sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 27, 2026 ,பங்குனி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

கிராமங்களில் பராமரிப்பு இல்லாமல்... மாயமாகும் சந்தை!: உள்ளாட்சி நிர்வாகத்தினர் அலட்சியம்

/

கிராமங்களில் பராமரிப்பு இல்லாமல்... மாயமாகும் சந்தை!: உள்ளாட்சி நிர்வாகத்தினர் அலட்சியம்

கிராமங்களில் பராமரிப்பு இல்லாமல்... மாயமாகும் சந்தை!: உள்ளாட்சி நிர்வாகத்தினர் அலட்சியம்

கிராமங்களில் பராமரிப்பு இல்லாமல்... மாயமாகும் சந்தை!: உள்ளாட்சி நிர்வாகத்தினர் அலட்சியம்


ADDED : பிப் 16, 2026 05:57 AM

Google News

ADDED : பிப் 16, 2026 05:57 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை: கிராமப்புற மக்கள் மற்றும் விவசாயிகள் அதிகம் பயன்படுத்தும், வாளவாடி உள்ளிட்ட வாரச்சந்தை வளாக கட்டமைப்புகள் நீண்ட காலமாக மேம்படுத்தப்படாமல், பயன்படுத்த முடியாத நிலைக்கு மாறி வருகின்றன; இது குறித்து திருப்பூர் மாவட்ட நிர்வாகத்துக்கு மக்கள் அனுப்பிய மனுக்கள் மீதும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது.

உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் வட்டாரங்களில், கிராம மக்கள், விவசாயிகள், சிறு வியாபாரிகளுக்கான முக்கிய வணிக மையமாக வாரச்சந்தைகள் இருந்தன. இதனால், நீண்ட காலத்துக்கு முன்பே இப்பகுதிகளில், சந்தைகளை உருவாக்கி பயன்படுத்தி வந்தனர்.

அவ்வகையில், உடுமலை ஒன்றியம், வாளவாடியில், 1942ல், வாரச்சந்தைக்கென தனியாக கட்டடம் கட்டப்பட்டது. காய்கறி மற்றும் இதர பொருட்களை சந்தைப்படுத்தும் வகையில், மேடை உள்ளிட்ட வசதிகளும் மேம்படுத்தப்பட்டன. தற்போது இந்த வாரச்சந்தை வளாகம் பரிதாப நிலையில் உள்ளது.

நீண்ட காலமாக பயன்பாட்டில் இருந்த ஓட்டுக்கட்டடம் புதுப்பிக்கப்படாமல் இடிந்து விழும் நிலையில் உள்ளது. அதன்பின்னர் கட்டப்பட்ட மேடை உள்ளிட்ட கட்டமைப்புகளும் பயன்படுத்த முடியாத நிலைக்கு மாறி வருகிறது.

வளாகம் முழுவதும் புதர் மண்டி காணப்படுகிறது. காலி மதுபாட்டில்கள் வளாகத்தின் பல இடங்களில் கிடக்கிறது. படிப்படியாக இந்த சந்தை வளாகம் பாழடைந்து முற்றிலுமாக பயன்படுத்த முடியாத நிலைக்கு சென்று வருகிறது.

மேம்படுத்த வேண்டும் உடுமலை ஒன்றிய நிர்வாகத்தினர், வாரச்சந்தையில் பழைய கட்டடத்தை மேம்படுத்தி, வளாகத்தை துாய்மைப்படுத்தினால், சுற்றுப்பகுதி கிராம மக்கள் பயன்பெறுவார்கள் என்ற கோரிக்கை கிடப்பில் போடப்பட்டுள்ளது.

இதே போல், குடிமங்கலம் ஒன்றியம் ராமச்சந்திராபுரத்தில், வாரச்சந்தை புதர் மண்டி பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. பூளவாடி கிராமத்தில் வாரச்சந்தைக்கென தனியாக கட்டடம் கட்டியும் அதை பயன்படுத்தாமல், திறந்தவெளியில் கடைகளை அமைத்து வியாபாரம் செய்கின்றனர்.

மடத்துக்குளத்தில், தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் வாரந்தோறும் அபாய முறையில் கடைகளை அமைத்து வியாபாரம் செய்கின்றனர். பழைய சந்தையில் கடைகள் போதிய பராமரிப்பு இல்லாமல் உள்ளது.

சந்தை வளாகங்களை முறையாக பராமரித்து மேம்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை, சம்பந்தப்பட்ட உள்ளாட்சி நிர்வாகத்தினரால் கண்டுகொள்ளப்படாமல் உள்ளது.

பராமரிக்காமல் விடப்பட்ட சந்தை வளாகங்கள் ஆக்கிரமிக்கப்படும் அவல நிலையும் ஏற்பட்டு வருகிறது.

சந்தை வளாகங்களை மேம்படுத்தி, வேளாண் விளைபொருட்கள் மட்டுமல்லாது, மகளிர் சுய உதவிக்குழுவினர் தயாரிப்பு பொருட்களையும் சந்தைப்படுத்த வாய்ப்புள்ளது.

இது குறித்து திருப்பூர் மாவட்ட நிர்வாகத்துக்கு பல முறை கோரிக்கை மனு அனுப்பியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என, சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இனியாவது உரிய ஆய்வு செய்து, கிராம வாரச்சந்தைகளை மீட்க வேண்டும் என்பதே அனைத்து தரப்பினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.






      Dinamalar
      Follow us