/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
திருமூர்த்திமலையில் பூங்கா திட்டம் இந்தாண்டு நிறைவேறுமா?
/
திருமூர்த்திமலையில் பூங்கா திட்டம் இந்தாண்டு நிறைவேறுமா?
திருமூர்த்திமலையில் பூங்கா திட்டம் இந்தாண்டு நிறைவேறுமா?
திருமூர்த்திமலையில் பூங்கா திட்டம் இந்தாண்டு நிறைவேறுமா?
ADDED : மார் 26, 2025 09:10 PM
உடுமலை; திருமூர்த்திமலையில், பூங்கா அமைக்கும், திட்டம், நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்டுள்ளது; வரும் கோடை சீசனிலாவது இதற்கான பணிகளை துவக்க எதிர்பார்ப்பு நிலவுகிறது.
உடுமலை அருகே, திருமூர்த்தி அணை, மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில், அமைந்துள்ளது. அணை, பஞ்சலிங்க அருவி, அமணலிங்கேஸ்வரர் திருக்கோவில் என அப்பகுதி ஆன்மிக மற்றும் சுற்றுலா தலமாக உள்ளது.
இருப்பினும், சுற்றுலா பயணியரின் பொழுதுபோக்கிற்கு, அப்பகுதியில், பூங்கா இல்லாதது முக்கிய பிரச்னையாக தெரிவிக்கப்பட்டு வந்தது.
அரசு சார்பில் முன்பு நடத்தப்பட்டு வந்த, ஆடிப்பெருந்திருவிழாவில், உடுமலை பகுதியை சேர்ந்த மக்கள் சார்பில், திருமூர்த்தி அணையில், பூங்கா அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து தெரிவிக்கப்பட்டு வந்தது.
பொதுப்பணித்துறை சார்பில், சாம்பல்மேடு பகுதியிலிருந்து திருமூர்த்தி அணை காண்டூர் கால்வாய் வரை, ஒரு ஏக்கர் நிலம் பொதுப்பணித்துறைக்கு உள்ளது.
இந்த நிலத்தில், மரங்கள் நடப்பட்டு, வனத்துறை சார்பில் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த இடத்தை பூங்கா அமைக்க பொதுப்பணித்துறை சார்பில் திட்டமிடப்பட்டது.
அங்குள்ளமரங்களை அகற்றாமல், ஒரு ஏக்கரில் பூங்கா அமைக்க, பொதுப்பணித்துறை சார்பில், 85 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கருத்துரு தயாரிக்கப்பட்டு, சில ஆண்டுகளுக்கு முன் அரசுக்கு அனுப்பபட்டது.
இதில், நீருற்றுகள், சறுக்கு விளையாட்டுகள் மற்றும் குழந்தைகளுக்கான விளையாட்டு உபகரணங்கள் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இவ்வாறு, பூங்கா அமைப்பதற்கான பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது; பின்னர், அரசு நிதி ஒதுக்காததால் பணிகள் அனைத்தும், கிடப்பில் போடப்பட்டுள்ளது.
வரும் கோடை சீசனிலாவது பூங்கா அமைப்பதற்கான பணிகளை துவக்கினால், சுற்றுலா பயணியர் ஆறுதல் அடைவார்கள்.