/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குறு, சிறு தொழில்களின் வரிச்சுமை குறையுமா?
/
குறு, சிறு தொழில்களின் வரிச்சுமை குறையுமா?
ADDED : ஜன 29, 2025 11:01 PM

திருப்பூர்; மத்திய அரசின், 2025-26ம் ஆண்டுக்கான பட்ஜெட், வரும் 1ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. நாடு முழுவதும் உள்ள தொழில்துறையினர், மத்திய அரசு பட்ஜெட் அறிவிப்புகளை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். மின் கட்டணம், வரி உயர்வுகளால், குறு, சிறு தொழில்கள் கடும் நிதிச்சுமைக்கு ஆளாகியுள்ளன; இந்த பட்ஜெட் வாயிலாக, வரிச்சலுகை அறிவிக்கப்படுமா என்ற எதிர்பார்த்துடன் பலரும் காத்திருக்கின்றனர்.
வளம் குன்றா வளர்ச்சி
ஏற்றுமதியாளர்கள் பயன்பெறும் வகையில், மத்திய பட்ஜெட்டில், வட்டி சமன்படுத்தும் திட்டத்தை மீண்டும் நீட்டிக்க வேண்டும். 'டியூட்டி டிராபேக்' சலுகையை, 10 சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும். 'டப்' திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும். வளம் குன்றா வளர்ச்சி நிலை உற்பத்தி ஆடைகளை பிரத்யேகமாக காட்சிப்படுத்த, தனி வர்த்தக குறியீடு உருவாக்க வேண்டும்.
- சுப்பிரமணியன்
'டீ' சங்க தலைவர்
பசுமை ஆடைகளுக்கு...
'பேக்கிங் கிரெடிட்' மீதான வட்டி மானியத்தை, 5 சதவீதமாக உயர்த்தி அறிவிக்க வேண்டும். பசுமை ஆடைகளுக்கான புதிய வர்த்தக குறியீட்டை உருவாக்கி, அதிகபட்ச ஊக்கத்தொகை மற்றும் வரிச்சலுகைகள் வழங்கப்பட வேண்டும். கன்டெய்னர் தட்டுப்பாட்டை போக்க, இந்திய கன்டெய்னர் நிறுவனத்தை துவக்க வழிகாட்ட வேண்டும்.
- இளங்கோவன்
'அபாட்' தலைவர்
பொதுவான விதி
வங்கதேசத்துடன் வரியில்லாத வர்த்தக ஒப்பந்தம் இருப்பதால், ஆயத்த ஆடை அதிகம் இறக்குமதியாக, நெருக்கடி நிலையை உருவாக்கியுள்ளது. இனியும் தாமதம் செய்யாமல், வங்கதேச ஆடை இறக்குமதியை கட்டுப்படுத்தும் வரியை விதிக்க வேண்டும். ஜி.எஸ்.டி., விதிமுறைகளை திருத்தம் செய்து, அனைத்து தொழில்களுக்கும் பொதுவான விதிகளை உருவாக்க வேண்டும்.
- ஈஸ்வரன்
'சைமா' தலைவர்
திறன் பயிற்சி மனித வளம்
உலக அளவிலான ஜவுளித்தொழிலில், இந்தியா 6 வது இடத்தில் இருக்கிறது. ஜவுளித்தொழில் அடுத்தகட்டத்துக்கு உயர, திறன் பயிற்சி பெற்ற மனிதவளம் உருவாக்கப்பட வேண்டும்.பட்ஜெட்டில் ஜவுளித்தொழில் வளர்ச்சிக்கான அறிவிப்புகள் இடம்பெற வேண்டும். குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் வளர்ச்சிக்கான பட்ஜெட்டாகவும் இருக்க வேண்டும். பின்னலாடை தொழில் வளர்ச்சி வாரியம் உருவாக்கப்பட வேண்டும்.
- முத்துரத்தினம்
'டீமா' தலைவர்
வரிச்சுமையால் அவதி
'ஏ-டப்' என்ற திட்டத்தை, கட்டாயம் இந்தாண்டு முதல் செயல்படுத்த வேண்டும். கடந்த சில ஆண்டுகளாக, புதிய தொழில்நுட்பத்தில் உருவான இயந்திரங்களை இறக்குமதி செய்ய முடியவில்லை. இறக்குமதி வரியாக, 27 சதவீதம் வசூலிக்கப்படுகிறது. இதனை ஜி.எஸ்.டி., உள்ளீட்டு வரியாக எடுக்க, ஐந்து ஆண்டாகிறது. புதிய தொழில்முனைவோர் அதிக தொகையை இறக்குமதி வரியாக செலுத்த வேண்டியுள்ளது; சலுகை வழங்க வேண்டும்.
- ஸ்ரீகாந்த்
'டெக்பா' தலைவர்
சலுகை வேண்டும்
ஜி.எஸ்.டி.,யை குறைத்து, குறு, சிறு தொழில்களை பாதுகாக்க வேண்டும். தற்போது ஜி.எஸ்.டி., அதிகம் விதிக்கின்றனர். அவற்றை பாதுகாக்க புதிய வரி சலுகையை அறிவிக்க வேண்டும். அப்போது தான் தொழில் மேம்படும்.
- ரத்தினசாமி
'நிட்மா' தலைவர்
'ஜீரோ டிஸ்சார்ஜ்'
திருப்பூர் சாய ஆலைகளுக்கு மின் கட்டண சுமை அதிகமாக இருக்கிறது. மத்திய அரசு, அதிகபட்ச மானியத்துடன் சோலார் அமைக்கும் திட்டத்தை அறிவிக்க வேண்டும். நாடு முழுவதும் உள்ள சாய ஆலைகளுக்கு, 'ஜீரோ டிஸ்சார்ஜ்' தொழில்நுட்பத்தை அமலாக்க வேண்டும்.
- காந்திராஜன்
சாய ஆலை உரிமையாளர்
சங்க தலைவர்
'டிராபேக்' சலுகை
நடுத்தர தொழில்களை தனியே பிரித்துவித்து, குறு, சிறு தொழில்களுக்கென தனி அமைச்சரகம் உருவாக்கப்பட வேண்டும். பின்னலாடை வளர்ச்சி வாரியம் உருவாக வேண்டும். குறு. சிறு தொழில்களுக்கான வட்டி குறைப்பு அறிவிப்பு இடம்பெற வேண்டும். அனைத்து உப தொழில்களுக்கும் மத்திய அரசின், 'டிராபேக்' சலுகை கிடைக்க வேண்டும்.
- மணி
'டிப்' சங்க தலைவர்
குறைக்க வேண்டும்
அட்டை பெட்டி தயாரிப்பு தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி., வரி, 18 சதவீதமாக இருந்தது; 12 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. உணவு பொருட்களுக்கு அதிகம் அட்டை பெட்டி தயாரிப்பதால், வரியை, 5 சதவீதமாக குறைக்க வேண்டும். மாநில அரசு மின் கட்டண உயர்வுகளை குறைத்தால் மட்டும் தொழில் நடத்த முடியும்.
- சிவக்குமார்
தென்னிந்திய அட்டை பெட்டி
உற்பத்தியாளர் சங்க தலைவர்
ரத்து செய்யுங்க...
மத்திய அரசு 'டப்' திட்டத்தை நிறுத்தியதால், நவீன இயந்திரங்களை இறக்குமதி செய்ய முடியவில்லை; மீண்டும் 'ஏ-டப்' திட்டத்தை செயல்படுத்தி, தொழில்நுட்பத்தை மேம்படுத்த உதவ வேண்டும். 'ஜாப் ஒர்க்' நிறுவனங்களுக்கும், இறக்குமதி வரியை ரத்து செய்ய வேண்டும்.
- ராமசாமி
'ரைசிங்' சங்க தலைவர்
அதிகளவு வரி
தொழிலுக்கு தேவையான உபகரணங்கள் இறக்குமதி செய்ய, குறைந்த வட்டியில் கடனுதவி வழங்கப்பட வேண்டும். அதற்காக, மீண்டும் 'ஏ-டப்' திட்டத்தை செயல்படுத்த வேண்டும். ஒவ்வொரு மூலப்பொருள் இறக்குமதிக்கும், அதிக அளவுவரி செலுத்துகிறோம். இறக்குமதி வரியில் இருந்து, குறு சிறு தொழில்களுக்கு விலக்களிக்கவேண்டும்.
- கோபாலகிருஷ்ணன்
கம்ப்யூட்டர் எம்பிராய்டர்ஸ்
அசோசியேஷன் தலைவர்
முழு விலக்கு வேண்டும்
மறுசுழற்சி பாலிபேக் உற்பத்தி மூலப்பொருட்களுக்கு, 18 சதவீதம் ஜி.எஸ்.டி., விதிக்கப்படுகிறது. சுற்றுச்சூழலை பாதுகாக்கும் இத்தகைய மறுசுழற்சி முயற்சிக்கு அரசு கைகொடுக்க வேண்டும். அந்தவகையில், மறுசுழற்சி பாலிபேக் உற்பத்தி மூலப்பொருளுக்கு, வரியில் இருந்து முழு விலக்கு அளிக்க வேண்டும்.
- சண்முகம்
பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர்