/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாநகராட்சிக்கு கமிஷனர் நியமனம் செய்வீர்களா?
/
மாநகராட்சிக்கு கமிஷனர் நியமனம் செய்வீர்களா?
ADDED : நவ 05, 2024 11:47 PM
திருப்பூர் ; திருப்பூர் மாநகராட்சி கமிஷனர் பணியிடம் ஒரு மாதமாக காலியாக உள்ளது. இதனால், முடிவுற்ற வளாகங்கள் பயன்பாடுக்கு விடுவது உள்ளிட்ட பல்வேறு முக்கிய பணிகள் தாமதம் நிலவுகிறது.
திருப்பூர் மாநகராட்சி கமிஷனராக பவன்குமார், 2023 பிப்., மாதம் நியமிக்கப்பட்டார். கடந்த அக்., மாதம் அவர் துணை இயக்குனராக, பொதுத்துறை, சென்னைக்கு மாற்றம் செய்யப்பட்டார். அதன்பின் திருப்பூருக்கு புதிய கமிஷனர் இதுவரை நியமிக்கப்படவில்லை. மாநகராட்சி துணை கமிஷனர்கள் சுந்தரராஜன், சுல்தானா ஆகியோருக்கு கமிஷனர் பொறுப்பு பிரித்து வழங்கப்பட்டது.
கூடுதலாக கமிஷனர் பொறுப்பு வழங்கப்பட்டாலும், துணை கமிஷனரால் அனைத்து கோப்புகளிலும் நடவடிக்கை எடுக்க முடியவில்லை. அவருக்கு வழங்கப்பட்ட அதிகாரத்துக்கு உட்பட்ட கோப்புகளில் மட்டுமே நடவடிக்கை எடுக்கும் நிலை உள்ளது. இதனால், மாநகராட்சியில் பல்வேறு முக்கிய கோப்புகளில் தேக்க நிலையும், வளர்ச்சிப் பணிகள் முடிவுற்ற வளாகங்கள் பயன்பாட்டுக்கு திறப்பதில் முட்டுக்கட்டையும் நிலவுகிறது.
திருப்பூர் மாநகராட்சியைப் பொறுத்தவரை, சிறப்பு நிலை 'ஏ கிரேடு' மாநகராட்சி. தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகளில், சென்னை, மதுரை, கோவைக்கு அடுத்தபடியாக திருப்பூர் மற்றும் தாம்பரம் ஆகிய மாநகராட்சிகள் உள்ளன. மக்கள் தொகையில் 12 லட்சத்துக்கும் மேல் உள்ள மாநகராட்சி என்பதால், ஏறத்தாழ 14 லட்சம் மக்கள் தொகையை உள்ளடக்கிய திருப்பூர் மாநகராட்சி இந்த தரத்தில் அமைந்துள்ளது.
இவற்றுக்கு ஐ.ஏ.எஸ்., அந்தஸ்திலான அதிகாரிகள் கமிஷனர் பணியிடத்தில் நியமிக்கப்பட வேண்டும். தற்போது நகராட்சி நிர்வாக சட்டத்தில் ஏற்படுத்தியுள்ள திருத்தங்கள் அடிப்படையில், கூடுதல் இயக்குநர் அந்தஸ்திலான அலுவலர்களும் இப்பணியிடத்துக்கு நியமிக்கப்படலாம். இதனால், கமிஷனர் பணியிடத்துக்கு யாரை நியமிப்பது என்ற முடிவு எட்டப்படாமல் உள்ளது.
கடந்த ஒரு மாதமாக கமிஷனர் நியமிக்கப்படாமல் உள்ள நிலையில், மாநகராட்சி நிர்வாகத்தில் முக்கிய முடிவுகள் மேற்கொள்வதில் தாமதம் நிலவுகிறது. இது குறித்து, மாநகராட்சி வட்டாரத்தில் கேட்டபோது, 'இந்த வார இறுதிக்குள் ஐ.ஏ.எஸ்., அந்தஸ்திலான அதிகாரி கமிஷனராக நியமிக்கப்பட உள்ளார்,' என்றனர்.