/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பாழடைந்து வரும் கிராமப்புற நுாலகங்கள் நிதி ஒதுக்க முன்வருமா அரசு
/
பாழடைந்து வரும் கிராமப்புற நுாலகங்கள் நிதி ஒதுக்க முன்வருமா அரசு
பாழடைந்து வரும் கிராமப்புற நுாலகங்கள் நிதி ஒதுக்க முன்வருமா அரசு
பாழடைந்து வரும் கிராமப்புற நுாலகங்கள் நிதி ஒதுக்க முன்வருமா அரசு
ADDED : டிச 27, 2024 10:57 PM
உடுமலை ; பயன்பாடு இல்லாமல், பாழாகி வரும், அண்ணா மறுமலர்ச்சி திட்ட நுாலக கட்டடங்களை புதுப்பித்து, மீண்டும் நுாலகத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.
தமிழகம் முழுவதும், ஊராட்சிகளில், 2006 - 2011 தி.மு.க., ஆட்சிக்காலத்தில், அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், நுாலகங்கள் துவங்கப்பட்டது.
உடுமலை, குடிமங்கலம் ஒன்றிய கிராமங்களில், அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் நுாலகங்களுக்கு தனியாக புதிதாக கட்டடம் கட்டப்பட்டது. ஒன்றிய மற்றும் ஊராட்சி நிர்வாகங்களின் கண்காணிப்பில், அங்கு, நுாலகங்கள் செயல்பட துவங்கின.
மாவட்ட நுாலக ஆணைக்குழுவின், பகுதி நேர நுாலகம் இல்லாத கிராமங்கள் தவிர்த்து, பிற கிராமங்களில், அண்ணா மறுமலர்ச்சி திட்ட நுாலகங்கள் துவக்கப்பட்டு, நுாலகத்துக்கு அதே பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு ஊழியர் ஒருவர் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டனர்.
நாளிதழ்கள், மாத இதழ்கள் மற்றும் போட்டித்தேர்வுக்கு தயாராகும் இளைஞர்களுக்கான புத்தகங்கள், நுாலகத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. வாசிப்புக்காக, தொலைதுாரம் பயணிக்க வேண்டிய நிலையில் இருந்த மக்கள், இந்நுாலகத்தை பயன்படுத்த அதிக ஆர்வம் காட்டினர்.
தி.மு.க., ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட இத்திட்டம், அ.தி.மு.க., ஆட்சிக்காலத்தில் கண்டுகொள்ளப்படவில்லை. புதிய புத்தகங்கள் ஒதுக்கீடு செய்யாமல், சம்பளமும் முறையாக ஒதுக்கீடு செய்யாததால், நுாலகங்கள் செயல்பாட்டில் தொய்வு ஏற்பட்டது.
அதன்பின், படிப்படியாக அனைத்து நுாலகங்களும் செயல்பாடு இல்லாமல் முடங்கின. தற்போது, நுாலக கட்டடங்கள் பராமரிப்பின்றி, எந்நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் காணப்படுகின்றன. சில ஊராட்சிகளில், கட்டடங்களை குடோனாக மாற்றி, பொருட்களை இருப்பு வைக்க பயன்படுத்தி வருகின்றனர். ஜன்னல் உள்ளிட்ட பொருட்களும், மாயமாகி வருகிறது.
அரசு நடத்தும் போட்டித்தேர்வுகளில் பங்கேற்க, கிராமப்புற இளைஞர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். தேர்வுக்கு தயாராக நகரப்பகுதியிலுள்ள நுாலகங்களுக்கு, வந்து செல்ல வேண்டியுள்ளது. தமிழக அரசு தற்போது 'இல்லம் தேடி கல்வி' திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ், படிக்கும் குழந்தைகளுக்கு, வாசிப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தலாம் என கல்வி ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
ஆனால், கிராமங்களில், நுாலகம் இல்லாததால், கல்வியாளர்கள் கோரிக்கையை செயல்படுத்த முடியாத நிலை உள்ளது. சிறப்பு திட்டத்தின் கீழ், கட்டடங்களை பராமரித்து புதுப்பிக்கவும், நுால்களை ஒதுக்கீடு செய்து, நுாலகத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை தீவிரமடைந்துள்ளது.