/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாசாணியம்மனுக்கு இன்று மிளகாய் அரைத்து வழிபாடு; இடுவாய் மண் வளம் காக்க பெண்கள் வேண்டுதல்

ADDED : நவ 23, 2025 06:52 AM
திருப்பூர்: மண் வளம் காக்க வேண்டி, இடுவாய் ஊராட்சியை சேர்ந்த பெண்கள், ஆனைமலை மாசாணியம்மனுக்கு மிளகாய் அரைத்து வழிபடும் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.
திருப்பூர் மாநகரில் சேகரமாகும் குப்பைகளை கொட்ட எதிர்ப்பு தெரிவித்து, திருப்பூர் ஒன்றியம், இடுவாய் ஊராட்சி மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
பல்வேறு கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தி வரும் இடுவாய் போராட்டக்குழுவினர், மண் வளம் காக்க வேண்டி, ஆனைமலை மாசாணியம்மனுக்கு மிளகாய் அரைத்து வழிபடும் போராட்டம் நடத்தவும் தயாராகிவிட்டனர்.
மாசாணியம்மனுக்கு, பொருள் திருட்டு போவது, கோர்ட் வழக்கு, சொத்து தகராறு உள்ளிட்ட பிரச்னையின் போது, தீர்வு கேட்டு மிளகாய் அரைத்து வழிபடுவது நடைமுறையில் உள்ளது.
அதன்படி, மாநகராட்சி குப்பையை எடுத்து வந்து இடுவாயில் கொட்டக்கூடாது; மண் வளம் காக்க வேண்டும் என வேண்டி, இன்று மிளகாய் அரைத்து வழிபடும் போராட்டம் நடத்த பெண்கள் களமிறங்கியுள்ளனர்.
இடுவாய் மண் வளம் காப்போம் போராட்ட குழு ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வரன் கூறுகையில், ''இடுவாயை தெய்வம் தான் காப்பாற்ற வேண்டுமென பெண்கள் கண்ணீர் வடிக்கின்றனர்.
குப்பை கொட்டினால், விவசாயத்தை ஆதாரமாக கொண்ட கிராமம் பாதிக்கும்; சுற்றுச்சூழல் மாசுபடும்.
எனவேதான், கொங்கு மக்களின் பாரம்பரிய நம்பிக்கையின் அடிப்படையில், மாசாணியம்மனுக்கு மிளகாய் அரைத்து வழிபட திட்டமிட்டுள்ளனர்.
'மண் வளம் காக்க வேண்டும்; மக்கள் நலன் காக்க வேண்டும்' என்று 23ம் தேதி(இன்று) காலை, 11:00 மணிக்கு மிளகாய் அரைத்து வழிபடும் போராட்டம் நடக்கிறது,'' என்றார்.