/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வலையில் சிக்காத 'திமிங்கிலங்கள்' போலீஸ் கமிஷனர் சாட்டை சுழலுமா?
/
வலையில் சிக்காத 'திமிங்கிலங்கள்' போலீஸ் கமிஷனர் சாட்டை சுழலுமா?
வலையில் சிக்காத 'திமிங்கிலங்கள்' போலீஸ் கமிஷனர் சாட்டை சுழலுமா?
வலையில் சிக்காத 'திமிங்கிலங்கள்' போலீஸ் கமிஷனர் சாட்டை சுழலுமா?
ADDED : மார் 29, 2025 11:21 PM
குட்கா, கஞ்சா, போதை மாத்திரை புழக்கம் சமுதாயத்தில் அதிகமாக உள்ளது. சிறியவர் முதல் பெரியவர் வரை பலரும் போதைக்கு அடிமையாகி தங்கள் வாழ்க்கையை தொலைத்து வருகின்றனர். இன்றைய இளம் தலைமுறையினர் இதன் பாதிப்பு தெரியாமல் பின்னால் சென்று வருகின்றனர்.
சமுதாயத்தில் போதை பொருட்களின் புழக்கத்தை தடுக்க போலீஸ் தரப்பில் பல விதமான நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர். மக்களுக்கு போதை பழக்கத்துக்கு எதிராக விழிப்புணர்வு செய்து வருகின்றனர்.
திருப்பூரை போன்ற தொழிலாளர் அதிகமுள்ள நகரத்தில் வெளி மாவட்ட, மாநிலத்தை சேர்ந்த ஏராளமான மக்கள் குடும்பத்துடன் தங்கி பனியன் சார்ந்த பல தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர். இளைஞர், தொழிலாளர்களை குறி வைத்து போதை கும்பல்கள் எளிதாக புழக்கத்தில் விடுகின்றனர். தமிழகத்தில் கஞ்சா, குட்கா போன்ற போதை பொருட்களுக்கு தடை இருந்தாலும், சட்ட விரோதமாக பல வகையில் கடத்தப்பட்டு நகரில் புழக்கத்தில் விடுகின்றனர். சமீப காலமாக இதன் புழக்கம் கட்டுக்கடங்காமல் உள்ளது.
தனிப்படையினர் கண்காணிப்பு
சில மாதங்களாக மாநகரில் கஞ்சா, குட்கா, போதை பொருட்கள் தொடர்பாக போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவின் பேரில், மூன்று தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். குற்ற தடுப்பு, கண்காணிப்பு பணியை மட்டுமல்லாமல் எந்த வழியில் எல்லாம் நகரில் புழக்கத்துக்கு கொண்டு வருகின்றனர் என்பதை கண்காணிக்கின்றனர். இதுதொடர்பாக பழைய குற்றவாளிகளின் நடவடிக்கையை உற்று நோக்கி வருகின்றனர்.
போதை பொருட்கள் பறிமுதல்
தனிப்படையினர் தீவிர கண்காணிப்பு காரணமாக வெளி மாநிலங்களில் இருந்து கடத்தி வரப்படும் கஞ்சா, மெத்தபெட்டமைன், ஹெராயின் போன்றவற்றை சமீபத்தில் பறிமுதல் செய்து, 15 பேரை கைது செய்தனர். இவை அனைத்தும் பெங்களூரில் இருந்து ரயில் மூலம் கொண்டு வரப்பட்டு, போதைக்கு பயன்படுத்த வாங்கி வந்தது தெரிந்தது. இதுமட்டுமல்லாமல், ரயில்களில் கடத்தி வரும் கஞ்சா பொட்டலங்களையும் தொடர்ந்து கைது செய்து வருகின்றனர். இந்த ஒரு மாதத்தில் மட்டும், 30 கிலோ கஞ்சா பறிமுதல் செய்தனர். ஓட்டல்களில் சந்தேகப்படும் வகையில் அறை எடுத்து தங்குபவர்கள், ரயில்கள் என, அனைத்தும் போலீசார் கண்காணிப்பு வட்டத்தில் உள்ளது.
முக்கிய புள்ளிகள்
சிக்குவதில்லை
போலீசார் கைது நடவடிக்கையில், முக்கிய புள்ளிகள் சிக்குவதில்லை. விற்பனைக்கு கொடுத்து விடும் நபர்கள் குறித்தும், அதன் பின்னணியில் உள்ளவர்கள் குறித்து போலீசார் விசாரிக்க வேண்டும். பெங்களூர் போன்ற இடத்தில் வலி நிவாரண மாத்திரைகளை போதைக்கு வாங்கி வருவது, மெத்தபெட்டமைன், ஹெராயின் போன்றவற்றை சர்வ சாதாரணமாக கிடைக்கிறது. எனவே, தற்போது சிக்குபவர்களை கைது செய்வதை விட, அதன் பின்னணியில் வெளியூரில் இருப்பவர்களை போலீசார் கண்காணிக்க வேண்டும்.