/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
முடங்கிய வனத்துறை சூழல் சுற்றுலா திட்டம் செயல்பாட்டுக்கு வருமா? சிதிலமடைந்து வரும் அதன் கட்டமைப்புகள்
/
முடங்கிய வனத்துறை சூழல் சுற்றுலா திட்டம் செயல்பாட்டுக்கு வருமா? சிதிலமடைந்து வரும் அதன் கட்டமைப்புகள்
முடங்கிய வனத்துறை சூழல் சுற்றுலா திட்டம் செயல்பாட்டுக்கு வருமா? சிதிலமடைந்து வரும் அதன் கட்டமைப்புகள்
முடங்கிய வனத்துறை சூழல் சுற்றுலா திட்டம் செயல்பாட்டுக்கு வருமா? சிதிலமடைந்து வரும் அதன் கட்டமைப்புகள்
ADDED : ஜன 21, 2025 11:49 PM

உடுமலை : உடுமலை, அமராவதி வனச்சரகத்தில், இயற்கை மீதான ஆர்வத்தை அதிகரிக்கவும், மலைவாழ் மக்கள் மேம்பாட்டிற்காகவும் வனத்துறை சார்பில் துவக்கப்பட்ட சூழல் சுற்றுலா திட்டம் முடங்கியதோடு, அதற்காக அமைக்கப்பட்ட கட்டமைப்புகளும் வீணாகி வருகிறது.
மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள, ஆனைமலை புலிகள் காப்பகம், அரிய உயிர்ச்சூழல் மண்டலங்களில் ஒன்றாக உள்ளது.
மரம், செடி, கொடிகள் பசுமையான காணப்படும் அடர் வனம், யானை, சிறுத்தை, மான், காட்டுமாடு, உள்ளிட்ட பல்வேறு வகை வன விலங்குகள், அரிய வகை பறவைகள் என பல்லுயிரினங்களின் வாழ்விடமாகவும், வனத்தில் ஓடைகள், காட்டாறுகள் என அற்புதமான சூழல் மண்டலமாக உள்ளது.
பொதுமக்கள், மாணவர்களுக்கு இயற்கை மீதான ஆர்வத்தை அதிகரிக்கும் வகையிலும், மலைவாழ் மக்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையிலும், சூழல் சுற்றுலா திட்டத்தை, வனத்துறையினர் கடந்த, மூன்று ஆண்டுக்கு முன் துவக்கினர்.
சின்னாறில் கட்டமைப்பு
முதல் கட்டமாக, உடுமலை, அமராவதி வனச்சரகத்தில், தளிஞ்சி சூழல் மேம்பாட்டு குழு மற்றும் வனத்துறையினரால் துவக்கப்பட்டு, தளிஞ்சியில், முழுவதும் இயற்கை சூழலில், மலைவாழ் மக்கள் மரபு கட்டடம் உள்ளிட்டவற்றுடன், சூழல் சுற்றுலா திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ், சின்னாறில் துவங்கி, சின்னாறு, காட்டாறு வரை, வனத்திற்குள், 5 கி.மீ., துாரம், வன விலங்குகள், பறவைகள் மற்றும் பசுமையை ரசித்துக்கொண்டு நடைப்பயணம், கூட்டாறில் பரிசல் பயணம், மலைவாழ் மக்கள் பாரம்பரிய குடிசையில் தங்கல், உணவு என ஒரு நாள் முழுவதுமான வனச்சுற்றுலாவாக வடிவமைக்கப்பட்டது.
பொதுமக்களுக்கு மட்டுமின்றி, பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு, இயற்கை, வனம், வன விலங்குகள், பறவைகள், மரங்கள், வண்ணத்துப்பூச்சிகள், நமது நீர்ப்பிடிப்பு பகுதிகள் என இயற்கையின் அதிசயங்களை அறிந்து கொள்ளும் வாய்ப்பாக அமைந்திருந்தது.
அதிகாரிகள் அலட்சியம்
ஆனால், தொடர்ந்து இத்திட்டத்தை செயல்படுத்துவதில் வனத்துறை அதிகாரிகளின் அலட்சியம், போதிய விழிப்புணர்வு, விளம்பர பணிகள் மேற்கொள்ளாதது உள்ளிட்ட காரணங்களினால், துவங்கிய ஒரு சில மாதங்களில் திட்டம் முடங்கியது.
இதனால், சூழல் சுற்றுலா திட்டத்திற்காக, சின்னாறு பகுதியில் பல லட்சம் ரூபாய் செலவில், இயற்கை சூழலில் அமைக்கப்பட்ட, பாரம்பரிய குடிசை, தங்கும் விடுதிகள், உணவு விடுதி உள்ளிட்ட கட்டமைப்புகளும், கூட்டாற்றில் பயணம் செய்யும் வகையிலான பரிசல் ஆகியவை சிதிலமடைந்து, சூழல் சுற்றுலா திட்ட கட்டமைப்புகள் மாயமாகி வருகிறது.
அதே போல், அடுத்தகட்டமாக, உடுமலை, அமராவதி, கொழுமம், வந்தரவு வனச்சரகங்களிலும், சூழல் சுற்றுலா திட்டம் உருவாக்குவது, புதிதாக ஏழு வழித்தடங்களில் 'டிரக்கிங் ரூட்', வழித்தடங்களில் அமைந்துள்ள காட்சிமாடங்களில் களப்பயணம், தங்கல் என, பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படும் என வனத்துறை அறிவித்த திட்டங்களும் செயல்பாட்டிற்கு வரவில்லை.
அதிகாரிகள் அலட்சியத்தால் முதற்கட்ட திட்டமே முடங்கியதால், இரு வனச்சரகங்களிலும் உள்ள, 15 மலைவாழ் மக்கள் குடியிருப்புகளில் வசிக்கும் மக்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.
திருமூர்த்திமலை, சின்னாறு, கோடந்துார் கட்டளை மாரியம்மன் கோவில் என, வனப்பகுதிகளிலேயே, சுற்றுலா மையங்கள் அமைந்துள்ளதோடு, கேரளா மாநிலம், மறையூர், மூணாறு சுற்றுலா மையங்களின் வழித்தடத்தில் அமைந்துள்ளதால், சுற்றுலா வருவாய் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.
ஒன்பதாறு சோதனை சாவடியில், வனத்திற்குள் செல்ல நுழைவுக்கட்டணம் வசூலிக்கும் வனத்துறை, சூழல் சுற்றுலா திட்டத்தை கண்டு கொள்ளவில்லை.
மறு புறம், கேரளா மாநில வனத்துறை, மலைவாழ் மக்களுடன் இணைந்து, பல சூழல் சுற்றுலா திட்டங்களை செயல்படுத்தி வருவதோடு, அதிகளவு சுற்றுலா பயணியரை ஈர்த்து வருகிறது.
ஆனால், தமிழக பகுதியில், சூழல் சுற்றுலா திட்டங்கள் வனத்துறை அதிகாரிகளின் அலட்சியம் காரணமாக வீணாகி வருகிறது.
எனவே, இயற்கை விழிப்புணர்வு மற்றும் மலைவாழ் மக்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் இத்திட்டத்தை மீண்டும் செயல்படுத்தவும், கூடுதல் வழித்தடம், சூழல் அமைப்புகளுடன் மேம்படுத்தவும் வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.