/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ரயில் முன்பதிவு மையம் பல்லடத்தில் அமையுமா?
/
ரயில் முன்பதிவு மையம் பல்லடத்தில் அமையுமா?
ADDED : நவ 02, 2024 11:04 PM
பல்லடம்: ரயில் முன்பதிவு மையம், பல்லடத்தில் அமைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
பல்லடம் வட்டாரத்தில், 6 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். விசைத்தறி, கறிக்கோழி உற்பத்தி, சாய ஆலைகள், பனியன் நிறுவனங்கள், பஞ்சு நுால் மில்கள் மற்றும் தொழிற்சாலைகள் என, பலதரப்பட்ட தொழில்களை சார்ந்து, பல லட்சம் தொழிலாளர்கள் வேலை பார்க்கின்றனர்.
குறிப்பாக, வடமாநில மற்றும் தென் மாவட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள், அதிக அளவில் உள்ளனர். பண்டிகை மற்றும் அரசு விடுமுறை நாட்களில், தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்வது வழக்கம்.
இவ்வாறு செல்லும் தொழிலாளர்கள், பொதுமக்கள் பஸ் போக்குவரத்து மட்டுமன்றி, ரயில் சேவையையும் அதிகளவு பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக, தொலைதுாரம் செல்லும் தொழிலாளர்கள், அதிகளவு ரயில் சேவையைத்தான் பயன்படுத்துகின்றனர்.
சொந்த ஊருக்கு செல்ல ரயில் சேவையை பயன்படுத்த விரும்பும் தொழிலாளர்கள், பொதுமக்கள் திருப்பூர் ரயில்வே ஸ்டேஷன் சென்று முன்பதிவு செய்ய வேண்டும். அல்லது தனியார் கணினி மையங்களுக்கு சென்று கூடுதல் கட்டணம் செலுத்தி புக்கிங் செய்ய வேண்டிய நிலை உள்ளது.
இது, குறைந்த வருவாய் கொண்ட தொழிலாளர்களுக்கு கூடுதல் பண இழப்பை ஏற்படுத்துகிறது. மேலும், திருப்பூர் சென்று முன்பதிவு செய்ய வேண்டுமானால், அங்குள்ள கூட்டம் நெரிசலால் அவதிப்படுவதுடன், நேர விரையமும் ஏற்படுகிறது.
இந்த இடையூறுகளை தவிர்க்க, பல லட்சம் தொழிலாளர்கள் உள்ள பல்லடத்தில், ரயில் முன்பதிவு சேவை மையத்தை அமைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.