/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அகற்றப்பட்ட வேகத்தடை மீண்டும் அமைக்கப்படுமா?
/
அகற்றப்பட்ட வேகத்தடை மீண்டும் அமைக்கப்படுமா?
ADDED : ஆக 15, 2025 11:33 PM

பல்லடம், ; முதல்வர் வருகைக்காக அகற்றப்பட்ட வேகத்தடைகள், பொதுமக்களின் நலன் கருதி மீண்டும் அமைக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு பல்லடத்தில் எழுந்துள்ளது.
முதல்வர் ஸ்டாலின், பல்வேறு நலத்திட்டப் பணிகளை துவக்கி வைக்க, கடந்த மாதம், திருப்பூர் மாநகருக்கு வருகை தருவதாகவும், அதன்பின், உடுமலையில் நடைபெற உள்ள நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும் திட்டமிடப்பட்டிருந்தது.
ஆனால், உடல் நலக்குறைவு காரணமாக, முதல்வர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், திட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. இதனால், ஆக., 11ல், திருப்பூர் மாநகரை தவிர்த்து, உடுமலையில் நடக்கும் நிகழ்ச்சிகளில் மட்டும் முதல்வர் பங்கேற்றார்.
முன்னதாக, கடந்த மாதம் முதல்வர் வருவதாக அறிவிப்பு வெளியானதும், அனைத்து துறை அதிகாரிகளும் அதற்கான முன்னேற்பாடு பணிகளில் ஈடுபட்டனர். அதன்படி, திருப்பூர் கோட்ட நெடுஞ்சாலைத் துறையினர், திருப்பூர் முதல் உடுமலை வரை, நெடுஞ்சாலைகளில் இருந்த வேகத்தடைகள் அனைத்தையும் அகற்றினர். அகற்றப்பட்ட வேகத்தடைகள் மீண்டும் அமைக்கப்படாததால், விபத்து அபாயங்கள் ஏற்பட்டு வருகின்றன.
திருப்பூர் - பல்லடம் - உடுமலை ரோடு, வாகன போக்குவரத்து நிறைந்த நெடுஞ்சாலை. இவற்றில், வாகனங்கள் அசுர வேகத்தில் செல்வதால், வாகன ஓட்டிகளுக்கு விபத்து அபாயம் ஏற்பட்டு வருகிறது.
எனவே, முதல்வருக்காக அகற்றப்பட்ட வேகத்தடைகளை, வாகன ஓட்டிகள் பொதுமக்களின் நலன் கருதி, மீண்டும் அமைக்க நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.