ADDED : ஜன 31, 2026 04:38 AM
அனுப்பர்பாளையம்: திருப்பூர் மாநகராட்சி, 25வது வார்டு ரங்கநாதபுரம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் அப்பகுதியை சேர்ந்த, 550 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளி கழிப்பறை அருகே இருந்த மரத்தில் அதிக அளவில் கம்பளி பூச்சி இருந்துள்ளது.
நேற்று காலை மாணவ, மாணவிகள் கழிப்பறை செல்லும்போது, அவர்கள் மீது கம்பளி பூச்சி விழுந்துள்ளது. இதனால், நுாறு மாணவர்களுக்கு உடம்பில் முழுவதும் கடுமையான அரிப்பு ஏற்பட்டுள்ளது.
தகவல் அறிந்து வார்டு கவுன்சிலர் தங்கராஜ், 15 வேலம்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக வந்த மருத்துவ குழுவினர் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு மருந்து, மாத்திரை வழங்கினர்.
மாணவர்கள் இயல்பு நிலைக்கு திரும்பினர். பள்ளிக்கு வந்த மாநகராட்சி சுகாதார அலுவலர்கள் கம்பளி பூச்சியை அளித்து, மரத்தை வெட்டி பள்ளியில் இருந்து அப்புறப் படுத்தினர்.

