/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
உரிமைத்தொகை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட பெண்கள்... படையெடுப்பு! சரமாரி கேள்விக்கணைகளால் அதிகாரிகள் பெரும் தவிப்பு
/
உரிமைத்தொகை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட பெண்கள்... படையெடுப்பு! சரமாரி கேள்விக்கணைகளால் அதிகாரிகள் பெரும் தவிப்பு
உரிமைத்தொகை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட பெண்கள்... படையெடுப்பு! சரமாரி கேள்விக்கணைகளால் அதிகாரிகள் பெரும் தவிப்பு
உரிமைத்தொகை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட பெண்கள்... படையெடுப்பு! சரமாரி கேள்விக்கணைகளால் அதிகாரிகள் பெரும் தவிப்பு
ADDED : ஜன 03, 2026 05:23 AM

திருப்பூர்: உரிமைத்தொகை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட பெண்கள், இதற்கான காரணம் கேட்டு, தாலுகா அலுவலகங்கள் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்களுக்கு படையெடுப்பதால், பதில் சொல்ல முடியாமல் அதிகாரிகள் திணறுகின்றனர்.
திருப்பூர் மாவட்டத்தை பொறுத்தவரை, முதல்கட்டமாக, 3 லட்சத்து 99 ஆயிரத்து 350 பெண்கள் பயனாளிகளாக சேர்க்கப்பட்டு, மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டுவருகிறது. தகுதியிருந்தும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட பெண்கள் பலர், உரிமைத்தொகைக்கு மீண்டும் விண்ணப்பிக்க வாய்ப்பு கிடைக்குமா என எதிர்பார்த்துக்கொண்டிருந்தனர்.
கார் உள்ளிட்ட நான்கு சக்கர வாகனங்கள் வைத்திருப்போர், ஓய்வூதியம் பெறும் குடும்பங்களில், ஓய்வூதியர் அல்லாத தகுதியுள்ள பெண்கள் உரிமைத்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என, விதிமுறைகள் தளர்த்தப்பட்டன.
கடந்த ஜூலை மாதம் முதல் நடத்தப்பட்ட 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம்களில், சிறப்பு கவுன்டர் அமைக்கப்பட்டு, பெண்களிடமிருந்து மகளிர் உரிமைத் தொகைக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு, பதிவு செய்யப்பட்டது. தேர்தல் நெருங்குவதால், அனைவருக்கும் உரிமைத்தொகை கிடைக்கும் என்கிற நம்பிக்கையில், வருமான வரி செலுத்துவோர், வரி செலுத்துவோரின் குடும்ப உறுப்பினராக உள்ள பெண்களும், முகாம் வாயிலாக உரிமைத்தொகைக்கு விண்ணப்பித்துள்ளனர்.
55,108 பேருக்கு பரிந்துரை? விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு, பதிவு செய்த பெண்களின் மொபைல்போன் எண்ணுக்கு, மெசேஜ் அனுப்பப்பட்டு வருகிறது.
சமீபத்தில், தாராபுரத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில், 'திருப்பூர் மாவட்டத்தில், இரண்டாம் கட்டத்தில் 55 ஆயிரத்து 108 பெண்கள், உரிமைத்தொகை பெற பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்' என, அமைச்சர் சாமிநாதன் பேசியிருந்தார்.
திணறும் அதிகாரிகள் இந்நிலையில், விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டோர், அந்தந்த தாலுகா அலுவலகங்கள், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்களுக்கு செல்லத்துவங்கிவிட்டனர்.
திருப்பூர் ஆர்.டி.ஓ., அலுவலகத்துக்கு, விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதற்கான காரணம் கேட்டு தினமும் ஏராளமான பெண்கள் வரத்துவங்கியுள்ளனர். குறிப்பாக, வருமான வரி தாக்கல் செய்யும் குடும்பத்தை சேர்ந்தவர்களும், 2023ல் விண்ணப்பித்து உரிமைத்தொகை கிடைக்காதவர்களும், விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட காரணம் கேட்டு கேள்விக்கணைகளை சரமாரியாக தொடுப்பதால் பதில் சொல்ல முடியாமல் அலுவலர்கள் திணறுகின்றனர்.

