/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நஞ்சராயன் குளத்துக்கு பறவை எண்ணிக்கை அதிகரிக்குமா?
/
நஞ்சராயன் குளத்துக்கு பறவை எண்ணிக்கை அதிகரிக்குமா?
நஞ்சராயன் குளத்துக்கு பறவை எண்ணிக்கை அதிகரிக்குமா?
நஞ்சராயன் குளத்துக்கு பறவை எண்ணிக்கை அதிகரிக்குமா?
ADDED : ஆக 01, 2025 10:29 PM

தரைதட்டியிருந்தது நஞ்சராயன் பறவைகள் சரணாலய குளம்; தற்போது, அத்திக்கடவு - அவிநாசி திட்ட நீரால் நிரப்பப்பட்டிருக்கிறது. இது, சரணலாயத்தில் தஞ்சமடையும் பறவைகளுக்கு சாதகமா, பாதகமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
சரணாலயத்தில், 190 உள்நாடு மற்றும் வெளிநாட்டு பறவை இனங்கள் வந்து செல்கின்றன என்பது ஆவணப்படுத்தப்பட்டிருக்கிறது. அக்., துவங்கி டிச., மாதம் வரை ஐரோப்பா உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளில் இருந்தும், பல வகை பறவைகள் விருந்தாளிகளாக வந்து செல்லும். பல்லுயிர் சூழல் பாதுகாப்புக்கு பேருதவி புரியும் இந்த பறவைகளின் இடம் பெயர்வு என்பது, ஆண்டுக்காண்டு அதிகரிக்க வேண்டும் என்பது தான், இயற்கை ஆர்வலர்களின் பேராவலும், எதிர்பார்ப்பும்.நஞ்சராயன் குளம், தற்போது அத்திக்கடவு - அவிநாசி திட்ட நீரால் நிரம்பியிருக்கிறது; 'நிரம்பும் நீர், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும்' என்ற பொதுவான நன்மை. அதையும் தாண்டி 'நீரை திறந்துவிடப்படும் பட்சத்தில், விவசாய நிலங்களுக்கு பயன் தரும்' என்பதுதான், இத்திட்டத்தின் நோக்கம்.
பிற அத்திக்கடவு - அவிநாசி திட்ட குளம், குட்டைகளில் பின்பற்றப்படும் இந்த நடைமுறை, நஞ்சராயன் குளத்துக்கும் பொருந்துமா என்ற கேள்வி எழுகிறது.
திருப்பூர் இயற்கை கழக தலைவர் ரவீந்திரன் கூறுகையில்,'' கடந்த, 2005 முதல், நஞ்சராயன் குளத்தில் பறவை நோக்கலில் ஈடுபட்டு வருகிறோம். குளத்தில் நீர் நிரம்புவதும், பறவைகள் வாழும் சூழலுக்கு ஏற்ப கணிசமான அளவில் நீர் வெளியேறுவதும் பல ஆண்டுகளாக, இயற்கையாகவே நடந்துக் கொண்டிருந்தது. குளத்தில் மதகு அமைத்து நீரை தேக்கி செயற்கையாக வெளியேற்றும் போதும், பறவைகள் சூழலுக்கேற்ற நீர் மேலாண்மையை மேற்கொள்வது அவசியம்; அப்போது தான் பறவைகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்,'' என்றார்.--
நீர் நிரம்பி காட்சி தரும், நஞ்சராயன் குளம்.
- நமது நிருபர் -

