/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அரசு திட்டத்தில் வேலை கொடுக்கவில்லை; ஒன்றிய அலுவலகத்தில் பெண்கள் போராட்டம்
/
அரசு திட்டத்தில் வேலை கொடுக்கவில்லை; ஒன்றிய அலுவலகத்தில் பெண்கள் போராட்டம்
அரசு திட்டத்தில் வேலை கொடுக்கவில்லை; ஒன்றிய அலுவலகத்தில் பெண்கள் போராட்டம்
அரசு திட்டத்தில் வேலை கொடுக்கவில்லை; ஒன்றிய அலுவலகத்தில் பெண்கள் போராட்டம்
ADDED : செப் 04, 2025 10:49 PM

உடுமலை; தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில், வேலை நாட்கள் குறைக்கப்பட்டதைக்கண்டித்தும், வேலை வழங்க வலியுறுத்தியும், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் உடுமலை ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில், ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
திருப்பூர் மாவட்டம், உடுமலை ஒன்றியத்திலுள்ள, 38 ஊராட்சிகளில், ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில், பதிவு செய்து வேலை அட்டை பெற்றுள்ளனர்.
சில மாதங்களாக, பதிவு செய்துள்ள தொழிலாளர்களுக்கு வேலை நாட்கள் குறைக்கப்பட்டுள்ளது; இரு வாரங்களுக்கு ஒரு முறை ஒரு நாள் மட்டுமே வேலை வழங்கப்படுகிறது.
இதைக்கண்டித்து, நேற்று உடுமலை ஒன்றியத்துக்குட்பட்ட கிராமங்களைச்சேர்ந்த நுாற்றுக்கணக்கான பெண்கள் மற்றும் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர், உடுமலை ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு கொடுத்தனர்.
மனுவில் கூறியிருப்பதாவது: உடுமலை ஒன்றியத்துக்குட்பட்ட ஊராட்சிகளில், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள், தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில், பதிவு செய்துள்ளனர். இதில், 5 சதவீதம் பேருக்கு கூட வேலை வழங்கவில்லை.
பிறருக்கு வேலை நாட்களை குறைத்து, மாதத்துக்கு சில நாட்கள் மட்டும் வேலை வழங்குகின்றனர். நிர்ணயிக்கப்பட்ட சம்பளமும் வழங்குவதில்லை. கடந்தாண்டு 7 லட்சம் மனித வேலைநாட்கள் நிர்ணயிக்கப்பட்டது; இந்தாண்டு, 3.5 லட்சமாக நாட்கள் குறைக்கப்பட்டுள்ளது. இதனால், பல ஆயிரம் பேர் வேலைவாய்ப்பின்றி பாதித்துள்ளனர்.
வேலை அட்டை வைத்துள்ள அனைவருக்கும் வேலை கொடுக்க வேண்டும்; முழுமையான சம்பளம் வழங்க வேண்டும். விவசாய பணிகளோடு, திட்டத்தை இணைத்து, வேலை நாளை 200 நாட்களாகவும், சம்பளத்தை 600 ரூபாயாகவும் உயர்த்த வேண்டும்.
இவ்வாறு, மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
முன்னதாக உடுமலையில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய தலைவர் ரங்கராஜ் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் கனகராஜ் உள்ளிட்டோர் பேசினர். மடத்துக்குளத்தில் நடந்த போராட்டத்தில், ஒன்றிய செயலாளர் மாசாணம், பஞ்சலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நுாற்றுக்கணக்கான பெண்கள், ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில், ஈடுபட்டதால் பல மணி நேரம் பரபரப்பு நிலவியது.