்சி நிர்வாகம் கவனமாக தனது காலடியை எடுத்து வைக்க வேண்டும்.
முதல்வர் துவக்கிய திட்டம்: செயல்படாமல் முடக்கம்: கடந்த ஜூலை மாதம் முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்த, பயோ காஸ் உற்பத்தி மையம் அமைக்கும் திட்டம் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட வேண்டும். இது தவிர குப்பை தரம் பிரித்து மின் உற்பத்தி மையம் அமைக்க, திருப்பூர், கோவை மற்றும் ஈரோடுமாநகராட்சிகள் இணைந்து செயல்படுத்த திட்டமிட்டுள்ள, தினமும் 2 ஆயிரம் மெட்ரிக் டன் குப்பையை கையாளும் மையம் துவங்கப்பட வேண்டும். இதன் மூலம் குப்பை பிரச்னைசற்று மட்டுப்படும்.

