/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மகளிர் மனதில் உறுதி வலுப்பட்டது; தொழில்முனைவோர் கனவு வசப்பட்டது
/
மகளிர் மனதில் உறுதி வலுப்பட்டது; தொழில்முனைவோர் கனவு வசப்பட்டது
மகளிர் மனதில் உறுதி வலுப்பட்டது; தொழில்முனைவோர் கனவு வசப்பட்டது
மகளிர் மனதில் உறுதி வலுப்பட்டது; தொழில்முனைவோர் கனவு வசப்பட்டது
ADDED : ஆக 25, 2025 10:27 PM

'பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்' என பெண்கள் எழுச்சி பெற முழங்கினார் மகாகவி பாரதி. இது நிகழ்காலத்தில் நிஜமாகியுள்ளது. பல துறைகளிலும், பதவிகளிலும் பெண்கள் திறம்பட பணிபுரிகின்றனர். நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வை, நிலத்தில் எதற்கும் அஞ்சாத ஞானச்செருக்கு; இவையே பாரதி கண்ட புதுமைப்பெண்ணின் அடையாளம். தொழில் நகரான திருப்பூரில், தொழில்முனைவோராக பெண்கள் வெற்றிநடை போடுகின்றனர். உலகப் பெண்கள் சமத்துவன தினமான (ஆக., 26) தொழில்முனைவோர் பெண்மணியர் சிலரது கருத்துகள், நம் வாசகர்களுக்காக...
குடும்பத்தில் 'கோட்டை' விடக்கூடாது
மேனகா, சாய ஆலை உரிமையாளர், முருகம்பாளையம்:
பனியன் நிறுவனத்தை கணவர் பார்த்துக்கொள்வார்; சாய ஆலையை நான் கவனித்து வந்தேன். தற்போது, பனியன் நிறுவனம் இல்லை; சாய ஆலையை கணவர் கவனிக்கிறார்; நிர்வாக பணியை நான் செய்து வருகிறேன். தற்போது, மகன் பிளஸ் 1 படிப்பதால், இரண்டு ஆண்டுகளுக்கு மகன் படிப்பில், முழு கவனம் செலுத்தி வருகிறேன். முன்பு இருந்ததை காட்டிலும், பெண்கள் தொழில்முனைவோராவது அதிகரித்து வருகிறது. இருப்பினும், பெண்கள் தொழிலில் மட்டும் கவனம் செலுத்தி, குடும்பம் என்ற அமைப்பில் கோட்டை விட்டுவிடக்கூடாது.
மகன், கல்லுாரி செல்ல துவங்கியதும், மீண்டும் எனது தொழிலை துவக்கி, திறம்பட நடத்துவேன். இடைப்பட்ட இக்காலத்தை, அதற்கான பயிற்சி காலமாக எடுத்துக்கொள்கிறேன்.
சுயதொழிலே எதிர்கால வளம்
கவிதா, பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனையாளர், எம்.ஜி., புதுார்:
திருமணத்துக்கு பிறகு, கணவருடன் இணைந்து மொபைல் போன் கடை நடத்தி வந்தேன்; கணவர், மார்க்கெட்டிங் தொழிலுக்கு மாறிவிட்டதால், தனியாக கடை நடத்தி வந்தேன். பிறகு, சில ஆண்டுகள் கருமத்தம்பட்டியில், 'ஆர்கானிக்' விவசாய பணிகளை முழு நேரமும் கவனிக்க துவங்கினேன்.
திடீரென, நண்பர்கள் மூலம், பிளாஸ்டிக் பொருட்கள் விற்கும் கடை விலைக்கு வந்தது; அப்படியே ஏற்று நடத்த முடிவு செய்து, தனியாக நடத்தி வருகிறேன்; வழக்கம் போல் விவசாய பணியும் நடந்து வருகிறது. கணவர் வேலைக்கு செல்லட்டும், வீட்டை கவனிக்கலாம் என்று இருந்து விடக்கூடாது.
குழந்தைகள் பள்ளி செல்ல துவங்கியதும், பெண்கள் சிறிய அளவிலாவது தொழிலை செய்ய வேண்டும். படித்தவர்கள், வேலைக்கு செல்ல விரும்பலாம்; ஆனால், சுயமான தொழில் துவங்குவதே, எதிர்காலத்தை சிறப்பாக வைக்கும்.
நிதி கையாளும் சுதந்திரம் தேவை
சுவிதா சுபாஷினி, சலுான் பார்லர் உரிமையாளர், கருவம்பாளையம்:
திருப்பூர் என்றாலே டெக்ஸ்டைல்தான்; என் மகனை 'ேஹர்கட்' செய்ய அழைத்து செல்வேன்; அப்போது, பல்வேறு சிரமங்கள் இருந்து வந்தது. குழந்தைகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தும் வகையில், 'சலுான் பார்லர்' துவங்கலாம் என்று முடிவு செய்தேன். குழந்தைகள் விளையாட வசதி செய்துள்ளோம். கணவர் ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வருகிறார். அவருக்கு உதவியாக இருந்தேன். பிறகு, தனியார் பள்ளி ஆசிரியராக பணியாற்றினேன். தற்போது, குழந்தைகள், ஆண்கள், பெண்களுக்காக இரண்டு இடங்களில் 'சலுான் பார்லர்' நடத்தி வருகிறேன்.
பனியன், ஆடைகள் என்பது பரவலாக நடக்கும் தொழில்; ஏதாவது புதிதாக செய்ய வேண்டும் என்று நினைத்தேன். என் குடும்பத்தினர் ஊக்குவிப்பாலும், உறுதுணையாலும் முன்னேற முடிந்தது. பெண்களுக்கு, தொழில் துவங்க தயக்கம் இருக்கத்தான் செய்யும். பெண்களுக்கு தனியாக நிதி கையாளும் சுதந்திரம் இருக்க வேண்டும். குடும்பம் எவ்வளவுதான் வசதியாக இருந்தாலும், பெண்கள் சுயமாக நிதி கையாளும் அளவுக்கு, தொழில்முனைவோராக இருப்பது, தன்னம்பிக்கையும், தைரியத்தையும் வளர்க்கும். தொழிலில் பெண்களின் பங்களிப்பு, 40 சதவீதம் மட்டுமே; குடும்பத்தினர் ஊக்குவிப்பு இருந்தால், பெண்கள் தொழில்முனைவோராக முன்வர வேண்டும். அப்போதுதான், நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சியும் சமன்படுத்தப்பட்டதாக இருக்கும்.
நிர்வாகத்துக்கு பெண்கள் ஏற்றவர்கள்
சக்தி மிருதுளா, செயலாளர், தனியார் பள்ளி, கருமாரம்பாளையம்:
என் பெற்றோர் தாளாளராகவும், செயலாளராகவும் இருந்து பள்ளியை நடத்தி வந்தனர். தந்தை மறைவுக்கு பிறகு, பள்ளியின் செயலாளராக நான் பொறுப்பேற்று, நடத்தி வருகிறேன். பள்ளி நிர்வாகம் செய்வதில், ஆண், பெண் என்ற வேறுபாடு இல்லை.
கல்வித்துறையில், பல ஆண்டுகளாகவே சரியான பாலின சமன்பாடு இருக்கிறது. பள்ளியை வழிநடத்திட, சரியான வழிகாட்டி ஆலோசகர் இருந்தால் போதும். ஏராளமான பெண்கள் ஆசிரியராக இருப்பதால், பெண்கள் பள்ளி நிர்வாகம் செய்ய முடியும். பெண் குழந்தைகள், கல்வியை கொண்டுw சமுதாய பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டும் என்று தான், கல்வி கற்பித்து வருகிறோம்.
குடும்பத்தினர் ஒத்துழைப்பு அவசியம்
அபிராமி, கலை மற்றும் கைவினை பொருட்கள் விற்பனையாளர், காந்தி நகர்:
பெண்கள் சுயமாக தொழில் துவங்கவும், தொழில் பங்குதாரராக முன்னேறவும், கணவர் உட்பட, குடும்பத்தினரின் ஊக்குவிப்பு மிகவும் அவசியம். அனைவரின் ஒத்துழைப்பு இருந்தால், பெண்கள் எந்த துறையாக இருந்தாலும் முன்னேற முடியும். குழந்தைகள் பெரிவர்களாக வளர்ந்த பிறகு, கடந்த, 15 ஆண்டுகளுக்கு முன், சொந்தமாக தொழில் துவங்கலாம் என்று ஆலோசித்தேன்.
என் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரின் வழிகாட்டுதலுடன், கலைநயம் மிகுந்த கைவினை பொருட்கள் விற்பனையை துவக்கினேன். 'டிரென்டிங்' ஆக, சீர்தட்டு தயார்செய்வது, தங்கம் கலந்த குத்துவிளக்கு, சுவாமி சிலைகள், பூஜை பொருட்கள் விற்கிறேன். 'வாட்ஸ் ஆப்', 'யூடியூப்' வந்த பிறகு, எங்களது மார்க்கெட்டிங் எளிதாகிவிட்டது. உலகில் வாய்ப்புகள் ஏராளமாக இருக்கின்றன; ஆண்கள் மட்டும் ஆதிக்கம் செலுத்த வேண்டியதில்லை. பெண்களும், தங்களுக்கு விரும்பிய தொழில்களை செய்ய வேண்டும்; சுதந்திரமான நிதி நிர்வாகம் செய்தால், மனத் திடம் பல மடங்கு அதிகரிக்கும்.

